துன்பத்தில் இறையாட்சியின் மாட்சி காண்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 மே 2024  

பாஸ்கா 7ஆம் வாரம் - திங்கள்

தி.பணிகள் 19: 1-8

யோவான்  16: 29-33

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், பவுல் எபேசுவுக்கு வந்ததும், அங்கு  சில கிறிஸ்தவர்களிடம் பேசும்போது,  அவர்கள் திருமுழுக்கு  யோவான் நீரினால் அளிந்த முறைபடிதான் திருமுழுக்குப்  பெற்றார்கள் என்பதைக் கண்டறிந்தார்.  இதனால் அவர்களது திருமுழுக்கு தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நடைபெறவில்லை என்பதை அறிந்து,  பவுல் அடிகள் அவர்கள் மீது கைகளை வைத்து மன்றாட,  தூய ஆவியானவரையும்  அவரது வரங்களையும் பெற்றனர். 

பவுல் அவர்களுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, தொடர்ந்து அவர்களுக்குக் கற்பித்து, மேலும் பலரை விசுவாசத்திற்குக் கொண்டுவர முயன்றார் என லூக்கா குறிப்பிடுகிறார். 


நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், சீடர்கள் இயேசுவுடன் உரையடும்போது, “இப்போதுதான் உருவகம் (உவமைகள்) எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது என்றும். இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்றனர்.

இயேசு அவர்களிடம் மறுமொயாக,  "நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?" என்று வினவினார். அவர் அடுத்து அவருக்கு நிகழவிருக்கும்  கைது, விசாரணை மற்றும் சிலுவையில் மரணதண்டனை காரணமாக, அவர்கள் அனைவரும் ஓடிப்போய் சிதறிவிடுவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். இருப்பினும், இயேசு அஞ்சவில்லை, ஏனென்றால் அவர் தனது தந்தையுடன் இன்றித்திருக்கிறார்  என்பதை அவர் அறிவார். 

நிறைவாக, இயேசு சீடர்களைத் திடப்படுத்தும் வகையில், “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்று கூறினார்.   


சிந்தனைக்கு.

இயேசு, தமக்கான திருத்தூதர்களையும் சீடர்களையும் தேர்ந்துகொண்ட நாளிலிருந்து, தம்முடைய சீடராக இருப்பது சுலபம், எளிது என்று  ஒருபோதும் வாக்குறுதி அளித்ததில்லை. “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!” (மத். 5:11) என்றுதான் தொடக்க முதல் அவர்களை எச்சிரித்து வந்தார். அவரது இறுதி நாளிலும் அவர்களுக்கு நிகழவிருக்கும் துன்பதைக் கோடி காட்டி திடப்படுத்தினார். அவரது அன்றைய அறிவுறுத்தல் இன்று நமக்குமானது. இதனிமித்தம்,   நாம் திருமுழுக்குப் பெறுவது கிறிஸ்தவர் என்று பெருமை பாராட்ட அல்ல.

இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (மத். 16:24) என்பதுதன் அவரதி போதனைகளில் எதிரொலித்தது. ஆனாலும், இன்றும் நம்மில் பலர் கழுத்தில் சிலுவையை அழகு ஆபரணமாகத் தொங்கவிட்டுக்கொண்டு அது உணர்த்தும் பொருள் அறியாமல் இருக்கிறோம்.

துன்பத்தின் வழியாகத் தான் இறைவனின் மாட்சியை முழுமையாக அனுபவிக்க முடியும்.  நம்முடைய அன்றாட வாழ்வில் துன்பமே இல்லாத வாழ்வுக்காக இறைவேண்டல் செய்கிறோம். ஒரு நல்ல கிறிஸ்தவருக்கு இத்தகைய எண்ணம் தோன்றலாகாது. இது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது. துன்பம் வரும் பொழுது நம்மையே கடவுளின் திருவுளத்திற்கு  ஒப்படைக்கும் பொழுதுதான் துன்பத்திறகு ஒரு விடியல் பிறக்கும். துன்புறும் தம் மக்களை கடவுள் கைவிட்டதாக வரலாறு கிடையாது. நமது நம்பிக்கையின்மையினால்தான்  துன்பத்தில் தோல்வியைந் தழுவுகிறோம். 

அலகையின் ஆட்சி இங்குள்ளவரை துன்பம் தவிர்க்க முடியாததொன்று. துன்பதோடு வாழ்வது ஒரு போராட்டம். யோபு சொல்வது போன்று, “மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம்தானே! (யோபு 7:1). ஆனால், இயசுவோ, “நான் உலகின் மீது வெற்றிகொண்டுவிட்டேன்” என்று சொல்கின்றார். ஆகவே, துன்பத்தை நாம் ஒரு பொருட்டாக நினைத்து, முடங்கிவிடக்கூடாது. 

முதல் வாசகத்தில் பவுல் அடிகள் எபேசு நகர் மக்களுக்கு  தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்கு அளித்து, அவர்களைத் தேற்றியதுபோல், நேற்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடிய நாம்,  அதே ஆவியாரின் துணையோடு.  “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்றழைக்கும் இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்.

நிறைவாக, இயேசுவின் இன்றைய நற்செய்தியில்யில்,  அவர் தனது தந்தையுடன்  கொண்டுள்ள ஒன்றிப்பைப்போல,  நாம் இயேசுவோடு ஒன்றித்திருந்தால்   நாமும் தந்தையாம் கடவுளோடு ஒன்றித்திருக்க முடியும்  என்ற உண்மையைச்  சுட்டிக்காட்டுகிறார். இயேசுவுடனான ஆழ்ந்த ஒன்றிப்பும்  அதன்வழி கடவுளுடனான நமது ஒன்றிப்பும்  நமது மீட்புக்கும் மாட்சிக்கும் வழிவகுக்கும். 

 
 இறைவேண்டல்.

வல்லமையுள்ள ஆண்டவரே! எங்கள் அன்றாட வாழ்விலே ஏராளமான துன்பங்களை எதிர்கொள்கிறோம். இந்தத் துன்பங்கள் மத்தியில் நான் துவண்டுவிடாமல் இறைமாட்சிக்கு சான்று பகர தேவையான அருளைத் தந்தருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452