உண்மையான நோன்பிருக்க வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | VeritasTamil

தவக்காலம் - திருநீற்று வெள்ளி
I: எசா: 58: 1-9
II :திபா 51: 1-2. 3-4. 16-17
III : மத்: 9: 14-15

தவக்காலம் கடவுளின் அருளைப் பெற்று கொள்ள கொடுக்கப்பட்ட உன்னதமான காலம். இந்த காலம் ஜெபம், தவம், தானம் போன்ற நற்பண்புகளில் சிறந்து விளங்கி கடவுளின் அருளையும் இரக்கத்தையும் சுவைக்கக் கூடிய காலம். இந்த காலத்தில் நோன்பு இருந்து இறைவேண்டலில் நிலைத்திருந்து பிறருக்கு உதவி செய்யும் மனநிலையை வளர்த்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பல நேரங்களில் நோன்பு இருப்பது என்பது உணவை உண்ணாமல் தவிர்ப்பது என்று  மட்டும் நினைக்கிறோம். ஆனால் உண்மையான நோன்பு என்பது நம்முடைய வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, கடவுளுடைய அன்பையும் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெறுவதற்கு தடையாயுள்ள, குற்றங்குறைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுபட முயல்வதே. அதேபோல நம்மிடம் இருக்கக்கூடிய தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெற முற்றிலும் முயற்சி செய்ய வேண்டும். அதுதான் கடவுளுடைய அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற  வடிகாலாய் இருக்க முடியும்.

நம்முடைய திருஅவையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் "உண்மையான நோன்பு எது"? என்பதைப் பற்றி நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றை சற்று தியானிப்போம்.

நாம் நோன்பு இருக்க விரும்பினால் காயப்படுத்தும் சொற்களிலிருந்து நோன்பிருந்து கனிவான வார்த்தைகளையே பேச வேண்டும்.  சோகமான நிலையிலிருந்து நோன்பிருந்து வாழ்வை நன்றி உணர்வால் நிரப்ப வேண்டும். கோபத்திலிருந்து நோன்பிருந்து பொறுமையாய் வாழ முயற்சி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களிலிருந்து நோன்பிருந்து எதிர்நோக்கால் வாழ்வை நிரப்ப வேண்டும். கவலைகளிலிருந்து நோன்பிருந்து இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும். புலம்புவதிலிருந்து நோன்பிருந்து எளிமையை தியானிக்க வேண்டும்.  மன அழுத்தத்திலிருந்து நோன்பிருந்து இறைவேண்டலில் ஈடுபடவேண்டும். மனக்கசப்பு தன்மையிலிருந்து நோன்பு இருந்து மகிழ்வால் மனதை நிரப்ப வேண்டும். சுயநலத்திலிருந்து நோன்பிருந்து பரிவிரக்கத்தோடு வாழ வேண்டும். காழ்ப்புணர்ச்சியிலிருந்து நோன்பிருந்து ஒப்புரவாக வேண்டும்.  அதிகமான சொற்களிலிருந்து நோன்பிருந்து,  மௌனத்தின் வழியாக இறைமாட்சியைக் காணவேண்டும். 

திருத்தந்தை பிரான்சிஸ் நோன்பு பற்றி பேசும்பொழுது வித்தியாசமான பார்வையை வழங்குகிறார். ஆண்டவர் இயேசுவும் நோன்பை மனித வாழ்வின் எதார்த்தமாகப் பார்த்தார். பரிசேயர்களும் சதுசேயர்களும் நோன்பினை சடங்காகப் பார்த்தனர். ஒவ்வொரு யூதரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சட்டத்தின் பெயரால் வலியுறுத்தினர். ஆனால் நோன்பு என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல ;மாறாக, அகம் சார்ந்ததும் கூட.  எனவே நம்முடைய கல்லான இதயத்தை அகற்றிவிட்டு, கனிவுள்ள இதயத்தைப் பெற்றிட திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய மேற்கண்ட நல்ல மதிப்பீடுகளை நம் வாழ்விலே செயல்படுத்துவோம்.அதுதான் உண்மையான நோன்பாக இருக்க முடியும். நோன்பின் உண்மையான பொருளை அறிந்து நோன்பு இருப்போம். நம்முடைய உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் கடவுளுக்கு உகந்ததாக  மாற்றுவோம்.அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  வெளிவேடமுள்ள நோன்பினை நாங்கள் மேற்கொள்ளாமல், எங்கள் உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் மீட்க வல்ல நோன்பினை நாங்கள் மேற்கொள்ள அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்