சிலுவைப்பாதை -முதல் வெள்ளி | 16.02.2024 | ஆர்.கே.சாமி

 தொடக்கவுரை

அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே!

இயேசு தேடுவது வெறும் பக்தர்களை அல்ல, சீடர்கள். வரலாற்றில் நடந்தேறிய இயேசுவின் பாடுகளை மனக்கண்முன் கொண்டு வந்து தியானிக்கவும், உண்மை சீடர்களாக நம்மை உருமாற்றவும் துணைபுரியும் சிலுவைப்பாதைத் தியானத்தில் முழு உள்ளத்தோடும் ஆற்றலோடும் கலந்து, இயேசுவின் பாடுகளில் நம்மையும் இணைத்து, உள்ளத் தாழ்ச்சியோடு நம் மீட்புக்கான பாதையைத் தொடங்குவோம்.  நாம் திருமுழுக்கு அளிக்கப்பட்டு மறைத்தூதுப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொண்டு, நாம் ஏற்கும் சிலுவைப் பாதை  இறுகிப் போன இதயங்களையும் இளகிடச் செய்யும் இறைமகன் இயேசுவின் பாதை என்பதை நினைவில் கொள்வோம்.

 

திருச்சிலுவைப் பாதை தொடக்க இறைவேண்டல்

முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்!

எல்லோரும்:     இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

                                                     சிலுவை பாதை

முதல் நிலை

                                  இயேசு சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறார்

stage 1

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  பிலாத்து மக்களை நோக்கி, “மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை,” என்றான்.  

திரண்டிருந்த மக்கள் அனைவரும், “இவன் ஒழிக!   இவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். “இவனுடைய  இரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இருக்கட்டும்” என்று சாபத்தைக் கேட்டு வாங்கினார்கள்.

                   ஏன் இந்த அவல நிலை? எது நல்லது எது கெட்டது என்பது நமக்குத் தெரிந்தும் பல தருணங்களில் நாமும் இப்படிதான், சிலரைத் திருப்திப்படுத்த பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிலாத்து அவனது மனசாட்சியிலிருந்துத் தப்பித்துக்கொள்ள இயேசுவைக் கைக்கழுவியதைப்போல நாமும் உண்மைக்குப் புறம்பாகத் தீர்ப்பிட விழைகிறோம்.

வலுவற்றவர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது சுமத்தப்படும் அநியாயத் தீர்ப்புகளுக்கு நாமும் துணை போகிறோம். உண்மைக்குச் சாட்சியம் பகராமல் ஒதுங்கி நிற்கிறோம்.  அன்பியங்களில் ஏற்றத்தாழ்வு பார்த்து பழக்கிறோம். பிறரைத் தகுதியற்றவர்கள் என ஒதுக்குகிறோம்!

மக்கள்:           மனுக்குலத்தை மீட்கத் திருவுளமான ஆண்டவரே, வீண் பழியை அமைதியாக  ஏற்றீர். சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறீர் என்பதை அறிந்தும், அதன் விளைவால் சந்திக்க வேண்டிய துன்பத்தையும் துயரத்தையும் மனமுவந்து ஏற்றீர். ‘அஞ்சாதீர்கள்!’ என்று உம் சீடர்களுக்கு கூறிய வார்த்தைக்கு நீர் உயிர் கொடுத்தீர்.

 ஆண்டவரே, எங்கள் குடும்பத்தில், உறவினரிடத்தில் திருஅவையில், பணி செய்வோர் மத்தியில், அன்பியங்களில் நாங்களும் இத்தகைய அநியாயத் தீர்ப்பைப் பிறருக்கு அளித்து, அவர்களுக்கு மன வேதனையையும், பிரிவையும் தந்துள்ளோம். உம்மைப்போல், பொறுமையும், நிதானமும் கொண்டு வாழும் வரத்தை எங்களுக்குத்  தாரும்.

முதல்வர்:  சிலுவை மரணம் ஏற்றஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

பழிகளைச் சுமத்தி பரிகசித்தார்-உயிர்                                      

பறித்திட எண்ணி தீர்ப்பளித்தார்

பழிகளைச் சுமத்தி பரிகசித்தார்

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

இரண்டாம் நிலை

                                                   இயேசு சிலுவை சுமக்கிறார்

stage 3

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  ஒருவன் சிலுவை சுமக்கிறான் என்றால், அவன் மனிதனாக வாழத் தகுதியற்றவன் என்பதாகும். அன்று சிலுவை அவமானத்தின் சின்னம். ஆண்டவராகிய இயேசு அந்த அவமானத்துக்குரிய சிலுவையை ஏற்றார். சிலுவையைச் சுமந்து கொண்டு மண்டை ஓடு என்னுமிடத்திற்குச் சென்றார் (யோவா 19:17). இங்கே மரங்கள் சிலுவையாகின. மனிதர்கள் மரங்களாயினர்.

