கிறிஸ்தவராய் இருப்பதல்ல, கிறிஸ்துவை அறிந்தவராய் இருப்பது! | ஆர்.கே. சாமி |VeritasTamil

3 மே 2024                                                                                            

புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள்-விழா

முதல் கொரிந்தியர் 15: 1-8

யோவான்  14: 6-14

முதல் வாசகம்.

புனித பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்து நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தார். பின்னர் அவர் திருத்தூதர்களுக்கும்  மற்ற ஆரம்பகால சீடர்களுக்கும்  தோன்றினார்.  இதை நேரில் கண்ட சாட்சிகளின் நம்பிக்கையில்தான் நற்செய்தி பரவத்தொடங்கியது. திருஅவை  தோற்றம் கண்டது.  திருத்தூதர்களே திருஅவையின் அடித்தளம். இன்று நாம் அனைவரும் இந்த அடித்தளத்தைக் கொண்டவர்கள் என்று வாசகம் விவரிக்கிறது.

நற்செய்தி.

இராவுணவின் போது  இயேசுவைப் பற்றிய பிலிப்புவினு  கேள்விகளை நற்செய்தி விவரிக்கிறது. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம், அவர் தான் வழி, உண்மை மற்றும் வாழ்வு என்றும், இயேசுவின் வழியாய் அன்றி  யாரும் அவருடைய தந்தையிடம் வருவதில்லை என்றும் உறுதிப்பட கற்பிக்கிறார். பிலிப்பு இயேசுவிடம்  “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்று கேட்டபோது,  இயேசு அவரிடம்  “பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? என்று மறுகேள்வி கேட்டார். 

நிறைவாக, அவர் செய்யும் செயல்களை அவரிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார் என்று முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் இயேசுவின் உயிர்ப்பை நேரில் கண்ட சாட்சிகளின் நம்பிக்கையில்தான் திருஅவை  கட்டப்பட்டது. திருத்தூதர்களே திருஅவையின் அடித்தளம் என்று பவுல் அடிகள் கொரிந்து நகர் மக்களுக்குக் கூறியதைக் கேட்டோம்.  இன்றும் நாம் நமது நம்பிக்கை  (விசுவாசப் பிரமாணத்தில்) அறிக்கையில் திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கையை அறிக்கையிடுகிறோம். திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை நமது பாரம்பரிய சொத்து.

நற்செய்தியிலோ, ஆண்டவர் இயேசு தந்தையாம் கடவுளுக்கு ஈடாக உள்ளார் என்பதை அறிகிறோம். ஆகவே, திருஅவை முதலில் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் எனும் மனப்போக்குக்கு  இடம் கிடையாது. வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவே  எனது பகலிடம் என்பவரே கிறிஸ்தவர். 

இன்று திருத்தூதர்களான  பிலிப்பு மற்றும் யாக்கோபு ஆகிய இருவரின் விழாவைக் கொண்டாடும் நாம், திருஅவையின் உருவாக்கத்திற்க்கு இவர்களின் பங்களிப்புக் குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

பிலிப்பு.

பிலிப்பு கலிலேயாவில் உள்ள  பெத்சாய்தாவில் பிறந்தவர். இவர்தான் ஆண்டவர் இயேசுவால் முதன்முறையாக நேரடியாக அழைக்கப்பட்டவர் என்று அறிகிறோம்.    இயேசு முதன்முதலில் பிளிப்பைத்தான் நேரடியாக அழைக்கிறார் என்பது உண்மை. இயேசு அழைத்த உடன் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார் (யோவா 1:46).

இன்றைய திருப்பலிக்கான நற்செய்தியில், பிலிப்பு மற்றும்  இயேசு இவர்களுக்கிடையிலான ஓர் உரையாடலைக்  கேட்கிறோம்.   இந்த உரையாடலில்  இயேசு  பிலிப்புவைக் கண்டித்ததாகத் தோன்றினாலும், இது மிகவும் இதயப்பூர்வமான ஒரு கண்டிப்பு என்றே கூற வேண்டும். 

“இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?” என்று இயேசு கேட்கிறார்.   இயேசு தம்முடைய சீடர்களுடன் அதிக நேரம் செலவிட்டார்.  ஒன்றாகப் பயணம் செய்து, ஒருவரோடு ஒருவர்  அதிக நேரம் செலவிட்டார்கள். எனவே, மற்ற திருத்தூதர்களைப போல் பிலிப்புவும் இயேசுவின் படிப்பினை பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று இயேசு எதிர்ப்பார்த்திருக்கக்கூடும். எனவே, பிலிப்புவின் கேள்வி குறித்து இயேசு  ஆச்சரியப்பட்டிருக்கலாம்.  

ஆகையால்,  இயேசு தொடர்ந்தார்: " இன்னும் நீங்கள் என்னை அறியவில்லையா...?"என்றார். இக்கேள்வியை இன்று நம்மைப் பார்த்துக் கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்?   சீடர்கள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள்தான் இயேசுவோடு இருந்தனர். நாமோ இருபது, முப்பது என ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் அவரோடு இருக்கிறோம்.   எந்தளவுக்கு அவரை அறிவோம்?  

உண்மையில் திருஅவை அதன் ஆன்மாவை இழந்துகொண்டிருக்கிறதாகப் பலர் வேதனையுறுகிறார்கள்.  ஏனெனில் நமது கிறிஸ்தவ வாழ்வு ஆலயத்தோடு முடிந்துவிடுகிறது. உலகிற்கான நமது பங்கை மறந்துவிடுகிறோம். உலகிற்கு ஒளி நாம் என்றால் அது ஏட்டளவில் இருப்பதில் பெருமை இல்லை. 

இயேசுவை நாம் தனிப்பட்ட முறையில் அறிய வேண்டும். அவரின் அழைப்பையும் படிப்பினையையும், எதிர்ப்பார்ப்பையும் தனிப்பட்ட முறையில் தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அறிந்தால் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றத்திற்கு எல்லையே இல்லை. 

நிறைவாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ என் வழியாய் அன்றி எவரும்  தந்தையிடம் வருவதில்லை” என்று இயேசு பகிர்கிறார். ஆம், இயேசுவே ஒரே  விண்ணக வாசல். உலக மாந்தர் அனைவுருக்கும் மீட்பு அவர் வழியாகவே நிகழக்கூடும். அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு  அனைவருக்குமானது.   இவரை நாம் அறிந்துகொண்டு உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். இப்பணியில் நாம் குருடர்களாக இருக்க முடியாது. 

அவருக்கான உண்மையான சாட்சிய வாழ்வு வாழ்வோமானால், நம்மை அவர், தன் தந்தையின் ஈரத்துக்கள்வார் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.   ‘இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ (திப. 4:12) எனும் பவுல் அடிகளின் படிப்பினையின் உண்மையை அறிந்து வாழ்வோம்.  


இறைவேண்டல்.

தந்தை இறைவனை எங்களுக்கு வெளிப்படுத்திய ஆண்டவரே, இறைவன்மீதும் உம்மீதும்  ஆர்வம் கொண்டு வாழும் வரத்தைத் தந்தருள உம்மை இறைஞ்சு மன்றாடுகிறேன். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452