இறைவார்த்தையும் அன்னை மரியாவும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 25 ஆம் செவ்வாய் 
I: எஸ்: 6: 7-8, 12b, 14-20
II: திபா: 122: 1-2. 3-4
III: லூக்:  8: 19-21

இறைவார்த்தை என்பது நமது கிறிஸ்தவ வாழ்வில் அடிப்படையாக இருக்கின்றது. இறைவனுடைய வார்த்தையின்படி வாழ திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். அன்னை மரியா இறைவார்த்தையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இயேசுவை கருவில் சுமந்தது முதல் கல்வாரியில் இயேசுவை கையளித்தது வரை இறைவார்த்தையைத் தன் வாழ்வாக வாழ்ந்தார் . இயேசு உயிர்பெற்றெழுந்து விண்ணகம் சென்ற பிறகு யூதர்களுக்கு அஞ்சி நடுங்கிய தன் மகன் இயேசுவின் சீடர்களை இறையாட்சிப் பணியை நோக்கி இறைவார்த்தையின் ஒளியில்  திடப்படுத்தினார் . இதன் வழியாகத்தான் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொண்டனர். எனவே அன்னை மரியாள் இறைவார்த்தையை வாழ்வாக்கிய  ஒரு முன்மாதிரியாக இருக்கின்றார். எனவேதான் நமது திருத்தந்தை பிரான்சிஸ் "இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பதில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அன்னை மரியாவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

தன்னைப் பெற்ற தாய் மரியா தன்னை கருவில் சுமந்து முதல் தன்னுடைய இறையாட்சிப் பணிகளிலும்  தொடர்ந்து இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவராக இருக்கிறார் என்பதை இயேசு அறிந்துள்ளார். இருந்தபோதிலும் "யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்ற இயேசுவின் கேள்வியை எவ்வாறு புரிந்து கொள்வது. தன்னுடைய தாய்க்கு  இயேசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று புரிந்து கொள்வதை விட 'நடமாடும் இறைவார்த்தையே என் தாய்தான்'  என்று கூறுவது போல இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்துள்ளது.  தன் தாயை பிறருக்கு முன்மாதிரியாக இயேசு இந்த நிகழ்வில் வழியாகச் சுட்டிக் காட்ட விரும்பினார். ஏனெனில்  தாய்  என்ற இரத்த உறவைத் தாண்டி இறையரசு மற்றும் இறைவார்த்தை தொடர்பான உறவிற்கு இயேசு முக்கியத்துவம் கொடுத்ததால் தான்  இவ்வாறு கூறினார்.

இயேசு தன் தாயை தனது இரத்த உறவு என்ற குறுகிய வட்டத்துக்குள்  முடக்கி விடாமல் இறைவார்த்தையை தன் வாழ்வாகக் கொண்ட மிகச் சிறந்த முன்மாதிரியாக சுட்டிக்காட்டியுள்ளார். சீடர்கள் பார்வையில் அன்னை மரியா வெறும் இயேசுவின் தாயாக மட்டுமே தென்பட்டார். ஆனால் இயேசுவின் பார்வையில் அன்னை மரியா இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதில் முன்மாதிரியாக இருக்கின்றார் என்பதை வலியுறுத்தவே இவ்வாறு கூறினார். இதன் வழியாக அன்னை மரியா உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு மிகச் சிறந்த உதாரணம் என்பதை இயேசு வலியுறுத்தியுள்ளார். இயேசு இரத்த உறவைத் தாண்டி இறைவார்த்தை என்னும்  இறையாட்சி உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அன்னை மரியாவும் இரத்த உறவைத் தாண்டி இறைவார்த்தை என்னும் இறையாட்சி உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இப்படிப்பட்ட வாழ்வு வாழ்வது தான் இறையாட்சி வாழ்வுக்கு சான்று பகர்ந்த வாழ்வு.

ஒரு ஊரில் எனக்கு தெரிந்த ஒரு வயதான முதியவர் உள்ளார். அவர் மனிதநேய சிந்தனை கொண்டவர். மனிதர்களாய் பிறந்த எல்லோருமே மதிக்கப்பட வேண்டும் என்ற மனப்பாங்கை கொண்டவர். தனது குடும்பத்தைக் கவனிப்பதைப் போலவே  தான் வாழ்ந்த சமூகத்தையும் கவனித்தார். அனைவரையும் தனது குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களை அன்பு செய்து எல்லா வகையிலும் உதவி செய்தார். சமூக நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உரிமையை மக்கள் பெற்றிட வழிகாட்டினார். இதற்காக ஒரு சில நேரங்களில் துன்பங்களையும் இடையூறுகளையும் சந்தித்தாலும் பிறரின் வாழ்வு வளம் பெற மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். இதுதான் சான்று பகர கூடிய வாழ்வு. இத்தகைய மனநிலை தான் அன்னை மரியாவின் மனநிலை. உலக மக்கள் அனைவருமே மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக தன்னையே முழுவதுமாக இறைவனின் வார்த்தைக்கு  கையளித்து "இதோ ஆண்டவரின் அடிமை" என மீட்புத் திட்டத்திற்கு முழுவதுமாக கீழ்படிந்தார். எனவேதான் அன்னை மரியா இறைவார்த்தை வாழ்வுக்கு முன்மாதிரியாக இருக்கின்றார்.

எனவே நமது அன்றாட வாழ்விலே அன்னை மரியா இறைவார்த்தையின் மீது கொண்டிருந்தத் தாகத்தை நாமும் கொண்டிருக்கும்பொழுது உறவினர்களாக மாறமுடியும். இறைவார்த்தையின் மாதத்தைதத் தொடங்கியுள்ள நாம் இறைவார்த்தையை வாழ்வாக்கக் கூடியவர்களாக வாழ்ந்து  இயேசுவின் கருவிகளாக உருமாற அன்னை மரியாவை போல இறைவார்த்தையைக் கேட்டு அதனை வாழ்வாக்குவோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
அன்புள்ள இயேசுவே! நாங்கள் எங்களுடைய அன்றாட வாழ்வில் இரத்த உறவுகளைத் தாண்டி இறைவார்த்தை என்னும் இறையாட்சி உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையான அருளைத் தாரும். இறைவார்த்தையை வாசித்து  அதனை தியானித்து அதை வாழ்வாகும் மனப்பக்குவத்தை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்