இயேசுவின் அமைதி திருஅவையில் உள்ளது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

30 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 5ஆம் வாரம் -செவ்வாய்

தி. பணிகள்  14: 19-28                                            

யோவான்  14: 27-31b

  
இன்றைய வாசகங்களில், பவுல் அடிகளும்  இயேசுவும்  தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு "பிரியாவிடை" உரைகளை வழங்குவதைக் கேட்கிறோம். அவர்கள் யாரை விட்டுச் பிரிகிறார்களோ  அவர்களை ஊக்குவிப்பதற்காக இவ்வாறு உரை நிகழ்த்துகிறார்கள்.  

முதல் வாசகம்.

அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள் என்று லூக்கா குறிப்பிடுகிறார். பவுல் அடிகள் பின்னர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்று அங்குள்ள கிறிஸ்தவர்களை “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார். 

இவ்வாறு,  புனித பவுல் ஆசியா மைனர்  பகுதி முழுவதும்  திருஅவை சமூகங்களைத் ஏற்டுத்தினார்.   நிறைவாக, அவர் மேற்கொண்ட பணியின் நோக்கமான நற்செய்தியை அறிவிப்பது, கிறிஸ்தவச் சமூகங்களைக் கட்டியெழுப்புவது  போன்றவற்றை நிறைவுச் செய்து,   தனது முதல் மறைத்தூதுப்  பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும்  அந்தியோக்கியா  திருஅவைக்குத்  திரும்புகிறார்.

நற்செய்தி.

1.இந்த பகுதியில், இயேசு,  பிரியும் முன்பாக  தம் சீடர்களுக்கு  ஆற்றிய ஆறுதல் பிரியாவிடை உரை இது. "அமைதியை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என இயேசு தம் சீடர்களுக்கு என்றுமுள அவரது அமைதியை வாக்களிக்கிறார்.  ஆனால், அவரிடமிருந்து வரும் அமைதி உலகம் சார்ந்த அமைதி போன்றதல்ல.  இந்த அமைதியானது உலகம் வழங்கக்கூடியவற்றிற்கு அப்பாற்பட்டது, ஏனெனில் அது ஆழமான ஆன்மீக மூலமான தந்தையிடமிருந்து  வருகிறது என்று இயேசு  அறிவுறுத்துகிறார்.

2."உலகம் கொடுப்பது போல் நான் உங்களுக்குக் கொடுப்பதில்லை.": இயேசு அவர் கொடுக்கும் அமைதி  உலகம் வழங்குவதில் இருந்து வேறுபட்டது என்பதை வலியுறுத்துகிறார். இது வெளிப்புற சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல, ஆனால் அவருடனான உறவைச் சார்ந்தது.

3."நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள  வேண்டாம்"என்றும் இயேசு தம்முடைய சீடர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர் அவர்களை விட்டுப்பிரிந்தாலும் அவர்களை நிலைநிறுத்துவதற்கு அவருடைய அமைதி அவர்களில்  இருக்கும் என்று  உறுதியளிக்கிறார்.

4.அடுத்து,  ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள் என்று சீடர்களைத் திடப்படுத்துகிறார்.

5.நிறைவாக, இயேசு தமக்கு வரவிருக்கும் சிலுவை மரணத்தைப் பற்றி எடுத்துரைத்து, உலகின் தீய சக்திகளின் மீதான தனது அதிகாரத்தையும்  தந்தைக்கான கீழ்ப்படிதலையும்  மீண்டும் உறுதிப்படுத்துகிறார். 

சிந்தனைக்கு. 

இன்று பல  குடும்பங்களில்   அமைதியற்ற சூழல் நிலவுவதைக் காண்கிறோம். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.  திருமணங்களில் பிளவும், தனிமையும் பலரை வாட்டி வதைக்கும் வேளை, அமைதி மருந்துக்கும் கிடைப்பதில்லை. கவலையும் பதட்டமும் நிறைந்த   விரும்பத்தகாத மனவுளைச்சல் பலரை ஆட்டிப்படைக்கிறது. இத்தகையோரில் சிலர் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.  

