ஒரு கிறிஸ்தவராக எனது வாழ்க்கையை நான் எவ்வாறு புரிந்துகொள்கிறேன்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 15 வாரம் திங்கள் 
I: விப: 1: 8-14,22
II: திபா: 124: 1-3. 4-6. 7-8 
III: மத்: 10: 34-11: 1

கிறிஸ்துவின் வழி எப்போதும் சிலுவையின் வழி.அதிலே வீழ்ச்சிகள் இருக்கும். இழப்புகள் இருக்கும். வலிகள் இருக்கும். அதே சமயம் எழுச்சியும் ஆதாயமும் மாட்சியும் இருக்கும். இயேசு இந்த வாழ்க்கைத் தத்துவத்தை தனது சொந்த வாழ்க்கையின் மூலம் நிரூபித்தார்.
இதை நாம் அறிந்திருந்தாலும் அனுபவித்தாலும், இந்த வாழ்வியலைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளத் தவறுகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம்தான் இந்த கோட்பாட்டை மற்றவர்களை விட நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு இன்றைய நற்செய்தியில் "தனது சொந்த சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்தொடரும் எவரும் எனக்கு தகுதியானவர் அல்ல" என்று கூறுகிறார்.மேலும் "தன் உயிரைக் காத்துக்கொள்ளும் எவரும் அதை இழந்துவிடுவர்" என்று உரைக்கிறார். அதன் உண்மைப் பொருளென்ன என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

 இந்த நவீன மற்றும் உடனடி உலகம் வலியையும் போராட்டங்களையும் மகிழ்ச்சியின் எதிரிகளாகவே கருதுகிறது. வாழ்க்கையை முடிந்த அளவிற்கு  அதிகபட்சமாக அனுபவிக்க கற்றுக்கொடுக்கிறது . மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அவசியம். அதே நேரத்தில் இந்த மகிழ்ச்சியை நாம் எப்போதும் முயற்சியின்றி உழைப்பின்றி அனுபவிக்க முடியாது. அதற்காக நாம் உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்கும் போது  நாம் சில சவால்களையும் வேதனையான தருணங்களையும் சந்திக்க நேரிடலாம். பல சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்கலாம். அவ்வாறு நாம் வருந்தி சுமக்கும் சுமைகளின் பலனே சுகமாக மாறும். இயேசுவின் சீடர்களான நாம் இதை உணர்ந்து வாழ்வாக்க வேண்டியது அவசியம்.

அன்பு நண்பர்களே, நாம் தினமும் மனமுவந்து சுமக்கின்ற  சிலுவைகள், வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதிலும் கையாளுவதிலும் நம்மை பலப்படுத்துகிறது.திடப்படுத்துகிறது. எனவே சுமைகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழகவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் போது கிறிஸ்து கொண்டிருந்த மனநிலை நம்மிலும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நாளின் செய்தி. கிறிஸ்து தம்முடைய வாழ்க்கையால் நமக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவருடைய சீடர்களான நாம் அவரிடமிருந்து கற்றுக்கொண்டு அவருக்கு தகுதியானவர்களாக மாற முயற்சிப்போம்.

இறைவேண்டல்
அன்பு இயேசுவே உமது சீடர்களாகிய நாங்கள் எமது வாழ்வை புரிந்துகொண்டு அன்றாட சிலுவைகளை மகிழ்வுடன் சுமக்க வரம் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்