இரக்கத்தின் ஊற்று நம் கடவுள் | ஆர்.கே. சாமி | VeritasTamil
இன்றைய இறை உணவு
27 சனவரி 2024, பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனி
2 சாமுவேல் 12: 1-7a, 10b-17
மாற்கு 4: 35-41
முதல் வாசகம்
புனித பவுலின் மனமாற்றம் விழா இடையில் கொண்டாடப்பட்டதால், தாவீது கோவில் கட்ட ஆசைப்பட்டது, உரியாவின் மனைவி பத்சேபாவுடன் அவர் செய்த பாவம் மற்றும் அவள் கணவன் உரியாவைத் தாவீது சதியால் கொன்றது பற்றிய வாசகப் பகுதியை நாம் கடந்துபோக நேர்ந்தது.
இன்றைய முதல் வாசகம் தாவீதின் பாவத்தை விவரிப்பதாக அமைந்துள்ளது. அவரது பாவச் செயலை உணர்துவதற்காகக் கடவுள் கூறியபடி இறைவாக்கினர் நாத்தான் ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார்.
அந்த உவமையில் பல ஆடு, மாடுகளுக்குச் சொந்தக்காரரான செல்வந்தன், ஓர் ஏழை மிகவும் பாசமாக வளர்த்த ஆட்டுக்குடியைக் களவாடி, சமைத்து வீட்டிற்கு வந்தவருக்கு விருந்தளித்தார். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய அவனது ஆடு மாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியைக் கொன்று அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான் என்றதும், தாவீது உடனே அந்த செல்வந்தன் மேல் சீற்றம் கொண்டு, “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். இரக்கமின்றி அவன் அவ்வாறு செய்ததால், அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறவே, பதிலுக்கு நாத்தான் தாவீதிடம் “நீயே அம்மனிதன்’ என்று பதில் கூறினார்.
ஆயினும்கூட, தாவீதுதான் பாவி என்பதை நாத்தான் சுட்டிக்காட்டும் வரை தாவிது தனது சொந்த பாவத்தை உணரவில்லை. தாவீது தனது பாவத்தின் தீமையை எதிர்கொண்டபோது, மனந்திரும்பி கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறார், மனமாறுகிறார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடக்கவே, தாவீது நோன்பிருந்து கடவுளிடம் மன்றாடுகிறார்,
நற்செய்தி
நற்செய்தியில், அயரா பணிக்குப்பின் இயேசுவும் அவருடைய சீடர்களும் கலிலேயா கடலைக் கடக்க படகில் ஏறுகிறார்கள். இயேசு களைப்புற்று இருந்திருக்க வேண்டும். அவர் படகில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் வேளை, படகு பெரும் புயலை எதிர்கொள்கிறது.
சீடர்கள் பயந்து, ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள்.
இயேசு, எழுந்து காற்றையும் அலைகளையும் அமைதிப்படுத்துகிறார், பின்னர் அவர்களின் நம்பிக்கையின்மைக்காக அவர் ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று வியப்புக்குள்ளானார்கள்,
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், ஓர் உவமை வழியாக தாவீது தன் குற்றதைத் ஏற்கவும் வருந்தவும் நாத்தான் உதவினார். ஆணி அறைந்ததுபோல், தாவீது உள்ளத்தில் அவரது பாவச் செயலை ஆழமாகப் பதிய வைத்தார் நாத்தான். விவிலியத்தின் சக்தி வாய்ந்த உவமைகளில் நாத்தான் தாவீதுக்குச் சொன்ன உவமையும் ஒன்று. இங்கே, உரியாவைக் கொலை செய்துவிட்டு, தனக்கு நீதித் தேடிக்கொண்ட தாவீதால், கடவுளின் முன்னால் தப்பிக்க முடியவில்லை.
இறுதியல் ஒரு கொலைக்காரனாகிய தாவீது, தனது குழந்தை இறப்பதைத் தடுக்க மன்றாடுகிறார்.
சீடர்களும் புயலுக்கும் உயர எழுந்த அலைகளுக்கும் அஞ்சி இறக்கப்போகிறோம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற அச்சத்திற்கு ஆளானார்கள். இயேசு இரக்கப்பட்டு அவர்களைத் தேற்றுகிறார்.
நாம் பல சமயங்களில் ஒரு குற்றத்தை மறைக்க, பல குறுக்கு வழிகளைத் தேடுகிறோம். நம் சிந்தனையைத் தவறான பாதையில் திசைத்திருப்புகிறோம். அதனால் உண்மையை உணரத் தவறுகிறோம். நமது கவனம் கடவுள் நம்பிக்கையில் வேரூன்றி இருந்தால் மட்டுமே தாவீதைப் போல, படகில் அலறிய சீடர்களைப் போல நிலைத்தடுமாற மாட்டோம்.
வாழ்க்கைச் சவால்கள் மேலெழுந்து, கொந்தளிப்பாக வாழ்க்கைப் படகை உலுக்கும் போது, நம்பிக்கை இழக்கின்றோம். தாவீதுக்கு வாழ்வுக் கொடுத்த அதே கடவுள்தான் நம்மோடும் உள்ளார். தாவீது, நான் பாவமே செய்ய இல்லை என்று தன்னை நியாயப்படுத்தாமல் தன் பாவத்தை உணர்த்திய கடவுளிடம் மன்னிப்புக் கேட்டது போல, கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பை அமைத்திப்படுத்திய இயேசுவை புரிந்துகொண்ட சீடர்களைப்போல நாம் ஆண்டவரை எந்நேரமும் பற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் இறைவன். அவரே நமக்கு எல்லாமானவர்.
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஊற்றாகிய இயேசுவே, எனக்கு அரணும் கேடயமுமானவரே, எனது நம்பிக்கையில் நான் தளர்ந்திடாமல், உமது பாதுகாப்பில் சிறந்து விளங்கிட வரமருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452