சிலுவையைச் சுமப்பதன் வாயிலாக உலகில் மாற்றம் கொணர முடியும் என்ற நம்பிக்கை அவரில் மேலிட்டது.  வாழ்வில் சந்திக்கும் பல இடர்பாடுகள், துன்பங்கள், பிரச்சனைகள், சோதனைகள் பலருக்குச் சுமக்க இயலா சுமையாகிவிட்டன. அதுவே அன்றாட சிலுவையாக மாறிவிட்டது. 

சோர்ந்துப் போனாரா இயேசு?   சிலுவை வேண்டாம் என்றாரா இயேசு?   இடையில் சிலுவையை இறக்கி வைத்துவிட்டு ஓட்டம் பிடித்தாரா இயேசு?       சிலுவையைச் சுமக்காத வாழ்வு கிறிஸ்தவ வாழ்வல்ல. இதை உணராதவர் கிறிஸ்தவர்அல்ல.

மக்கள்:    ஆண்டவரே, எங்கள் வாழ்வின் இலக்கை அடையும் முயற்சியில் நாங்கள் பயணம் செய்யும் வேளையில், இடையில் காணும் துன்பங்களை, துயரங்களை, இடர்பாடுகளைக் கண்டு சோர்ந்து போகாமல் பயணத்தைத் தொடரும் மனோபலத்தைத் தாரும் .

சிலுவையை முன்னாலும் உலகத்தைப் பின்னாலும் வைக்கும் மனப்பக்குவத்தைத் தாரும்.

எங்கள் குடும்பச் சுமைகளை நாங்கள் சுமந்தாக வேண்டும் என்பதில் நாங்கள் சோர்ந்துவிடாமல் காத்தருளவீராக.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

தாளா சிலுவை சுமக்கவைத்தார்-உமை

மாளாத் துயரில்  துடிக்க வைத்தார்

தாளா சிலுவை சுமக்கவைத்தார்

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

 

மூன்றாம் நிலை

                                     இயேசு முதல் முறை கீழே விழுகிறார்.

stage 3

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  கடந்த இரவு முதல் அவர் ஒன்றும் உண்ணவில்லை, நீர் அருந்தவுமில்லை. சோர்வுற்ற உடல். பாரச் சிலுவையின் பளுவைத் தாங்க இயலாமல் இயேசு தரையில் விழுகிறார். இயேசுவுக்கு அது தோல்வியா? இல்லை. எழுகிறார், மீண்டும் பயணத்தைத் தொடர்கிறார்.  வாழ்வில் ஏழ்மையால் வீழ்ந்தவர்களும், பிறரால் வீழ்த்தப்பட்டவர்களும் அடங்குவர். யாராகினும் எழ முயற்சிக்க வேண்டும் என்கிறார் இயேசு. முயற்சி திருவினையாக்கும். வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் வருவது இயல்பு.

சில வேளைகளில் பிறர் சூழ்ச்சியாலும், பொறாமை, தன்னலம் போன்ற எண்ணங்களாலும் கீழே தள்ளப்படுகிறோம்.  கீழே விழ காரணமானது எதுவானாலும், எழ வேண்டும் என்ற மனோபலம் தேவை.

மக்கள்:    ஆண்டவரே, ஏழ்மையில் விழுந்து கிடப்போரையும் பார்த்தும் பார்க்காமல் போகிறோம். அவர்கள் மீண்டும் எழ நாங்கள் உதவி செய்வதில்லை.  வீழ்வதில் தவறில்லை, வீழ்ந்தால் எழ முயற்சிக்காமல் இருப்பதே பெருந்தவறு என்பதை நாங்கள் உணரவும் பிறரை வீழ்த்தாமல் இருக்கவும் எங்களுக்கு உதவியருளும். வீழ்ந்து கிடப்பவர்களை நம்பிக்கையூட்டி தூக்கிவிடவும்  உமது அருள் தாரும்.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

