அன்னையை போல தூய வாழ்வு வாழ்வோமா! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

கன்னிமரியாளின் அமலஉற்பவம் பெருவிழா மறையுரை 08.12.2025
மு.வா: தொநூ: 3: 9-15,20
ப.பா: திபா 98: 1. 2-3. 3-4
இ.வா: எபே: 1: 3-6, 11-12
ந.வா: லூக்: 1: 26-38

 அன்னையை போல தூய வாழ்வு வாழ்வோமா! 

இன்று நாம் அன்னையின் அமல உற்பவ விழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவின் மையக்கருத்து "தூய்மை ". மாசில்லாத அப்பழுக்கற்ற ஒரு பாத்திரம் தான் தன் மகனைத் தாங்க வேண்டும் என்ற திண்ணமான எண்ணத்தை நிறைவேற்றினார் தந்தை கடவுள் அன்னை மரியா மூலம். 

விண்ணகத்தில் வானதூதர்களின் துதிகீதம் "தூயவர் தூயவர் " என்தாகும். தூய்மையின் சிகரம் தந்தை கடவுளே. அவரைப்போல அவர் பிள்ளைகள் நாமும் இருக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். இதை வாழ்வாக்கியவர் அன்னை மரியா என்றால் அது மிகையல்ல. கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு பிறப்பாலும் தன் வாழ்வாலும் தூய வாழ்வு வாழ்ந்தவர் நம் அன்னை மரியா. தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் என்று இயேசு லைப்பொழிவிலே கூறியிருக்கிறார் அன்றோ. அவ்வார்த்தை அன்னை மரியாவுக்கு பொருந்தும். எனென்றால் அவரின் தூய வாழ்வு இறைமகனை கருவிலே தாங்கச் செய்தது. இத்தூய உள்ளம் இல்லாததாலேயே பலர் இயேசுவோடு கூட இருந்தும் அவரை கடவுள் என்று கண்டு கொள்ள முடியவில்லை. 

அன்னையின் இவ்விழா நமக்கு தரும் அழைப்பென்ன? தாயைப்போல பிள்ளை என்ற வாக்கின் படி வாழ்வதே. அதாவது மாசு படிந்த கலப்படம் நிறைந்த உலகத்திலே நாம் வாழும் போதும் தூய வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும். அப்படியே நாம் நல் பாவ பலவீனங்களில் வீழ்ந்தாலும் நம்மை இறைவார்த்தையால் இறைவேண்டலால் அருள் அடையாளங்களால் தூய்மை படுத்தி கொண்டே இருக்க வேண்டும். நமது எண்ணங்கள் சொற்கள் செயல்கள் தூய இறைவனின் அருளால் தூய்மையாக மாற வேண்டும். இவற்றை உணர்ந்தவர்களாய் அன்னை மரியின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம். 

 இறைவேண்டல் 
தூய இறைவா! அமல உற்பவியாம் அன்னையின் பரிந்துரையை ஏற்று தூய வாழ்வு வாழ உதவி புரியும். ஆமென்