உள்ளக் கலக்கத்திலிருந்து விடுதலை வேண்டுமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-நான்காம் வெள்ளி
I: திப:13:26-33
II: திபா :2:6-11
III:யோவான் :14:1-6

ஒரு பங்கில் அருள்பணியாளர் ஒருவர் பணி செய்து வந்தார். அவர் பங்கு பணி செய்து கொண்டிருக்கும் பொழுது பல்வேறு பிரச்சினைகளை அவர் சந்தித்தார். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அவர் மகிழ்ச்சியான அருள்பணி செய்து வந்தார். இதை கண்ட ஒரு நம்பிக்கையாளருக்கு வியப்பாயிருந்தது. எனவே அந்த நம்பிக்கையாளர் அருள்பணியாளரிடம்"   எவ்வாறு இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியோடு அருள்பணி செய்கிறீர்கள்? "என்று வினவினார். அப்பொழுது அருள்பணியாளர் "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று இயேசு கூறிய வார்த்தைகளை கூறினார். நம்முடைய வாழ்வில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் இயேசுவின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுது நாம் உள்ளம் கலங்க தேவையில்லை.

கொரோனா என்ற தொற்று நோயானது கடந்த மூன்று ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நாம் மனம் தளராது கடவுள் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுது,  நிச்சயமாக எத்தகைய சூழலிலும் கடவுள் நமக்கு பாதுகாப்பை கொடுப்பார்.

நம் அன்றாட வாழ்வில் நமக்கு வருகின்ற துன்பங்களை கண்டு உள்ளம் கலங்க வேண்டாம். ஏனெனில் கடவுள் நம்மை அன்பு செய்கின்றார். ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். எனவே அதற்கு தேவை நம்முடைய நம்பிக்கை வாழ்வு மட்டுமே. இந்த பாஸ்கா காலத்தில் கடவுளை நம்பிக்கை நிறைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். எனவே கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு உள்ளம் கலங்காமல் வாழ இன்றைய நாளில் முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  எங்கள் வாழ்வில் உள்ளம் கலங்காமல் நம்பிக்கையோடு நாங்கள் வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்