விழுந்தீர் சிலுவையின் பளுவோடு-மீண்டும்                                                        

எழுந்தீர் தூயர்களின் நினைவோடு                                                                 

 விழுந்தீர் சிலுவையின் பளுவோடு

எனக்காக இறைவா எனக்காக

 இடர்பட வந்தீர் எனக்காக

 

நான்காம் நிலை

                                           இயேசு தன் தாயைச் சந்திக்கிறார்.

stage 2

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  அன்று இரவு இயேசுவுக்குக் கிடைத்தத் தீர்ப்பைக் கேள்விப் பட்டு துடித்துப்போன மரியன்னை கொல்கோத்தா மலைக்குப்போகும் பாதையில் நின்று தன் மகனைக் காண விழைகிறார். பயணத்தின் பாதையில் தாய் வருகிறார்.  உலக மீட்புக்காக தன் மகனை தருகிறார். தாயின் கண்ணெதிரே மகனின் மரண ஊர்வலம் அரங்கேறுகிறது. அதையும் உலக மாந்தருக்காக மகனின் மரணத்தை ஏற்கிறார் அன்னை மரியா. வியாகுலத் தாயாக கண்ணீரும் கம்பலையுமாக அவர் நிற்கிறார். ஆனாலும், அவரது உள்ளத்தில் வீரம் தெரிகிறது. “இவர் உன் மகன் அல்ல, உன்னதக் கடவுளின் மகன்” என்ற வானத்தூதரின் வார்த்தைகளை அன்னை மரியா மறக்கவுமில்லை. ஆகையால்தான் ஒரு தியாகியை, அன்பின் சிடரை , தன் மகனை அவர் தொடர்ந்து வழி அனுப்புகிறார். சென்று வா மகனே! உலகை வென்று வா! என்று.

மக்கள்:          ஆண்டவரே, அன்பு இயேசுவே, உமது சிலுவைப் பாதையில் நீர் உமது தாயைச் சந்தித்த போது, ஊக்கம் பெற்றீர். அன்னை மரியா வீரத் தாயாக நீதிகாக்க உம்மை அனுப்பிவைத்தார். சுயநலம் அற்ற உன்னத தாயை எங்களுக்குக் காட்டினீர். நாங்களோ, கருச்சிதைவு, சிறார் கொடுமை, ஈன்ற பிள்ளைகளை அனாதையர்களாகத் தவிக்கவிடும் சுயநலம், பொறுப்பற்ற பிள்ளை வளர்ப்பு போன்ற செயல்களால் அவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் நல்ல குடும்பத் தலைவர்களாக, தலைவிகளாக வாழ உதவியருளும்.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

   தாங்கிட வொண்ணாத் துயருற்றே-உம்மைத்
தாங்கிய அன்னை துயறுற்றாள்
தாங்கிட வொண்ணாத் துயருற்றே 

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

 

ஐந்தாம் நிலை

                                    சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார்.

stage 5

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  சீரேன் ஊரைச் சார்ந்த சீமோன் என்பவர் வழியில் வருகிறார். அவர் மேல் இயேசு சுமந்த சிலுவையை வைத்து சுமக்கச் சொல்லுகிறார்கள். அவரும் சுமக்கிறார். ஏன்? இயேசு வழியில் இறந்துவிடக் கூடாது அல்லவா? கைமாறு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இயேசுவின் வரலாற்றில் ஓர் இடத்தைப் பிடித்தார். இயேசுவின்  துன்பத்தை அந்த சிறிது நேரம் பகிர்ந்து கொண்டதால் சீமோன் உயர்த்தப்பட்டார். துன்பத்தை பகிர்தலில் அவர் இன்புற்றார். சாலையோரம் நின்று வேடிக்கைப் பார்த்தோர் மத்தியில் சீமோன் தனித்துக் காணப்படார். 

மக்கள்:          ஆண்டவரே, பாடுகளை ஏற்று பாசம் தந்தவரே, சீமோனைப் போல பிறருக்கு உற்ற நேரத்தில் உதவும் துணிவைத் தந்தருளும். வாழ்க்கைப் பயணத்தில்  உதவிக்கு ஏங்கதி தவிப்போர் மத்தியில் நாங்கள் வாழ்ந்தும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. எங்களின் பிறந்தநாள், திருமண நாள் என விழாக் கொண்டாட்டங்களை மிகைப்படுத்தும் நாங்கள் அருகாமையில் துன்பறுவோரின் துன்பத்தை, கைவிடப்பட்டோரின் துயரத்தை சிறிதளவு கூட பகிர முன்வருவதில்லை.  மனித நேயத்தை மறந்து வாழ்கிறோம். மனிதநேயத்தை ஏற்கும் மனப்பக்குவத்தை எங்களுக்குத் தாரும்.

