நிறைவாக, இயேசுவின் இன்றைய நற்செய்தியில்யில், அவர் தனது தந்தையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பைப்போல, நாம் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் நாமும் தந்தையாம் கடவுளோடு ஒன்றித்திருக்க முடியும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
மண்ணுலகில் வாழ்ந்தாலும், மேலுலகைச் சார்ந்தவற்றையே நாம் நாட வேண்டும் என்பது சீடத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத வேண்டுகோள். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே.
புவுல் அடிகளைப் போல் பெரிய அளவில் முடியாவிட்டாலும் நமது சுற்றுவட்டாரத்தில், நமது கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வால், அன்புப் பணியால் வாழும், உண்மை கடவுளை நம்மால் எளிதாக வெளிப்படுத்த முடியும். இதற்குத் துணிவு தேவை. தூய ஆவியார் துணையின்றி நம்மால் இயங்க முடியாது. எனவே, அவரைப் பற்றிக்கொள்ளவும் அவரால் இயக்கப்பட நம்மை கையளிப்போம்.
கவலை எதற்கும் மருந்தாகாது. சிக்கலான சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினால் சிந்தனை தெளிவுப்பெறும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தன்னமில்லாத எண்ணத்தில் நற்செய்தியாளராக நம்மை நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! ” உரோ 12”2) என்று தான் பவுல் அடிகளும் அழைப்பு விடுக்கிறார்.
‘இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ (திப. 4:12) எனும் பவுல் அடிகளின் படிப்பினையின் உண்மையை அறிந்து வாழ்வோம்.
இயேசு எவ்வாறு, தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்பு செய்தாரோ, நாமும் இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வம் காட்டுவோம். நிலைவாழ்வு நமதாகும்.
உலகில் அல்ல மாறாக, அவரில் அமைதியை நாடுவோம். அமைதி கிட்டும். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ எனும் வரிகளுக்கு ஏற்ப உண்மை அமைதிக்கு ஊற்றாக இருப்பவர் ஆண்டவர் இயேசு. அவரை விடுத்து உலக இன்பங்களில் அமைதியைத் தேடினால், தேடும் அமைதி கிடைக்கப்போவதில்லை.
ஒரு காலத்தில் தூய ஆவியை கத்தோலிக்கத் திருஅவையில் மறக்கப்பட்ட கடவுளாகத்தான் இருந்தார். ஆனாலும், அவர் உறங்கவில்லை. உலகைப் புதுப்பிக்கும் பணி தூய ஆவியாரின் செயல்பாடாக இருந்து வருவதை நாம் மனதில் கொண்டு அவரைப் போற்றி வழிபடுவதோடு, அவரில் இணைந்து வாழ நம்மை கையளிப்போம்.
இயேசுவின் வழியாகவே நாம் மீட்பையும் விண்ணக வாழ்வைப் பெறவும் முடியும். ஆகவே, நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் வாழ்வும் வழியுமாக இருக்கும் இயேசுவை உலகிற்குத் துணிவோடு வெளிப்படுத்தும் வாழ்வை எப்படி வாழ்வோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். இயேசுவைப் பிறரோடு பகிராத வாழ்வு, பயனற்ற சாட்சிய வாழ்வு.