துன்பங்கள் நன்மைக்கே... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

இளவரசன் வாள் வித்தை கற்று வந்தான். வாள் தவறி விழுந்து அவனுடைய வலது கையின் கட்டை விரலைத் துண்டித்து விட்டது. வேதனையில் வருந்தினான். ஆனால், அரசவையில் உள்ள ஞானி எல்லாம் நன்மைக்கே' என்று அமைதியாகக் கூறினார். அவர் கூறியது பலருக்கு வருத்தமாக இருந்தது.

இளவரசன் குதிரை சவாரி செய்வதிலும், வேட்டையாடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் குதிரை மீது அமர்ந்து தனியாக வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அது ஒரு பெரிய காடு. ஆள்நடமாட்டம் கிடையாது. திருடர்கள் நிறைந்த இடம். குதிரை மீது இளைஞன் வருவதைப் பார்த்த திருடர்கள் அவனையும் குதிரையையும் சிறை பிடித்து, நடுக்காட்டிற்குக் கடத்திச் சென்றனர். அங்கு தாங்கள் வழிபடும் தெய்வத்துக்கு இளைஞனை நரபலியிட தயார் செய்தபோது, திருடர்களின் தலைவன் "இவன் ஊனமுற்றவன். கட்டைவிரல் கிடையாது. உடல் குறைபாடுள்ளவர்களை நம் தெய்வத்துக்கு பலியிடக் கூடாது. இவனை விட்டுவிடுங்கள்' என்று கூறினான்.

இளவரசன் தனியாக அரண்மனை வந்து சேர்ந்தான். தான் திருடர்களால் சிறைபட்டதையும், எவ்வாறு விடுதலை கிடைத்தது என்பதையும் விவரமாக எடுத்துக் கூறினான். இதைக் கேட்ட ஞானி, "எல்லாம் நன்மைக்கே' என்று கூறினார். இளவரசன் தனது குதிரையைத் திருடர்கள் பிடித்து வைத்துள்ளார்கள் என்று கூற, ஞானி, "எல்லாம் நன்மைக்கே' என்றார். மூன்று நாட்கள் கடந்தன. அதிகாலை நேரம் இளவரசனுடைய குதிரையும், அதனுடன் மேலும் இரண்டு குதிரைகளும் அவன்முன் வந்து நின்றன. அரசன் ஆச்சரியப்பட்டான். இதைக் கவனித்த ஞானி "எல்லாம் நன்மைக்கே' என்றார்.

புதிய குதிரைமீது ஏறி இளவரசன் சவாரி செய்யத் தொடங்கினான். முரட்டுத்தனம் கொண்டகுதிரை அவனைக் கீழே தள்ளிவிட்டது. அவனது கால் முறிந்து வேதனைப்பட்டான். அதனால் இரண்டு குதிரைகளையும் காட்டுக்கு விரட்டிவிடலாம் என்று இளவரசன் நினைத்தான்.ஞானி 'வேண்டாம்' என்று சொல்லி "எல்லாம் நன்மைக்கே' என்றார். சில வருடங்கள் கடந்த பின் எதிரிகள் நாட்டைத் தாக்கும்போது, இந்த இரண்டு குதிரைகளையும் யுத்தத்தில் முன்னிறுத்தியபோது எதிரிகளின் குதிரைப்படையைத் தாக்கி நாட்டுக்கு வெற்றி கொண்டுவந்தன. அப்போதும் "எல்லாம் நன்மைக்கே' என்றார் ஞானி.

"வாழ்க்கையில் துன்பங்களும் இன்பமாக மாறும் என்ற நம்பிக்கையில் கடவுளுக்கு நன்றி கூறும் மனது வேண்டும்' என்று கூறி முடித்தார் ஞானி.

தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.(நீமொ 24:19)


எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image