விண்ணக வாழ்வுக்கு வழி, இறைவார்த்தையில் பற்றுறுதி!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் இரண்டாம் வாரம் – வியாழன்
எபிரேயர் 7: 25- 8: 6                                                                                  
மாற்கு  3: 7-12

விண்ணக வாழ்வுக்கு வழி, இறைவார்த்தையில் பற்றுறுதி!  
 
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், இயேசுதான் நமக்காக வந்த  தலைமை குரு என்றும் இவரே  தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர் என்ற உண்மையை இக்கடிதத்தின் ஆசரியர் தெளிவுப்படுத்துகிறார்.
இவ்வாசகத்தில் யூத சமயக் குருக்கள் பாவத்திற்கு செலுத்தும் பலிகளைப் போலன்றி, தலைமை குருவான இயேசு  தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி அப்பலியை  ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தவர் என்ற மறையுண்மையையும் தெளிவுப்படுத்துகிறார். 
தொடர்ந்து,  மோசே காலத்தில்   ஆரோன் வழிமரபில்  வந்த குருக்கள் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவின் அடையாளமாக பலிகளைச் செலுத்தினார்கள்.   அவர்கள் ஆலயத்தில் கடவுளின் தூய உறைவிடத்திற்குள் சென்று பலிகளை ஒப்புக்கொடுத்தார்கள்.  கடவுளின் இந்த மண்ணக உறைவிடம் விண்ணக உறைவிடத்தின் நிழலாகக் கருதப்பட்டது. இயேசுவின் பலியோ கடவுளின் உடனிருப்பில் நிறைவேறிய என்றுமுள ஒரே பலியென அறிகிறோம்.

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுகைக் கூடத்திலிருந்து வெளியேறி தன்னுடைய சீடர்களுடன் கடலோரம் போகிறார்.  இயேசு கிறிஸ்து உணவு உண்பதற்குக்கூட போதிய நேரம் இல்லாமல் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் நடுவில் பணிசெய்து வந்தார். இதனால் பல இடங்களிலிருந்தும் மக்கள் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில் மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு தம் சீடர்களிடம் சொல்கின்றார்.

சிந்தனைக்கு.

நாம் மறுமையில் நிலைவாழ்வுப் பெற்று என்றென்றும் கடவுளுடன் இருக்கும்போது நமது நிலை என்னவாக இருக்கும் என்பதை  மண்ணகத்தில்  முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ முடியாது. அதற்குத் தயாரிப்புத் தேவை. நாம் தினமும் திருப்பலிக்குப் போவதால் மட்டும்  அந்த நிலைவாழ்வைப் பெற்று விட முடியாது. கடவுளுக்கு நாம்மையே  பலிசெலுத்த விரும்பலாம்; ஆனால், அதைவிடவும் பெரியது அவருடைய வார்த்தையைக் கேட்டு அவரது விருப்பத்தை நிறைவேற்றுவது. 
அதாவது, நாம் வாழும் காலத்தில் அவரது வார்த்தைகைளக் கேட்பதோடு, நம்மால் முடிந்த அனைத்து நன்மைகளையும் மனிதநேயத்தின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.   நற்செய்தியில், மக்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் ஒரே எண்ணம் கொண்டவர்களாகவும், அவரது வார்த்தைகளைக் கேட்பதில்  தீவிரமாக இருந்ததையும் வாசித்தோம். அவர்கள் இயேசுவைத் தேடி அலைந்தனர்.
படகில் ஏறி, கூட்டத்திலிருந்து சிறிது தூரம் சென்று இயேசு போதித்தார்  என்று மாற்கு குறிப்பிடுகிறார். ஆம், இயேசு தன்னை நோக்கி வந்துள்ள அனைவரையும் ஒருமித்துப் பார்க்க விரும்பினார்.  இயேசுவின் இந்த  விருப்பமும் அன்பின் செயலாகும்.  எனவே, சற்று தூரத்தில் இருந்து அனைவரையும் ஒருமித்துப் பார்க்கிறார். 
அவர் இரக்கத்தால் அற்புதங்களைச் செய்தாலும், அவருடைய  வல்லமையை வல்ல செயல்களால் வெளிப்படுத்தினாலும்,  அவருடைய முதன்மையான கவனம் மக்களுக்குக் கற்பிப்பதும், அதன் மூலம் நிலைவாழ்வுக்கான வழியைக் காட்டுவதுமாகும்.  
பலியையும் காணிக்கையையும் கடவுள்  விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் அவர் நம்மிடம்  கேட்கவில்லை; ஆனால், நாம் நம் செவிகளைத் திறந்து, அவரது வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை உள்வாங்கி அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதே அவரது அவா. 
இயேசு வெறும் போதகர் மட்டமல்ல. இன்றைய முதல் வாசகத்தில் அறிவதுபோல்,  அவர் நமக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கின்ற தலைமை குரு.   அவரை,  நம்முடைய தேவைகளுக்காக மட்டும் தேடிச் சொல்லாமல்,  அவரது வார்த்தையின் ஒளியில் வாழ அவரை நாடிச் சென்றால் என்றும் வாழும் வரம் பெறுவோம். இயேசுவே உம்மில் பற்றுறுதிக் கொண்டுள்ளேன் (Jesus, I trust you) என்பதை நாளும் பொழுதும் வெறும் வார்த்தையில் அல்ல, வாழ்ந்து மெய்ப்பிப்போம்.

இறைவேண்டல்.

கேளுங்கள் தரப்படும் என்றுரைத்த ஆண்டவரே,  உமது வார்த்தையைக் கேட்பதற்கும், அந்த வார்த்தையை என் வாழ்வின் மையமாக மாற்றுவதற்கும் எனக்குள் இருக்கிற தடைகளை அகற்றுவீராக.  இயேசுவே, நான் உம்மில் பற்றுறுதி  கொண்டுள்ளேன், ஆமென்.

    

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

AMALORPAVAMARY… (not verified), Jan 23 2025 - 4:11pm
Amen