திரும்புவோம், நம்மைத் திருத்துவோம், வாழ்வை சீரமைப்போம்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு  மறையுரை 07.12.2025
மு.வா: எசா: 11: 1-10
ப.பா: திபா 72: 1-2. 7-8. 12-13. 17
இ.வா: உரோ: 15: 4-9
ந.வா: மத்: 3: 1-12

 திரும்புவோம், நம்மைத் திருத்துவோம், வாழ்வை சீரமைப்போம்! 

திருவருகை காலத்தின் இரண்டாம்ஞாயிறுக்குள் நுழைகிறோம். இந்நாளில் திருமுழுக்கு யோவானின் மனமாற்றத்திற்கான அழைப்பை நாம் சற்று ஆழமாக சிந்திக்க அழைக்கப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகையை அறிவிக்க முன்னோடியாக அனுப்பப்பட்டவர்.  அவர் கடவுளுக்குள் வளர்ந்தவர். அவர் வார்த்தைகளை ஆணித்தரமாக துணிச்சலாக பயமின்றி பாரபட்சமின்றி உரக்க கூறியவர். அவரின் அறைகூவல் மனமாற்றத்தை பற்றியே இருந்தது. 

திருமுழுக்கு யோவான் மனம் திரும்பவும்  நம்மை நாமே திருத்தவும் அத்தோடு நம் வாழ்வை  சீரமைக்கவும் நம்மை அழைக்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் இது .திருப்பாடல் 51 இல் நாம் வாசிக்கின்றோம் நொறுங்குண்ட இதயத்தை இறைவா நீர் அவமதிப்பதில்லை என்று. இந்த நொறுங்கிய நெஞ்சம் என்பது திருந்திய நெஞ்சமே. மாற்றம் கண்ட இதயத்தில் இயேசு பிறப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

எவற்றிலெல்லாம் மாற்றம் வேண்டும்? எவ்வகை திருத்தம் நம் வாழ்வில் வேண்டும்? என்று நம்மையே ஆய்வு செய்தால் அது நீண்டுகொண்டே போகிறது ....
1.அன்றாட வாழ்விலே நாம் மூழ்கிக் கிடக்கின்ற பல பழக்க வழக்கங்கள்
2.தீயது என்று அறியாமலேயே நாம் செய்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற செயல்கள் 3.நிலையானவற்றை விடுத்து தற்காலிக இன்பங்களை நாடுகின்ற மனம்
 4.இறைவனை மறந்து உலகத்திற்கு கொடுக்கின்ற இடம்
5.நான் எனது என்ற சுயநல  எண்ணம்
6.சிற்றின்ப ஆசைகள்
7.கடினம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற மனநிலை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 

இவ்வாறு நம் மனதிலே வேரூன்றி காணக்கிடக்கின்ற இவற்றையெல்லாம் இறைவன் பால் கொண்டுள்ள அன்பு மற்றும் இறைவார்த்தையின் படி வாழும் வாழ்வு என்ற கோடரியால் வெட்டினால் நம் வாழ்வு நிச்சயம் சீர்திருத்தப்படும். சீரமைக்கப்படும். இறைவன் நம்மிலே எழுவார். 

ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யுங்கள் என்ற முழக்கம் அன்று வாழ்ந்த இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமல்ல புதிய இஸ்ரயேலராய்  ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கும் திருமூலுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் முழங்கப்படுகின்ற முழக்கம். என் முழக்கத்தைக் கேட்டு இறைவன் பக்கம் திரும்பி நம் சொல் செயல் சிந்தனைகளை திருத்தி நம் வாழ்வை சீரமைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதை உணர்ந்து செயல்படுவோம். மெசியாவின் வருகைக்காக நம்மை ஆர்வமாய் ஆயத்தப்படுத்துவோம்.

மேலும் இந்த இரண்டாம் வாரம் அமைதியை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. உண்மையான மனமாற்றம் நம் வாழ்வை மாற்றும். மனநலம் தரும். உறவுகள் வலுப்பெறும். நம்பிக்கையை அதிகரிக்கும். இறை உடன் இருப்பை உணரச் செய்யும். இதுதான் நிறைவான அமைதி. மெசியாவின் மற்றொரு பெயர் அமைதியின் அரசர். இந்த அமைதிய அரசரிடம் உண்மையான மனமாற்றத்திற்கான அருளை வேண்டுவோம். சிதறுந்த உறவுகளை சீர்படுத்துவோம். குடும்பங்களிலும் சமூகத்திலும் அமைதிக்காக ஜெபிப்போம். அமைதியின் அரசர் நம்மை ஆள்வாராக .

 இறைவேண்டல் 
அமைதியின் அரசரே இறைவா திருமுழுக்கு யோவான் முழங்கிய வார்த்தைகள் என்னாளும் எம் உள்ளே ஒலிக்கட்டும். நாங்கள் மனம் திரும்பியவர்களாய் எங்களைத் திருத்தியவர்களாய் வாழ்வைச் சீரமைக்க வரம் தாரும் ஆமென்.