மாசற்ற அன்னை நம் மாசற்ற வாழ்வுக்கு உறுதுணை! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
முதல் வாசகம்
I: தொநூ: 3: 9-15,20
II: திபா: 98: 1. 2-3. 3-4
III: எபே: 1: 3-6, 11-12
IV: லூக்: 1: 26-38
ஒரு ஏழை மாணவி பள்ளிக்கு தினமும் அசுத்தமான நிலையில் தான் வருவார். கறைபடிந்த பற்கள்,கிழிந்த தூய்மையற்ற ஆடை, அருகில் செல்லும் போதே ஒருவகையான துர்நாற்றம் என பார்ப்பதற்கு மிகப் பரிதாபமாக இருப்பார்.பலர் அம்மாணவியைக் காணும் போது பயங்கரமாக கோபப்படுவதும் முகம் சுழிப்பதுமாக இருப்பார்கள். இதைக்கண்ட அம்மாணவியின் ஆசிரியை அவர் வீட்டிற்குச் சென்று அம்மாணவியின் தாயை சந்திக்க வேண்டுமென விரும்பினார். வீட்டிற்கு சென்றபோது தான் தெரிந்தது அம்மாணவி தாயற்றவர் என்று. தாய் இல்லாததால் அக்குழந்தை பராமரிக்கப்படவில்லை என உணர்ந்த ஆசிரியை ஒரு தாயாக மாறி அம்மாணவியைச் சுத்தம் செய்து, சுயமாக வேலைகள் செய்வும் கற்றுக்கொடுத்தார்.
அன்னையில்லா வீடு வீடல்ல.ஒரு வீடு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக தாயின் செயல்தான். தாய், தானும் சுத்தமாய் இருப்பாள். தன் குடும்பத்தையும் அவ்வாறே பேணுவாள். சராசரி பெண்களே இவ்வாறிருக்க, இவ்வுலகை பாவமாசிலிருந்து சுத்தீகரிக்க வந்த இறைமகனின் தாய் எவ்வளவு மாசுமறுவற்றவராய் இருந்திருப்பார்?
இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில் “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.
திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா ‘நாமே அமல அற்பவம்’ என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம.
"தாய் வயிற்றில் உருவாகும் முன்னே உன்னை தேர்ந்துகொண்டேன்" என்ற கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினர் எரேமியாவின் அழைத்தலில் நாம் காண்கிறோம். பல சமயங்களில் இவ்வார்த்தைகளை நம் வாழ்வோடு ஒப்பிட்டு அழைத்தலின் மேன்மையை தியானிப்பதும் உண்டு. இவ்வாறு கடவுள் தமக்கென தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரையும் தகுப்படுத்துகிறார்.தூய்மைப்படுத்துகிறர். இறைவாக்கினர் எசாயா இறைவார்த்தையை உரைக்குமாறு நெருப்பு கொண்டு அவர் நாவைத் தூய்மையாக்கினார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அவ்வகையில் தன்னுடைய மகனை இவ்வுலகிற்கு கொணரத் தேர்ந்த்தெடுத்த அன்னை மரியாவை பாவத்திலிருந்து முழுதும் விலக்கிக் காத்தார் இறைவன். அத்தூய்மையின் அடையாளமே"அருள்நிறைந்தவரே வாழ்க"என்று வானதூதர் கூறிய வாழ்த்தொலி. இவ்வாழ்த்து அன்னையின் மாசற்ற தன்மையைச் சுட்டிக்காட்டுவதாய் அமைகிறது. அன்னை மரியாவும் தன்னுடைய மாசற்ற தன்மையை இறுதிவரைக் காத்துக்கொண்டார். "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று இறை உளத்திற்கு பணிந்த அவர் தான் உருவான நாளிலிருந்து எவ்வித பாவசோதனையாலும் தூண்டப்படாதவராய் இருந்தார்.
திருமுழுக்கினால் பாவக்கறைகள் நீக்கப்பட்ட கடவுளின் குழந்தைகளான நாம் நம் அகத்தூய்மையை எவ்வாறு காத்துக்கொள்கிறோம் என சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்
பல வேளைகளில் நாம் உலக மாயைகளில் சிக்கி, சுயநலம்,அன்பின்மை, பிறரை ஏற்றுக்கொள்ளாமை போன்ற பண்புகளால் நம்மையே மாசுபடுத்துகிறோம்.
மாசற்றோராகவும் தூயோராகவும் நாம் வாழவேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம். எனவே மாசற்ற அன்னை இறுதிவரை மாசற்றவளாய் இருந்து இறைமகனைத் தாங்கியது போல நாமும் நம்மைத் தூய்மைப் படுத்தி நம் இதயத்தால் இயேசுவைக் கருத்தரிக்கவும் அவரை நம்முடன் வாழும் அனைவருக்கும் வழங்கவும் நம்மை தயார் செய்வோம்.
இறைவேண்டலாலும்,
இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
தூயவரான தந்தையே! உம் மகனை கருத்தரிக்க ஏற்றவராய் அன்னை மரியாவின் மாசற்ற தன்மையைக் காத்தீர். எங்களையும் தூய்மையாக்கி அன்னை மரியாவைப் போல இயேசுவை எங்கள் இதயத்தில் சுமக்க அருள் தாரும்.
அமல உற்பவ அன்னையே மாசற்ற தாயே நாங்களும் உம்மைப் போல மாசற்றவர்களாய் வாழத் துணை செய்யும்.
ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்