முதல்வர்:         சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

மறுத்திட முடியா நிலையாலே-சீமோன்

வறுத்தினார்  தன்னை உம்மோடு

மறுத்திட முடியா நிலையாலே

எனக்காக இறைவா எனக்காக

 இடர்பட வந்தீர் எனக்காக

 

ஆறாம்  நிலை

                         வெரோணிக்கா, இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள்.

stage 6

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  சிலுவைப் பாதையில் வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்தாள் என எளிதாகக் கூறுகிறோம்.  நூற்றுக்கணக்கானோர் அங்கு இயேசுவை வேடிக்கைப் பாரத்துக்கொண்டிருந்த வேளை ஒரே ஒரு பெண் மட்டும் இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள். வல்ல செயல் செய்ய அறிவும் திறமையும் மட்டுமல்ல துணிவு தேவை. கொடூரமாக இரத்தக்கறை படிந்த இயேசுவின் முகத்தைத் துடைத்து தெளிவுப்படுத்த வெரோணிக்கா முன் வந்தார். துணிவு தூய ஆவியின்கொடை.  துணிச்சல் உள்ளோர் சாதிப்பர். தாய்க்குலத்தைக் கோழைகளாகப் பார்ப்போருக்கு வெரோணிக்கா ஒரு பாடம்.

மக்கள்:          ஆண்டவரே, வெரோணிக்கா கொண்டிருந்த துணிவை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி கூறுகிறோம். திருஅவையின் திருமுகமும் எங்களின் பலவீனத்தால் கறைபடிந்துள்ளது. அதை துடைத்துத் தெளிவுப்படுத்த துணிவற்றவர்களாக இருக்கும் எங்கள் மேல் இரக்கமாயிரும். தடைகளைத் தாண்டி எங்கள் குடும்பத்தையும் திருஅவையையும் அழகுப்படுத்த நாங்கள் விழைவோமாக. தூய ஆவியார் துணிவு என்ற கொடையால் எங்களை நிரப்புவாராக.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

நிலையாய் பதிந்தது உம்வதனம்-அன்பின்

விலையாய் மாதின் சிறு துணியில்

நிலையாய் பதிந்தது உம்வதனம்

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

 

ஏழாம்  நிலை

                              இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்.

stage 7

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  ‘மனம் வலுவானது உடல் வலுவற்றது’ என்று இயேசு ஒருமுறை பேதுருவிடம் கூறினார். சிலுவைப் பாதையில் நைந்துப் போன அவரது உடல் வலிமை இழந்தது. தள்ளாடி தள்ளாடி நடந்த இயேசு  இரண்டாம் முறை கீழே விழுகிறார். ஆனாலும் சிலுவையில் தான் நான் உயிர் விடுவேன் என எண்ணியவராய் மீண்டும் நடக்க எழுகிறார். அவரது இலட்சியம்  அவரை எழ வைத்தது. தந்தைக்கும் அவரது விருப்பத்திற்கும் இறுதிவரை கீழ்ப்படிகிறார். பாவத்தில் அடிக்கடி விழும் நாம் மட்டும் அதை உதறித் தள்ளிவிட்டு எழ தவறுகிறோம். செய்த பாவத்தை மீண்டும் மீண்டும் செய்கிறோம்.

மக்கள்:    அன்புநிறை இயேசுவே, நீர் எதிர்பார்க்கும்படி எங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள எங்கள் உள்ளத்திற்கு வலுவளித்து, எங்களை மீட்டருளும். பாவத்தில் விழும் நாங்கள் மீண்டும் துணிவு பெற்று எழ அருள்புரியும். எங்கள் வாழ்வில் எப்பொழுதும் இன்பமே சூழ வேண்டும் என்பதைவிட துன்பத்தையும் ஏற்று வாழும் மனப்பக்குவத் தையும் விழுந்து எழுவதில்தான் வெற்றி அடங்கியுள்ளது என்பதை நாங்கள் உண்மையாக ஏற்று வாழவும் அருள்புரிவீராக.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

ஓய்ந்தீர் சிலுவை சுமந்ததினால்- அந்தோ

சாய்ந்தீர் நிலதில் மறுமுறையும்

ஓய்ந்தீர் சிலுவை சுமந்ததினால்

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

 

