ஆலயம் எதற்காக? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 34 ஆம் செவ்வாய்
I: தானி: 2: 31-45
II: தானி(இ) 1: 34. 35-36. 37-38
III: லூக்: 21: 5-11
ஒரு ஊரில் இரண்டு ஆலயங்கள் இருந்தன. ஒரு அருட்சகோதரர் களப்பணி அனுபவத்திற்காக சென்றார். ஒரு சிறிய ஊரில் இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் , இரண்டு கல்லறைகள் இருப்பதைக் கண்ட அந்த அருள்சகோதரர் " ஏன் இந்த இரண்டு கோயில்? " என்று வினவினார். அதற்கு அவர்கள் உயர்ந்த ஜாதிக்கு ஒரு கோவிலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு கோவிலும் உள்ளன" என்று கூறினார். இதைக் கேட்ட அந்த அருள்சகோதரர் "இந்த ஊரில் திருப்பலி வைப்பதும் இறைவேண்டல் செய்வதும் முற்றிலும் வீண்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ஆண்டவர் இயேசு கண்ட இறையாட்சிக் கனவு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் உள்ளடக்கியது. ஆனால் ஆலயத்தை மையமாக வைத்து ஜாதி பிளவுகளும் மொழி பிளவுகளும் இனப் பிளவுகளும் இருப்பது மிகவும் அவமானத்திற்கு உரியது. இவற்றை முற்றிலும் களைய நாம் முற்பட வேண்டும் . அப்பொழுதுதான் இறையாசி நமக்குக் கிடைக்கும். ஆலயம் அனைவரையும் ஒன்றிணைக்க கூடியது. ஆனால் அந்த ஆலயம் ஜாதி பிளவுகளை ஏற்படுத்துகிறதென்றால் முற்றிலும் வீண்.
ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் யூதர்கள் எருசலேம் ஆலயத்தை தங்களின் பெருமையாகவும் கர்வமாகவும் கருதினர். எருசலேம் ஆலயத்தின் அழகைக்கண்டு வியப்புற்றார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயம் ஒரு காலம் வரும் பொழுது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இல்லாதவாறு இடிக்கப்படும் என்று கூறினார். இதற்குக் காரணம் என்னவெனில் இந்த உலகத்தில் நாம் பெருமையாகவும் புகழாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் எதுவும் நிரந்தரமல்ல; மாறாக, இறையாட்சி மதிப்பீடுகள் மட்டுமே நிரந்தரமானது. ஆலயம் நமக்கு தேவை தான். ஆனால் அந்த ஆலயத்தின் பெயரால் நடத்துகின்ற பாகுபாடுகள் கடவுளின் பார்வையில் அருவருப்பானது. நம் ஆண்டவர் இயேசு இன்று நமது திருஅவையைப் பார்த்து பாறையின் மீது கட்டப்பட்ட திருஅவை மக்களாக இருக்கிறீர்களா? அல்லது பாகுபாடுகளுக்கு வழிவகுத்த எருசலேம் ஆலய யூதர்களைப் போல இருக்கிறீர்களா? எனக் கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுக்கிறார். யூதர்கள் கடவுள் பக்தி நிறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கடவுளை விட்டு வெகுதொலைவில் இருந்தார்கள். எந்தப் பாவம் செய்தாலும் எருசலேம் ஆலயத்தில் வந்து காணிக்கை செலுத்தினால் போதும் அனைத்து பாவமும் போய்விடும் என்று ஆணவச் செருக்கோடு இருந்தார்கள். ஆனால் கடவுள் அவரின் அடையாளமாக பார்த்த எருசலேம் ஆலயம் இடிக்கப்படும் என்பதை தன்னுடைய திருமகன் வழியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருவழிபாட்டு காலத்தின் இறுதி வாரத்தில் இருக்கின்ற நாம் கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்கிறோமா? அல்லது ஆணவச் செருக்கோடு வாழ்கிறோமா? என்று சோதித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். அதிலும் குறிப்பாக இறை பிரசன்னம் நிறைந்த ஆலயத்தை இறைவனின் அதிமிகு மகிமைக்காகவும் இறையாட்சி மதிப்பீட்டிற்காகவும் பயன்படுத்துகிறோமா என சந்தித்து பார்ப்போம்.
எனவே உயிரோடு வாழும் இயேசுவின் திருஅவையில் வாழ்கின்ற நாம் நம்முடைய பாகுபாடு நிறைந்த மனநிலையைக் களைய முயற்சி செய்ய வேண்டும். அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையோடு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். எல்லோரையும் மதிக்கும் மனநிலையோடு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். அப்பொழுது மட்டுமே ஆலயத்தில் உயிரோடு பிரசன்னமாக இருக்கும் ஆண்டவர் இயேசுவை முழுமையாக உணர முடியும். இல்லையென்றால் எருசலேம் ஆலயம் பாகுபாடுகளின் காரணமாகவும் மக்களின் சுயநலத்தின் காரணமாகவும் தகர்க்கப்பட்டதைப்போல நாமும் தகர்க்கப்பட நேரிடும். "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் " என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். அதேபோல "சாதிதான் திருஅவை என்றால் வளர்ந்த திருஅவையில் அழிவு நேரிட வாய்ப்பு உண்டு". எனவே நமது அன்றாட வாழ்க்கையில் நமது வாழ்வின் அடையாளமாக இருக்கக்கூடிய ஆலயத்தை அனைவரும் கூடி வரும் அருள்தளமாக மாற்றுவோம். ஜாதிய பாகுபாடுகளை ஊக்குவிக்கும் ஜாதி சங்கமாக மாற்ற வேண்டாம். கடவுளின் பார்வையில் அது அருவருப்புக்குரியது. இதைத்தான் இன்றைய நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு நமக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றார். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நாம், நம்முடைய உடலாகிய ஆலயங்களில் இறையாட்சியின் மதிப்பீடுகள் வளர்த்தெடுக்க முயற்சி செய்வோம். கடவுளுக்கு உகந்த ஆலயமாக நம் வாழ்வை மாற்ற முயற்சி செய்வோம். இறையாட்சிப் பாதையில் சமத்துவத்தைப் பறைசாற்றி நாமே ஆலயமாக மாறி இறையாட்சியைப் பகிர முயற்சி செய்வோம். அத்தகைய துணிச்சல் நிறைந்த மனநிலையை வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுவோம்.
இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே! ஆலயங்களை வீண் பெருமைக்காக அல்லாமல் உம்முடைய அதிமிக மகிமைக்காக பயன்படுத்த அருள்தாரும். ஆலயங்களை உறவின் அடையாளமாக பயன்படுத்த அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்