நாமும் இறையாட்சி பணியாளர்களா!!! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 14 வாரம் வியாழன்
I: தொநூ: 44: 18-21,23-29; 45: 1-5
II: திபா 105: 16-17. 18-19. 20-21
III: மத்: 10: 7-15
"விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது "(மத். 10:7) என பறைசாற்ற நம் ஆண்டவர் இயேசு தான் தேர்ந்தெடுத்த திருத்தூதர்களை இன்றைய நற்செய்தியில் அனுப்புவதாக வாசிக்கிறோம் . இயேசு 30 ஆண்டுகளாக தன்னை விண்ணரசு பணிக்காக ஆயத்தப்படுத்தி திருமுழுக்கு பெற்று 40 நாட்கள் அழுகையால் சோதிக்கப்பட்டு தன் தந்தையின் திருவுளத்தை அறிந்தார். எதற்காக தந்தை இவ்வுலகிற்கு மனுவுருவை எடுக்க அனுப்பினார் என்பதில் தெளிவு பெற்றார். அதன் பின்பு தன்னுடைய பணியினை தொடங்கினார். "மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது " (மத். 4:17) என்று பறைசாற்றினார். தன்னுடைய பணி வாழ்வில் பல்வேறு வல்ல செயல்களையும் போதனைகளையும் வழங்கி மீட்புக்கு வழிகாட்டினார். தான் தொடங்கிய அந்தப் பணியினை தனக்குப் பின்னும் தொடரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தூதர்களைத் தெரிவு செய்தார். அப்படி தெரிவு செய்யப்பட்ட திருத்தூதர்களை விண்ணரசை பற்றி நற்செய்தி பறைசாற்ற அனுப்புவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம்.
விண்ணரசு என்ற சொல் ஒப்புமை நற்செய்திகளில் மத்தேயு நற்செய்தியில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விண்ணரசு என்ற சொல்லுக்கு பதிலாக இறையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்த்தைகளில் மாற்றம் இருந்தாலும் அதில் அடங்கி இருக்கும் பொருள் ஒன்றாகத்தான் இருக்கின்றது.
"இறையாட்சி "என்றால் கடவுள் விரும்புகின்ற சமுதாயம், கடவுளின் மதிப்பீடுகளை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்படும் மக்கள் குடும்பமாகும்.
இந்த உலகம் நம்மை படைத்த கடவுளைத் தலைவராகக் கொண்ட குடும்பம். கடவுள் நம்முடைய தந்தை. நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள். எனவே இந்த இறையாட்சி குடும்பத்தில் அன்பு, மகிழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை, தூய வாழ்வு போன்ற கடவுளின் மதிப்பீடுகள் மட்டும்தான் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறையாட்சி. இப்படிப்பட்ட இறையாட்சியின் மதிப்பீடுகளை மக்களுக்கு பறைசாற்றவே இன்றைய நற்செய்தியில் இயேசு திருத்தூதர்களை அனுப்புகிறார். இப்படிப்பட்ட கடவுளின் மதிப்பீடுகளை நாமும் வாழ்ந்து பிறரும் வாழ வழிகாட்ட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இயேசு தாம் தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்கள் வழியாக இறையாட்சி பணிசெய்ய இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீதும் ஆடம்பர வாழ்வின் மீதும் நாட்டம் கொள்ளாமல் இருக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். இத்தகைய இறையாட்சி பணியை மக்கள் பணியாக செய்ய நோய்களை குணமாக்கவும், இறந்தோரை உயிர்ப்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் அதிகாரம் அளிக்கின்றார். இது இயேசுவால் திருத்தூதர்களுக்கு கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. இப்படிப்பட்ட கொடையை சுய விளம்பரத்துக்காகப் பயன்படுத்தாமல் இறையாட்சியைக் கட்டியெழுப்ப பயன்படுத்த இயேசு வழிகாட்டுகிறார். எனவே தான் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என கூறுகிறார்.
திருத்தூதர்களும் இயேசு கூறியவாறு இறையாட்சிப் பணியினைச் செய்தார்கள். இறையாட்சிப் பணி செய்ய முன்வந்ததால் அவர்களுக்கு இயேசு வல்ல செயல்களைச் செய்ய ஆற்றலை கொடுக்கிறார். திருத்தூதர்களுடைய பறைசாற்றுதலை ஏற்றுக்கொள்பவர்கள் அமைதியைப் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர்களை புறக்கணிப்பவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள் எனவும் இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
இயேசு தண்டிப்பவர் அல்ல; இரக்கமுள்ளவர். இருந்தபோதிலும் இவ்வாறு சொல்லுகிறார் என்றால் மனமாற வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை வலியுறுத்துவதாக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் இறையாட்சி பணியினை தொடர்ந்து செய்ய அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் திருத்தூதர்களைப் போல இவ்வுலகப் பொருட்கள் மீது நாட்டம் கொள்ளாமல் இருந்து இறையாட்சி பணி செய்ய அழைக்கப்படுகின்றனர். இறைமக்கள் அருள்பணியாளர்கள் பறைசாற்றக் கூடிய இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளனர்.இறைவன் அருள் பணியாளர்கள் வழியாக மனம் மாறி நற்செய்தி நம்ப வாய்ப்பு கொடுக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தும் பொழுது நம் வாழ்வில் அமைதியை கொடையாக பெறமுடியும். வாய்ப்பினை பயன்படுத்தாவிட்டால் அமைதியை இழக்க நேரிடும். எனவே மனம் மாறி இறையாட்சியின் பணியாளர்களாக மாற தேவையான அருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
தாயும் தந்தையுமான இறைவா! உமது இறையாட்சி மதிப்பீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள பல வாய்ப்பினை எங்களுக்கு கொடுத்து வருகிறீர். அந்த வாய்ப்பினை நாங்கள் பயன்படுத்தி உமது இறையாட்சி கனவை வாழ்வாக்கி இறையாட்சி பணியாளர்களாக மாற அருளைத் தரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்