எட்டாம் நிலை

                                இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் கூறுகிறார்.

stage 8

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  இரக்கமே  உருவான இயேசுவைப் பிடித்துக் கொலைக் களத்திற்குக் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி எருசலேம் முழுவதும் பரவியது. அவரால் நன்மை அடைந்தோறும், அவரது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மனம் திரும்பியோரும் அலறியடித்துக்கொண்டு வீதிக்கு வந்தனர். அதில் மகளீர் கூட்டம் கண்ணீர் கடலில் மூழ்கியது. ஒன்றும் செய்ய இயலாத சூழலில் தவித்தனர். ‘எருசலேம் மகளீரே! நீங்கள் எனக்காக அழ வேண்டாம். மாறாக, உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்றார்.

 எருசலேமுக்கு நிகழப் போகிற அழிவையும் துன்பத்தையும் முன்னறிவிக்கிறார். இயேசுவின் பாடுகளை உருக்கத்துடன் தியானிக்கும் நாம், முதலில் நம் நிகழ்கால வாழ்வையும் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் குடும்பத்தின், பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

மக்கள்;             அன்பு நிறை இயேசுவே, எங்களைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கும் எங்கள் குடும்பங்களில் நிகழும் அனைத்துத் தீச்செயல்களுக்கும் நாங்கள் பொறுப்பேற்று வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க உதவியருளும்.  “என் மக்களே, உங்களுக்காவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று நீர் கூறும் வார்த்தைகள் எங்களுக்குக் கேட்கின்றது. இனியும் நாங்கள் பொதுநலத்தில் அக்கறைக் கொண்டு நல்ல சீடர்களாக உம்மை அணுகிவர அருள்புரிவீராக.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

விழிநீர் பெருகிய மகளீருக்கு-அன்பு

மொழி நீர் நல்கி  வழி தொடர்ந்தீர்

விழிநீர் பெருகிய மகளீருக்கு.

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக.

 

ஒன்பதாம்  நிலை

                                     இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்.

stage 9

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  கீழே விழுவதால் நம் வாழ்வு முடியப்போவதில்லை. எழுவதில்தான் வாழ்வின் நியதி உள்ளது. வீழ்ந்து எழுகின்றபோது கிடைக்கும் அனுபவமும், முதிர்ச்சியும் தனி மகிழ்வைக் கொடுக்கும். இயேசு ஒரே பயணத்தில் மூன்று முறை தரையில் விழுந்தார். மூன்று முறையும் தனி அனுபவத்தோடும், சிந்தனையோடும் எழுந்து நடந்தார். நம்மில் பலர் வாழ்வில் தடுமாறி வீழ்ந்தவரைக் கண்டு நகைக்கிறோம். வறுமையாலும், எதிர்பாராத துன்பத்திலும் வஞ்சகத்தாலும் வீழ்ந்தாரைக் கண்டும் காணாமல் போகிறோம்.  வீழ்ந்தவரை சகோதரராக, சகோதரியாகப் பார்கிறோமா? கைத்தூக்கிவிட முனைகிறோமா? மாறாக, முகம் சுழிக்கிறோம்.

மக்கள்:    பாடுகளை ஏற்று அன்பு மழை பொழிந்த இயேசுவே! எங்கள் பாவங்களின் சுமையால் நீர் விழுந்தீர். நாங்களோ அதை இன்னும் உணராதவர்களாய் தொடர்ந்து பாவச் செயல்களை விரும்பி, துணிவோடு செய்கிறோம். உம் வார்த்தையிலும் மன்னிப்பிலும் நம்பிக்கை வைக்காதவர்களாய்  தொடர்ந்து வாழ்வை இழந்து வருகிறோம்.  பாவத்தில் வீழ்ந்த போதெல்லாம் தாவீதைப் போல, ‘உமது அளவற்ற இரக்கத்திற்கு ஏற்ப என் குற்றங்களை மன்னித்தருளும்’ என்று உம்மை நாடி வர மனவுறுதியைத் தாரும்.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர்-கால்

ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர்

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக.

