புயலில் அமைதி... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

திருமணம் ஒன்று நடந்தது. பெரிய செல்வந்தர், வீட்டுத் திருமணம். உள்ள ஒரு தீவைத் தேர்ந்தெடுத்தனர். அங்கு செல்வதற்காக பெரிய கப்பல் ஒன்று தயாராக நின்றது.

விழாவுக்கு வந்த அனைவரும் பட்டாடை, புத்தாடை அணிந்துகொண்டு கப்பலில் ஏறி அமர்ந்தனர். இளைஞர்கள் இசைக் கருவிகளோடு கப்பலின் உள்ளே நுழைந்தனர். இறுதியாக திருமணத் தம்பதியர் ஆடம்பரமாக உள்ளே வர இளைஞர்களில் சிலர், கப்பலை இயக்கும் மாலுமியிடம் சென்று, "ஐயா, நாங்கள் எல்லோரும் தயார், கப்பலைச் செலுத்துங்கள்" என்று வேண்டினர். மாலுமி கையில் செபமாலையை எடுத்தார். தரையில் மண்டியிட்டார். கண்களை மூடி செபிக்க ஆரம்பித்தார். நீண்டநேரம் அவர் செபிப்பதைப் பார்த்த இளைஞர்கள் அவரை எள்ளி நகையாடி, கேலி செய்து சிரித்தனர். ஆனால் மாலுமி எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக செபித்தார். செபம் முடிந்தவுடன் உற்சாகமாக கப்பலை இயக்கினார். இளைஞர்கள் இசைக் கருவிகளை இசைக்க, பாடிக்கொண்டே மகிழ்ச்சியோடு பயணத்தைத் தொடர்ந்தனர்.

திடீரென்று கடலில் பெரிய புயல்காற்று வீசியது. கடல் அலைகள் மலைபோல் உயர்ந்து கொதித்தெழுந்து கப்பல் மீது மோதின. கப்பல் அங்குமிங்குமாக இழுத்துச் செல்லப்பட்டது. கடல்நீர் கப்பலின் உள்ளே வர, மக்கள் அனைவரும் பயந்து அச்சம் கொண்டு, "ஐயோ, சாகப்போகிறோமே! எங்களைக் காப்பாற்ற யாருமில்லையா?" என்று அபயக் குரல் எழுப்பினர்.

இளைஞர்களில் சிலர் மாலுமியிடம் ஓடிச்சென்று, "ஐயா, நாங்கள் செத்து மடிய இருக்கின்றோம். எங்களைக் காப்பாற்ற மண்டியிட்டு கடவுளிடம் செபியுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டனர். மாலுமி அவர்களிடம் கோபமாக, "புயல் சீற்றத்திலிருந்து கப்பல் மூழ்காமல் இருக்க பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் கப்பலின் மத்தியில் உள்ள ஆரோக்கிய மாதா சுரூபத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக மன்றாடுங்கள்" என்றார். அனைவரும் மன்டியிட்டு "அம்மா ஆரோக்கிய தாயே, எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று கண்ணீரோடு வேண்டினர். புயல் காற்று மெதுவாக ஓய்ந்தது. கடலில் பேரமைதி உண்டாயிற்று. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தீவை அடைந்தனர். திருமண விருந்துக்கு முன், செபம் செய்து விழாவை இனிதே தொடங்கினர்.

"திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி இயேசுவை எழுப்ப... அவரும் எழுந்து காற்றையும், கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று." (மத்தேயு 8:24-26).

அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும். ( நீமொ16:6)

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image