நிலைபெயராத அன்பில், நிலைபெயராது வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

2 மே 2024                                                                                            

பாஸ்கா காலத்தின் 5ஆம் வாரம் -வியாழன் 

திருத்தூதர் பணிகள்  15: 7-21

யோவான்  15: 9-11

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் புனித பேதுரு புறவினத்தார் மத்தியில்  நற்செய்தியைப் பரப்புவதைப் பற்றி எழுந்த சர்ச்சைக்குத் தீர்வாகப்  பதில் கூறுகிறார். ‘நற்செய்தியை ஏற்றுக்கொண்ட நமக்கும் புறவினத்தாருக்குமிடையே   கடவுள் எந்த வேறுபாடும் காட்டவில்லை’ என்று உரக்கக் கூறி  சர்ச்சைக்கு முடிவு காண்கிறார்.  பவுல் அடிகளும்   பர்னபாவும்  யூதர் அல்லாதவர்களிடையே அதிகமாக நற்செய்தியைப்  பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

உலகமெங்கும் சென்று நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்படி இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நியமித்தபோது, இயேசு வலியுறுத்திக் கூறியதை  ஆரம்பகால திருஅவையின்  தலைவர்கள் நன்குப் புரிந்துகொண்டு செயல்பட்டனர்.  ‘புறவினத்தாரும்  விருத்தசேதனம் செய்ய வேண்டும் ‘ எனும் சர்ச்சை எழுந்தபோது, ‘கடவுளிடம் திரும்பும் பிறவினத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது’ என்ற முடிவுக்குத் திருத்தூதர்கள்  வந்தார்கள் என்பதை வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 


நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம் அன்பு மற்றும் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். இது 'இயேசுவே உண்மையான திராட்சைச் செடி’ எனும் நற்செய்தியின் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. 

அன்பு: 

இயேசு தம் சீடர்கள் மீது கொண்ட அன்பை தமக்கும் தந்தை கடவுளுக்கும் இடையே உள்ள அன்போடு ஒப்பிடுகிறார். அவர் தனது அன்பில் நிலைத்திருக்குமாறு தனது சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார், இது அவருடனும் அவரது போதனைகளுடனும் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

கீழ்ப்படிதல்: 

அன்புக்கும் கீழ்ப்படிதலுக்கும் உள்ள தொடர்பை இயேசு மேலும் வலியுறுத்துகிறார். தம்முடைய சீடர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால், அவர் தமது  தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, அவரது உண்மை சீடர்களும்  அவருடைய அன்பில் நிலைத்திருப்பார்கள் என்று கூறுகிறார். எனவே, கீழ்ப்படிதலை இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பதற்கான ஒரு வழியாக வெளிப்படுத்துகிறார்.  

மகிழ்ச்சி: 

தம்முடைய மகிழ்ச்சி தம்முடைய சீடர்களில் இருக்கவும், அவர்களுடைய மகிழ்ச்சி முழுமையடையவும் தமது நற்செய்தியைப்  பகிர்ந்துகொள்கிறேன் என்று இயேசு விளக்குகிறார்.  நிறைவாக,  இந்த வசனங்கள் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையிலான உறவில் அன்பு, கீழ்ப்படிதல் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இயேசுவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த அன்பையும், அந்த உறவைப் பேணுவதில் கீழ்ப்படிதலின் பங்கையும் மகிழ்ச்சியை அனுபவிப்பதையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.


சிந்தனைக்கு.

இயேசு தம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தைப் பற்றி எடுத்துரைப்பதை வாசித்தறிந்தோம்.  சீடர்களில் பலர்  அவரது இந்த அன்பான வேண்டுகோளை  ஒரு சுமையாகக் கருதக்கூடும்.   ஆனால் அதுதான் காலத்துக்குமான அவரது படிப்பினை. ‘என் அன்பில் நிலைத்திருங்கள்' என்பது அவரது முடிவான வேண்டிகோள். என்ன நேர்ந்தாலும் அவரது அன்பே நமது பகலிடமாக இருக்க வேண்டும். 

இயேசு தன் தந்தையாம் கடவுளின்  விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, தந்தையின் கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடித்தார். அதில் வெற்றியும் கண்டார். அவ்வாறே, கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப இன்பத் துன்பங்களை ஏற்று, இயேசுவின் அன்பில் நிலைத்து நின்று போராடி வாழ்வோர்  அனைவரும் இயேசுவின் மகிழ்ச்சியைப் பெறுவார்கள், அந்த மகிழ்ச்சி முழுமையானதாக இருக்கும். அந்த மகிழ்ச்சி உலகம் தர இயலாத மகிழச்சியாக இருக்கும். 

பத்து கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால்  நமக்கு மீட்பு கிட்டுவதில்லை. ஏனெனில் மீட்பு என்பது கடவுளின் கொடை.  நமது மீட்புக்குக் கடவுள் மனது வைக்க வேண்டும். எனவேதான் இயேசுவின் நிலைபெயராத அன்பில் நிலைத்திருந்து அவரது சீடராக வாழந்து காட்ட வேண்டும். 
இது கடினம் தான். சீடத்துவ வாழ்வு என்பது மலர் தூவப்பட்ட  பஞ்சு மெத்தையில் படுத்தறங்குவது போலன்று. அது இயேசு மேற்கொண்ட கல்வாரிப் பயணத்திற்கு ஒப்பானது. 

இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு இக்கருத்தை நன்குத் தெளிவுப்படுத்துகிறார். அவர், யூதர்களின் திருச்சட்டத்தைச் சுட்டிக்காட்டி,  முன்னோர்களின் சட்டத்தைப்  புதுக் கிறிஸ்தவர்களான புறவினத்தார்  மீது சுமத்த  வேண்டாம் என்கிறார். திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் மட்டும் மீட்பு  கிடைத்துவிடாது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். மீட்பு என்பது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கான வெகுமதி அல்ல என்று வலியுறுத்திக் கூறுகிறார். 

ஆகவே, இயேசுவில் புதுப் படைப்புகளாக உள்ள நாம், அவரது அன்பில் நிலைபெயராது நிலைத்திருப்பதோடு, அவரது கொடைகளையும் அருளையும் பாடுகளையும்  ஏற்று வாழவும் முன்வர வேண்டும். உலகின் பல அரசுகள் திருஅவையைய அழித்தொழிக்க முயன்றபோது, பலர் சிந்திய இரத்தத்தினால், திருஅவை மீண்டு வந்தது என்பது வரலாறு. 

ஆகவே, இயேசு எவ்வாறு, தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்பு செய்தாரோ,  நாமும் இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும்  கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வம் காட்டுவோம்.  நிலைவாழ்வு நமதாகும். 


இறைவேண்டல். 

என் அன்பில் நிலைத்திருங்கள் என்று பணித்த அன்பு இயேசுவே, உமது அன்பில் நிலைபெயராது, நிலைத்து வாழும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்,


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452