 

பத்தாம்  நிலை

                                      இயேசுவின் ஆடைகளை களைகிறார்கள்.

stage 10

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு   நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

  முதல்வர்:  ஒரு மனிதனின் தன்மானத்தைக் காப்பது அவனது ஆடை.  அதுவும் களையப்படுகிறது. இயேசு அதையும் சாந்தமாகத் தாங்கிக் கொள்கிறார். ஒரு மனிதனை அவமானப் படுத்தவும் ஓர் எல்லையுண்டு. இந்த மனிதகுலம் அதையும் தாண்டி செயல்படுகிறது. ஒரு குற்றமும் அறியாதவருக்கு இந்த கோலம். ஆடைகளையும் களைய மனம் கொண்ட இந்த மனிதகுலத்தில் நாமும் பங்காளிகள். எனவே இதற்கு நாமும் பொறுப்பு வைகிக்கிறோம். இன்றும் இதுபோன்று வேண்டாதவரை அவமானப்படுத்தும் செயல்களில் இறங்குகிறோம். ஒன்றுமில்லாதோரை, வறியோரை, துன்பத்தில் துவல் வோரை மேலும் துன்பறுத்தும்போது, மனிதநேயம் மறுக்கப்படுகிறது என்பதை உணர்கிறோமா?

மக்கள்:    இரக்கமிகு இயேசுவே, உமது அன்பை மறந்து வாழும் எங்கள் மீது இரக்கம் வையும். அன்பு, பாதுகாப்பு, அரவணைப்பு என்ற ஆடைகள் இன்றி தத்தளிக்கும் மக்களைக் கண்டு இரங்க எங்களுக்கு உதவியருளும். புனித அன்னை திரேசா செய்த அறச் செயல்களில் ஓரளவாவது நாங்களும் செய்திட எங்களும் வல்லமை தாரும். பிறரை இழிவுப்படுத்தும் செயல்களிலிருந்து விடுபட்டு நன்மை செய்து வாழும் வரத்தை தருமாறு வேண்டுகிறோம்.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர்-இரத்த

மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர்

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக.

 

பதினோறாம்  நிலை

                                        இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்..

stage 11

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  “உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்’ (லூக்கா 6: 29) என்று அறிவுறுத்திய இயேசு, இதோ கன்னத்தை மட்டுமல்ல, ஆடையை மட்டுமல்ல, அவரது உடல் முழுவதையும் சிலுவை மரத்தில் அறைகின்ற ஆணிகளுக்கு மனமுவந்து அளிக்கிறார். உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் இறங்கும் ஆணிகள் மரத்தோடு அவரை தைக்கின்றன. துன்பத்தையும் இயேசுவையும் பிரிக்க இயலாது என்பது இச்செயலின் பொருளாகிறது. துன்பத்தைக் கண்டு பயந்தோடும்பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படும் இயேசுவை அல்ல, நீதிக்குத் தலைவணங்கும் இயேசுவை நாம் நாள்தோறும் சிலுவையில் அறைகிறோம்.

மக்கள்:    அன்பான இயேசுவே, கருணையின் கடலே, அன்று அவமானத்தின் சின்னமான சிலுவயில் நீர் இணைக்கப்பட்டீர். அநீதிக்குத் தலைவணங்காமல், நீதிக்கு உங்களை அரப்பணியுங்கள் என்கிறீர். சிலுவையில் நீர் அறையப்படவில்லை. மாறாக எங்களின் பாவங்கள் அறையப்பட்டன என்பதை நாங்கள் ஏற்கிறோம். இனியும் தொடர்ந்து பாவ வாழ்வில் உழலாமல் சகோதர பாசத்தோடு ஒருவரை ஒருவர் அன்பு செய்ய எங்களுக்கு ஆற்றல் தாரும். நீர் சிலுவையில் அறையப்பட்டும் வேளையில் அன்னை மரியா கொண்ட அதே வியாகுல மனநிலையை பிறருக்கு நாங்கள் தீங்கு செய்யும் போது நாங்கள் நினைவுகூர்ந்து வாழ வரம் தாரும்.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

பொங்கிடும் உதிரம் வடிந்திடவே-உம்மைத்

தொங்கிட செய்தார் சிலுவையிலே

பொங்கிடும் உதிரம் வடிந்திடவே

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக.

 

பன்னிரெண்டாம்  நிலை

                                        இயேசு  சிலுவையில் உயிர்விடுகிறார்.

stage 12

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  நண்பகல் நேரம். நாடெங்கும் இருள் சூழ்ந்தது. இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். இயேசு உயிர்விடும் அந்த கொடூரமான நிகழ்வை எருசலேம் கண்டு களித்தது. பலருக்கு அதிர்ச்சியாகவும் சிலருக்கு மகிழ்ச்சியாகவும் அக்காட்சி அமைந்தது. ஆனால் இலட்சியத்துக்காக வாழ்ந்து மறையும் வாழ்வு நித்தியத்திற்கும் நிலைக்கும் என்பார்கள். இயேசுவின் இலட்சிய வீர மரணம் ஒரு சரித்திரம்.