இன்றைய நற்செய்தியில் இயேசு நம் அனைவருக்கும் அமைதியைத் தருகிறார். அமைதி என்கிற வார்த்தை, எபிரேயத்தில் ”ஷலோம்” என்உ ஒலிக்கிறது.   ஒவ்வொருவரும் இந்த அமைதியை, நிம்மதியை விரும்புகிறோம். துன்பம் துயரம் இல்லாத அமைதிக்கு ஏங்கித் தவிக்கிறோம்.  நாம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளியில் தேடி நாளும் பொழுதும் அலைகிறோம்.  வாழ்க்கைப் பயணத்தில், நிம்மதி,  திருப்தி மற்றும் மன அமைதியை  தேடும் எண்ணற்ற வழிகள் உள்ளன என்பதை மறுப்பதுற்கில்லை.  பணம், விபச்சாரம், ஏமாற்றுதல், சுயநலம்,   வஞ்சகம் போன்ற அனைத்தும் ஏதோ ஒரு திருப்திக்கான நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள்தான். இவை  "உலகம்" நமக்கு அமைதியை வழங்கும் பல வழிகளில் சில எனலாம். 

உண்மையில் நம்முள்ளேயே அமைதியை தேடக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முள்ளேயே உறைந்திருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் கண்டு பிடித்தால், வெளிப்புறச் சூழ்நிலை நம்மை பாதிக்காது. ஒவ்வொரு நாளும் கடவுளின் விருப்பத்திற்கு,  திருவுளத்திற்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ளும்போது, கிறிஸ்துவின் அமைதியின் ஆறுதல் நம்மில் குடிகொள்ளத் தொடங்கும். 

ஆண்டவராகிய இயேசு விண்ணேற்றம் அடையும்போது, அவரது அமைதியை தன்னோடு எடுத்துச்  செல்லவில்லை. நமது நன்மைக்காக அதனை திருஅவையில் விட்டுச் சென்றுள்ளார். அது வற்றாத ஊற்று.  நம் மத்தியில் இருக்கிறது. இந்த அமைதியை நாம் தான் நாடி பெற வேண்டும்.   

இயேசுவின் திருத்தூதர்கள் சென்ற ஊர்களில் எல்லாம் இயேசுவின் அமைதியைப் பகிர்ந்தார்கள். நாம் எதைப் பகிர்கிறோம்? வெறுப்பையும், விரோதத்தையும், பகையையும், பொறாமையையும் அல்லவா பகிர்கிறோம். 

இயேசு வழங்கும் அமைதியை உலகத்தால் தர இயலாது. மாறாக, அது, தூய ஆவியாரிடமிருந்து வருவது. அந்த அமைதி, வாழ்வில் சோதனை வேளைகளில் நிலைத்திருந்து, புன்னகையோடு முன்னோக்கிச் செல்வதற்கு, நம் இதயங்களில் துணிச்சலையும் தரவல்லது.  எனவேதான்                     1 பேதுரு 3 :11-ல், ‘தீமையை விட்டு விலகி நன்மை செய்க!’ என்று நாம் அறிவுறுத்தப் படுகிறோம். 

இயேசு காற்றையும் கடலையும்  ''அமைதியாயிரு!'' என்றதும் மிகுந்த அமைதி உண்டாயிற்று அல்லவா? (மாற் 4:39). அவ்வாறே, அவர் நம் வாழ்க்கையிலும் எழும் அமைதியின்மையைப் போக்கவல்லவர்.  எனவே, உலகில் அல்ல மாறாக, அவரில் அமைதியை நாடுவோம். அமைதி கிட்டும். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’  எனும் வரிகளுக்கு ஏற்ப உண்மை அமைதிக்கு ஊற்றாக இருப்பவர் ஆண்டவர் இயேசு. அவரை விடுத்து உலக இன்பங்களில் அமைதியைத் தேடினால், தேடும் அமைதி கிடைக்கப்போவதில்லை. 

இறைவேண்டல்.

அமைதியின் ஆண்டவரே. நான் உம்மில் விரும்பித் தேடுகிற அமைதியை எனக்கு அருள்வீராக.   ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452