இயேசுவைப் பின்பற்றி முன் மாதிரிகளாய் வாழ்வோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 11 திங்கள் 
I: 2 கொரி: 6: 1-10
II: திபா 98: 1. 2-3. 3b-4.
III:மத்: 5: 38-42

இரு மனிதர்களிடையே கடன் பிரச்சினை காரணமாக கடுமையான   வாக்குவாதம் நடைபெற்றது.நேரப்போக்கில் அது கைத் தகறாராக மாறியது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் சண்டையை சரிசெய்ய இயலவில்லை. இறுதியாக மழை ஓய்வது போல சண்டை ஓய்கின்ற சமயத்தில் இருவருள் ஒருவர் " நான் செத்தாலும் பறவாயில்லை. உன்னை வாழ விடமாட்டேன்" என்று சொல்லிச் சென்றார்.

அம்மனிதர் சொன்ன வார்த்தைகளை சிந்தித்துப் பார்ப்போம். அவருடைய உயிர் போனபின்பு மற்றவர் வாழ்வதையும் வாழாமல் இருப்பதையும் அவரால் காண முடியாது. பழிவாங்கி வெற்றி பெற்றதாக எண்ணி மகிழவும் முடியாது அல்லவா. பின் எதற்காக நாம் இவ்வாறு பகைமை பாராட்ட வேண்டும்?

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் மட்டுமல்ல இன்றைய சமூகத்தில் வாழும் நம்மில் பலபேருக்கு " கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல்" என்ற மனப்பான்மையே ஓங்கி நிற்கிறது. எனக்கு இரு கண்களும்  போனாலும் பறவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும். நான் இருவர் முன்னால் அவமானப்பட்டால் என்னை அவமானப்படுத்தியவர் நால்வர் முன்னால் அவமானப்பட வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணங்கள் நமக்குள் ஊறிக்கிடக்கின்றன என்றால் அது மிகையாகாது. ஆனால் இயேசுவைப் பின்பற்றும் நாம் இம்மனநிலையைத் தொடர்ந்தால் நாம் அவருடைய சீடர்களாய் இருக்க நமக்கு நிச்சயம் தகுதியில்லை.

இயேசு நம்மைப் பொறுமையாக இருக்கச் சொல்கிறார். பகைமை உணர்வுகளையும் பழிவாங்கும் எண்ணங்களையும் தூக்கி எறியச் சொல்கிறார். மன்னித்து வாழச் சொல்கிறார். இவையெல்லாம் எல்லா நேரங்களிலும் செய்வதற்கும் சொல்வதற்கும் எளிதல்ல. ஆனால் நம் ஆண்டவரின் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டு பின்பற்ற முயன்றால் நிச்சயம் வெற்றி பெறலாம். நம்முடைய அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நம்மோடு உள்ள அயலார்களோடு உள்ள உறவில் சற்று பொறுமையைக் கடைபிடித்து பகைமை உணர்வுகளைக் களைய முயற்சி செய்வோமா?

முதல் வாசகத்தில் புனித பவுல் "எங்கள் நடத்தைகளால் கடவுளின் பணியாளர்கள் என்பதைக் காட்டுகிறோம்" எனக் கூறியுள்ளார். நாமும் நம்முடைய பொறுமையான பகையில்லாத நடத்தைகளால் இயேசுவின் சீடர்கள் என்பதை எண்பிக்க முயற்சி எடுப்போம். 

 இறைவேண்டல்
அன்பு இயேசுவே எங்கள் மனதில் ஊறிக்கிடக்கும் பகை உணர்வுகளை வேரோடு பிடுங்கி எறிய சக்தி தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்