எல்லாம் நிறைவேறிற்று என்று அவரால் சொல்ல முடிந்தது. நமது வாழ்வுக்கு ஓர் இலட்சியமுண்டா? இலட்சியமற்ற கிறிஸ்தவ வாழ்வால் நாம் இயேசுவைத் தொட பார்க்கிறோம். அகங்காரம், ஆனவம், பொறாமை, தன்னலம், பொய்  போன்ற ஆணிகளால் பிறரை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறோம்.

மக்கள்:    இரக்கமிகு இயேசுவே! ‘எல்லாம் உனக்காக’ என உம்மை பலியாக்கிய ஆண்டவரே! எப்படியும் வாழ்வது வாழ்க்கையல்ல, இப்படிதான் வாழ வேண்டும் என்பதை உமது மரணத்தால் எங்களுக்குக் கற்பித்தேரே.  உமது உன்னத சீடர்களாக விளங்க நாங்களும் பிறருக்காக எங்களை அர்ப்பணித்து வாழ மனவுறுதி தாரும். எங்கள் சொல்லும் செயலும் ஒன்றித்த கிறிஸ்தவ வாழ்வுக்கு மன்றாடுகிறோம்.  அநீதிக்கு வளைந்து

கொடுக்காமலும்நீதிக்கு நிமிர்ந்து நிற்கும் மனவலிமையைத் தந்தருளும்

 

பதிமூன்றாம்  நிலை

                           இயேசுவின் உடல் தாயின் மடியில் கிடத்தப்படுகிறது.

stage 13

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  அன்று ‘செல்லக் கிளியே! கண்ணே! மணியே! என்றும் ஆராரோ ஆரிராரோ என்றும் தாலாட்டிய அதே மடியில் இன்று உயிரற்ற இயேசுவின் உடல் துவண்டுக் கிடக்கிறது. அன்று வானந்தொட்ட ஆனந்தம். இன்றோ தாங்கொன்னா துக்கம். இவர் தியாகத் தாய். இவர் வியாகுலத் தாய். இறையரசுக்காக தன் மகனை துணிவோடு பலிகொடுத்த வீரத்தாய்.  கண்ணில் கனிவும், மனதில் உறுதியும், செயலில் பணிவும்,    வாழ்வில் தாழ்ச்சியும் கொண்டிருந்த அதே கன்னி மரியா அமைதியின் உருவாகவும் காணப்படுகிறார். இவர் நம்மிடம் கேட்பதெல்லாம், ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம்  செய்யுங்கள்”(யோவா 2:5) என்பதாகும். நாம் இந்த அன்பான  வேண்டுகோளை நிறைவேற்றுகிறோமா?

மக்கள்:    அன்பான இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர் துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் அன்னை மரியாவைப் போல், சகிப்புத் தன்மையோடும், கனிவோடும் இரக்கத்தோடும், பொறுமையோடும்  பிறருடைய மீட்புக்காக அயராது உழைத்திட அருள் தாரும். 

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை

உயிரற்ற உடலின் மடிசுமந்து 

துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து

எனக்காக இறைவா எனக்காக 

இடர்பட வந்தீர் எனக்காக.

 

பதினான்காம்  நிலை

                                 இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்

stage 14

 

முதல்வர்:  அன்பு நிறை இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு யன்றி செலுத்துகிறோம்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்.

முதல்வர்:  “நரிகளுக்குப் பதுங்கக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” (மத் 8:20) என்று கூறிய இயேசுவிக்கு அடக்கம் செய்யவும் சொந்த கல்லறை இல்லை. அடுத்தவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்.  ஆனால், கொல்லப்பட்ட இயேசு அடக்கம் செய்யப்பட்டாலும், அவரது கொள்கைகளை, இலட்சியங்களை, இறையரசின்  கனவுகளை கல்லறைக்குள் அடக்க முடிந்ததா? உண்மையை உறங்க வைக்க முடியுமா? இயேசுவின் இலட்சியங்களுக்கு அது கருவறையாக அமைந்ததை அப்போது உலகம் அறியவில்லை. இன்றும் நம்மில் பலர் உணரவில்லை.

