கடவுளில் நம்பிக்கையின்மை நிம்மதியை சீரழிக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

27 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 4 ஆம் வாரம் -சனி

தி. பணிகள்  13: 44-52                       

யோவான்  14: 7-14

முதல் வாசகம்.
 
முதல் வாசகத்தில், பவுல் அடிகள்  மற்றும் பர்னபா இருவரும் ஆசியா மைனர் பகுதியில் மறைத்தூதுப்   பயணத்தைத் தொடர்கின்றனர். அந்தியோகியாவில் உள்ள யூத தொழுகைக்கூடத்தில் போதித்தப்பின்,  அவர்கள் அங்கிருந்த யூதர்களால் பொறாமையின் நிமித்தம் வெளியேற்றப்பட்டனர். 

யூதர்கள்  தங்கள் சொந்த மறைநூலில் எழுதப்பட்ட மீட்பர் வருவார் என்பது இயேசுவைக் குறித்து எழுதப்பட்டது எனும்  உண்மையை உணர்ந்து ஏறக முடியாதவர்களாக இருந்தனர்.  ஆனால்,  பவுலும் பர்னபாவும் கொண்டு வந்த அதே மீட்பின்  செய்தியை புறவினத்தார் ஏற்கத் தொடங்கினர், மகிழச்சியுற்றனர்.   


நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில்,  தம்முடைய சீடர்களுக்கு அவரை அறிவது தந்தையாகிய கடவுளை அறிவதற்கு சமம் என்று இயேசு படிப்பிக்கிறார்.   திருத்தூதர் பிலிப்பு தந்தையாம் கடவுளைப்  பார்க்கக் கேட்டபோது, இயேசு அவரைப் பார்ப்பதும், அறிவதும் தந்தையைப் பார்ப்பதும் அறிவதும் சமம் ஆகும் என்கிறார்.  ஏனெனில்  இருவரும் பிரிக்க இயலாத இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாகக் கூறுவதோடு,  ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? என்று பிலிப்புவை வினவுகிறார். அடுத்து, அவரது வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டாலும், அவரது செயல்களின் பொருட்டாவது நம்பும்படி வேண்டுகிறார். நிறைவாக, இயேவின் பெயரால்   எதைக் கேட்டாலும் செய்வேன்” என்று  இயேசு உறுதிபட வாக்குறுதி அளிக்கிறார்.


சிந்தனைக்கு.

நற்செய்தியில், ‘நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்’ எனும் இயேசுவின் வார்த்தைகள் என்னை வெகுவாகக் கவர்கின்றன. இதில் உண்மையுள்ளதா? இயேசு செய்தவற்றைவிட பெரியவற்றை என்னால் செய்யக்கூடுமா? என்பதைப் பற்றி சிந்திக்கும்போது...வியக்கிறேன்? 

இதே பொருளில், ஒருமுறை  இயேசு,   “நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ என்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 21:21) என்றார். 

ஆம் இயேசு செய்ததுபோல நம்மாலும் செய்ய முடியும். இதற்கு அடிப்படை தேவை அவரிலும் தந்தையிலும்  அசைவுறா நம்பிக்கை. ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தால், அது ஒருபோதும் வீண்போகாது. தம்மிடம் நம்பிக்கை வைக்காதவர்களின் வாழ்வில் அற்புதம் செய்ய அவர் விரும்புவதில்லை என்று துணிந்து கூறலாம். ஆகவே, நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போமானால் (எபி 12:2) நம்மாலும் அற்புதங்கள் செய்ய இயலும்.  

ஒருநாள் பேதுருவால் கடல்மீது தொடர்ந்து நடந்து வரமுடியாமல் போனபோது, “நம்பிக்கை குன்றியவேன, ஏன் ஐயம் கொண்டாய்?’ (மத் 14:31) என்று இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டார்.  ஆனால், அதே பேதுருதான்  இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராய்ப் பல அருளடையாளங்களைச் செய்தார். உண்மையில், ‘நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க முடியாது’ (எபி 11:6). 

பல தருணங்களில் நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாக அமைகின்றது. ‘நம்பிக்கை வை’ என்னிடம் என்று பலமுறை கடவுள் சொல்லியும் நாம் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை விட ஒரு படி அதிகமாக நம்மீதே நம்பிக்கை வைத்து விடுகிறோம். பிறகு கடவுளைக் குறை கூறுகிறோம். வாழ்வில் நாம் தேவையற்ற பலரிடம் நம்பிக்கை வைத்து முடிவில் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால் நம்பிக்கை வைக்க வேண்டிய  கடவுளிடம் நம்பிக்கை வைக்க தயங்குகிறோம். ஏனெனில் அவர் கண்ணுக்குத் தெரிவதில்லை. 

நமக்குத் துன்பமோ, இன்பமோ நம் இயேசு எந்நாளும் நம்மோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கை நம்மில் ஆழப்பதிந்திருத்தால்,  நம்மைக் காக்க வல்லவர், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவாக இருப்பார்.  திபா 91:7--ல், ‘உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது’ என்பதில் நம்பிக்கை வைத்து வாழ்வோம். நிறைவாக,  ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்”(மத்தேயு 21:22)  என்று இயேசு கூறிய உறுதிமொழியில் மனதில் பதியவைப்போம். 

முதல் வாசகத்தில் யூதர்கள் இயேசு தான் வாக்களிக்கப்பட்ட மீட்பர் என்பதில் நம்பிக்கையற்றவர்களாக இருந்தபடியால் மீட்பைக் காணாமல் துன்புற்றனர். எனவே, நாம் விவேகத்தோடு,  யானையின் பலம் தும்பிக்கையில் என்றால் நமது பலம் இறை நம்பிக்கையில் என்பதை எந்நாளும் நினைவில் வைத்து இறைநம்பிக்கையில் வளர்வோம். 


இறைவேண்டல்.

நம்பிக்கையின் பிறப்பிடமாகிய ஆண்டவரே, என்னில் அவ்வப்போது எழுகின்ற நம்பிக்கையின்மை நீங்க உதவியருளும். ஆமென்

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452