ஏழ்மையும் எளிமையும் சீடத்துவத்தின் இரு பாதங்கள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
5 பிப்ரவரி 2026,
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – வியாழன்
1 அரசர் 2: 1-4, 10-12
மாற்கு 6: 7-13
ஏழ்மையும் எளிமையும் சீடத்துவத்தின் இரு பாதங்கள்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், தாவீது தனது மகன் சாலமோனை தலைமைத்துவத்திற்கு தயார்படுத்துகிறார்: தாவீது தனது வாழ்க்கை முடிவடைகிறது என்பதை ஒப்புக்கொள்வதோடு, சாலமோனிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்கிறார்.
அவர் சாலமோனை வலிமையாக இருக்கவும், தைரியத்துடன் செயல்படவும் வலியுறுத்துகிறார். தொடர்ந்து, மோசேயின் திருச்சட்டத்தில் கண்டுள்ளபடி, கடவுளின் கட்டளைகள், நியமங்கள் மற்றும் ஆணைகளை உண்மையாகக் கடைப்பிடித்து, ஆண்டவரின் வழிகளைப் பின்பற்றும்படி தாவீது சாலமோனுக்கு அறிவுறுத்துகிறார். இந்த உண்மையுள்ள கீழ்ப்படிதல், சாலொமோன் செய்யும் எல்லாவற்றிலும், அவர் செல்லும் இடமெல்லாம் அவரது எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக அமையும் என்கிறார்.
இங்கே, தாவீது சாலமோனுக்கு கடவுளின் வாக்குறுதியை நினைவூட்டுகிறார். அவருடைய வழிமரபினர் அவர்களது முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளுக்கு உண்மையாக இருந்தால், இஸ்ரயேலின் அரியணை தொடரும் என்ற உறுதிமொழியைத் முன்வைக்கிறார்.
நிறைவாக, தாவீதின் அமைதியான மரணம் மற்றும் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டதையும், சாலமோனின் அரசுரிமை உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு, அவரது அரசு மிகவும் வலிமையடைந்ததையும் குறிப்பிடுகிறது.
நற்செய்தி.
இந்தப் பகுதியில், இயேசு பன்னிரண்டு திருத்தூதர்களையும் குறிப்பிட்ட அறிவுறுத்தல்களுடன் பணிக்கு அனுப்புவதை வாசிக்கிறோம். அவர்களுக்கு அசுத்த ஆவிகள் மீது அதிகாரம் அளிக்கிறார்.
மேலும், திருத்தூதர்கள் மிகவும் எளிமையாகப் பயணம் செய்ய அறிவுறுத்துகிறார். அதற்கு, கூடுதல் உணவு, பணம் அல்லது பொருள்கள் தேவையில்லை என்றும், கடவுளின் அருள் மற்றும் மற்றவர்களின் விருந்தோம்பல் ஆகியவற்றை நம்பி பயணிக்க ஆசீ வழங்குகிறார்,
மக்கள் அவர்களை வரவேற்கவில்லை அல்லது கேட்கவில்லை என்றால், அந்த இடத்திற்கு எதிரான சாட்சியமாக அவர்கள் தங்கள் கால்களிலிருந்து தூசியை உதறிவிடுமாறு கட்டளை பிறப்பிக்கிறார்.
இறுதியாக, திருத்தூதர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடித்து, , பல பேய்களை விரட்டுகிறார்கள், நோயாளிகளை குணப்படுத்துகிறார்கள் – இவை , கடவுளுடைய அரசு அவர்களின் ஊழியத்தின் மூலம் உலகிற்குள் நுழைவதற்கான அறிகுறிகளாக அமைந்தது.
சிந்தனைக்கு.
இந்த நற்செய்தி கிறிஸ்தவ சீடத்துவத்தின் மறைபரப்புத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, இயேசு தம் சீடர்களை அதிகாரத்துடன் அனுப்புகிறார். இங்கே, எளிமைக்கான அனுப்புதலை காண்கிறோம். ஆம், கிறிஸ்தவர்களுக்கு திருஅவையின் பணி உலகப் பாதுகாப்பில் அல்ல, மாறாக கடவுள் மீதான நம்பிக்கையிலும் மனந்திரும்புதலையும் குணப்படுத்துதலையும் அறிவிப்பதிலும் உள்ளது என்பதை இயேசு கற்பிக்கிறார்.
அவர்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்களின் கால்களிலிருந்து தூசியை உதறிவிடுங்கள் என்ற அறிவுறுத்தல், நற்செய்தி செய்தியை ஏற்கவோ நிராகரிக்கவோ தேர்ந்தெடுப்பதன் விளைவைப் பிரதிபலிக்கிறது. நற்செய்தியயை ஏற்பவர்கள் வாழ்வடைவர்.
முதல் வாசகத்தில் தாவீது அரசர் தன் மகன் சாலமோனை அடுத்த அர்சராக நியமிக்கும் வேளை நல்லாட்சிக்கான அறிவுறுத்தலை முன்வைத்தார். சாலமோன் எவ்வாறு மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே நல்ல தலைவாரகச் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவ்வாறே, இயேசுவும் தம் சீடர்களுக்கு எளிமை வாழ்வையும் பணியின் நம்பகத்தன்மையையும் எடுத்துரைக்கிறார்.
சீடத்துவப் பணி என்பது நம் விருப்பத்தைச் சார்ந்ததல்ல. அதில் கடவுளின் திருவுளம் அடங்கியுள்ளது. இயேசுவால் அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் கடவுளின் வல்லமை அவர்கள் மூலம் செயல்படுவதையும், வாழ்க்கையை மாற்றுவதையும் கண்டார்கள் அதை அனுபவித்தார்கள். அவர்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களின் புதிய அதிகாரத்துடன், அவர்களின் கட்டளைப்படி அற்புதங்கள் நடப்பதையும், பேய்கள் அவர்களின் முன்னிலையில் தப்பி ஓடுவதையும் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் அநீதியான செயல்களைத் தடுக்க கடவுளின் அதிகாரம் நம் ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சீடத்துவம் ஆடம்பரத்திலும் அமோகத் தன்மையிலும் அடங்குவதல்ல. எளிமையின் எழில் அதில் பிரதிபலிக்க வேண்டும். சில நாடுகளில் அருள்பணியாளர்கள் கூட விலை உயர்ந்த வாகனங்களைத் தங்கள் பணி வாழ்வுக்குப் பயன்படுத்துகிறார்கள். நோயுற்றால் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். இன்றைய நற்செய்தியோடு ஒப்பிடுகையில் இவர்களின் இந்த எதிர்பார்ப்பு சரியா? என்ற கேள்வி மிஞ்சுகிறது.
ஆன்மீகத்திலும், ஏழ்மையும் எளிமையும் கொண்ட மக்களே உயர்வாகக் கருதப்படுவார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
இறைவேண்டல்.
என் மாட்சிமிகு ஆண்டவரே, நீர் பன்னிருவரையும் அழைத்து, அதிகாரத்துடன் தீமையை அகற்றவும் உமது திருப்பெயரில் அவர்களை அனுப்பினீர். என்னையும் உமது அருளின் ஒரு பெரிய கருவியாகவும் நற்செய்தி பணியாளனாகவும் மாற்ற உம்மை இறைஞ்சி வேண்டுகிறேன். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
+6 0122285452