மக்கள்:    கருணையின் கடலே! அன்பு இயேசுவே! உம்மை கொன்று கல்லறையில் அடக்கம் செய்த மக்களுள் யாரையும் நீர் வஞ்சிக்கவில்லை. இறுதிவரை அமைதியும் சாந்தமும் கொண்ட மாமனிதராக கல்லறைக்குள் சென்றீர். நாங்கள் ஒருநாள் உறங்கவிருக்கும் எங்கள் கல்லறைகளை நினைக்கச் செய்தருளும். கல்லறை நிரந்தர வீடு அல்ல. அது தற்காலிக உறைவிடம் என்பதை  உணர்ந்து ஒவ்வொரு நாளும் உயிர்ப்பை எதிர்நோக்கி வாழ, எங்களை தூய ஆவி வழிநடத்தச் செய்தருளும்.

முதல்வர்:       சிலுவை மரணம் ஏற்ற ஆண்டவரே, எங்கள் மீது   இரக்கமாயிரும்.

மக்கள்:    ஏனெனில், உமது சிலுவை மரணத்தால் எங்களை மீட்டருளினீர்

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு – நீர் அடங்கிய கல்லறை உமதன்று 

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

இறுதி இறைவேண்டல்

என்றும் வாழும், இறைவா இவ்வுலகை உமது திருவுளப்படி மீட்குமாறு  உமது ஒரே மகனைப் பணித்தீர். அப்பணியைத் தொடர அவர் எங்களைத் தேர்ந்துகொண்டார். இச்சிலுவைப் பாதை தியானத்தில்   பங்குகொண்ட நாங்கள், உமது அழைப்புக்கேற்ப ஒன்றித்துப் பயணிக்கும், பங்கேற்கும், மறைத்தூதுரைக்கும் திருஅவையாகத் திகழச் செய்வீராக.

சிலுவை மரணத்தை ஏற்ற உம் திருமகனை, எங்கள் ஆண்டவரை உயிர்தெழச் செய்ததபோல, எங்கள் பலவீனங்களிலிந்து நாங்கள் மீண்டு வர உதவியருளும். 

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

 

முடிவுரை:

 

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்ட  நாம், முடிந்தது சிலுவைப்பாதை, இனி வேறு வேலையைப் பார்ப்போம் என்றுதான் அமைதியகப் புறப்பட்டு போவோம். இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் சிலுவையின்  பாரத்தைச் சுமந்து மனிதகுல மீட்புக்காக உயிரைத் துறந்த இயேசு கிறிஸ்துவின் இன்றைய உருவங்கள் நாம். இந்த சிலுவைப் பாதையின் முடிவுதான் நமது வாழ்வுப் பயணத்தின் தொடக்கம் என்பதை நினைவில் கொள்வோம்.

 

தொடர்ந்து இயேசுவுக்காகப் பரிதாபப்படுவதில் பயனில்லை. நாம் பரிதாபப்படுவதற்கு இயேசு பலவீனரும் அல்ல, பாவப்பட்டவருமல்ல. நாமே பலவீனர்கள், பாவப்பட்டவர்கள். மாற வேண்டிய நம் குடும்பத்தை, சமூதாயத்தை மாற்ற வேண்டியவர்கள் நாமே என்ற சீடத்துவ உணர்வோடு, புறப்படுவோம். குடும்பத்திலும் அன்பியங்களிலும் நமது ஈடுபாட்டால் அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பில் உயிர்த்தெழ கடமையுணர்வோடும், சிலுவை அடியில் நின்ற வியாகுல அன்னையின் துணையோடும் செயல்படுவோம்.

 

 

 திருத்தந்தையின் கருத்துக்காக இறைவேண்டல்

 

நாம் வழிநடந்துத் தியானித்தச் சிலுவைப் பாதையின்

பலன்களைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம், நம் திருத்தந்தையின்

கருத்துக்காக மன்றாடுவோம்.

 

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே…

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க…

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்….

 

எழுத்து மற்றும் சிந்தனை : திரு . ஆர்.கே சாமி மலேசியா

 

   

Comments

Esther Kala… (not verified), Feb 16 2024 - 5:46pm
Such a meaningful passage. Amen
raja (not verified), Mar 15 2024 - 8:24pm
Nice and
Good
Words are inspiration to my life.
raja (not verified), Mar 15 2024 - 8:24pm
Nice and
Good
Words are inspiration to my life.