கிறிஸ்துவை அனுபவித்து அறிவிப்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா 
திருநாள் திருப்பலி
I: திப: 12: 1-11
II: திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8
III: 2 திமொ: 4: 6-8, 17-18
IV:மத்: 16: 13-19

நம்மில் யாராவது நாம் அறிந்திராத அல்லது அனுபவித்திராத ஒன்றைப் பற்றியோ அல்லது ஒரு மனிதரைப் பற்றியோ பிறரிடம் பகிர முடியுமா? இயலாது. அதைப் போலவே கிறிஸ்துவை அனுபவிக்காமல் அவரை அறியாமல் நம்மால் அவரைப் பறைசாற்ற இயலாது.  கிறிஸ்துவை அனுபவித்து அறிவிக்க இன்றைய விழா நம்மை அழைக்கிறது.

இன்று நம் தாய் திருஅவை புனிதர்களான பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது.இவர்களும் இருவரும் திருஅவையின் தூண்களாவர். யூத நம்பிக்கையாளர்கள் மற்றும் புவினத்தாரிடையே இயேசுவைப்பற்றிய நம்பிக்கையை பறைசாற்றி திருஅவையை  வளர்ப்பதில் இந்த இரண்டு புனிதர்களும் மிக மிக முக்கிய பங்கு வகித்தார்கள்  என்பதை யாராலும் ஒருபோதும் மறுக்க முடியாது.
அவர்களை இந்த உலகம் முழுவதும் இயேசுவை அறிவிக்க வைத்தது எது?  கடவுளின் மகன்  இயேசுதான் என்ற அவர்களின்   தனிப்பட்ட  அனுபவமே அன்றி  வேறில்லை என நாம் அறுதியிட்டுக் கூறமுடியும் அன்றோ?

சீடர்களிடையே இயேசுவை"நீர் வாழும் கடவுளின்  மகன் . வரவிருக்கும் மெசியா "என்று பேதுருவைத் தவிர வேறு யாரும் உரக்கச் சொல்ல முடியவில்லை. அவர் இயேசுவை மெசியாவாக, வாழும் கடவுளாக நெருக்கமாக அனுபவித்திருந்தார். அவ்வாறு அனுபவித்ததை அவர் அறிக்கையிட்டார். அவருடைய இந்த நம்பிக்கை அறிக்கை அவரைத் திருஅவையின் தலைவராக்கியது.அந்த ஆழ்ந்த அனுபவமே எத்தகைய துன்பங்களையும் வேதனைகளையும் திருமறைக்காக ஏற்றுக்கொள்ள வைத்தது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்பது இதுவே. இயேசுவை தனிப்பட்ட விதத்தில் அவர் அனுபவித்ததால் இரும்புச் சங்கிலிகளால் அவரைப் பிணைக்க இயலவில்லை. நற் செய்தியான இயேசுவை வலிமையோடு அறிவித்தார்.

தன்னை ஒரு திருத்தூதன் என்று கூறிக்கொண்ட பவுல், இயேசுவை சந்தித்தபின் ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டிருந்தார்.பேதுருவைப்போல பவுல் இயேசுவோடு வாழ்ந்து அவருடைய போதனைகளைக் கேட்கவில்லை. யூத மறையைத் தீவிரமாகத் தழுவிய அவர் புதிதாக உருவெடுத்த கிறிஸ்தவ நம்பிக்கையை வெறுத்தாலும்,  இயேசுவை தமஸ்கு போகும் வழியில் சந்தித்த நிகழ்வு  நற்செய்தியை அவர்  பரப்புவதற்கு ஒரு சிறந்த. உந்து சக்தியாக இருந்தது.அந்த இயேசுவை புற இனத்தாருக்கு அறிவித்து விண்ணகத்தந்தையை மகிமைப்படுத்த தன் உயிரையும் கொடுத்தார். கடவுளின் மகிமைக்காக உழைப்பதே தனக்கான பரிசு அந்த பரிசை பெற நான் உழைத்துக்கொண்டே இருப்பேன். ஓடிக்கொண்டே இருப்பேன் என பறைசாற்றுகிறார் பவுல்.

நாம் இயேசுவைத் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறோமா? நம் அன்றாட வாழ்க்கையில்  இயேசுவை சந்திக்கிறோமா? அவ்வாறெனில்  நாம் அனுபவித்த, மனதால் சந்தித்த இயேசுவைப் பறைசாற்றாமல் நம்மால்  அமைதியாக இருக்க இயலாது . எனவே இயேசுவை நம்முடைய ஆழ்மனதில் ஆழமாக அனுபவிக்க வரம் கேட்போம். நம் வார்த்தையால் மட்டுமல்ல வாழ்வாலும் இயேசுவைப் புனிதர்கள்  பேதுரு மற்றும் பவுலைப் போல பறைசாற்றத் தயாராவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே உம்மை எம் வாழ்வில் அனுபவித்து பறைசாற்ற வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்