அணுகுண்டுப் புன்னகை | Ashwin

"தாயி மழை வர்ற மாதிரி இருக்கு காத்து வேற பயங்கரமா அடிக்குது நான் போயி கட்டுமரத்த கட்டி போட்டுட்டு வந்துடுறேன்"

"அப்பா நானும் கூட வார்றேன்பா"

"வேணாம் பாப்பா மழையில நனஞ்சா உடம்புக்கு ஏதாச்சும் வந்திடும், அதனால நீ உள்ளயே இரு அப்பா இப்போ வந்திடுறேன்"

"பேசிட்டே நிக்காதீங்க இடி வேற இடிக்குது சீக்கிரமா போயிட்டு வாங்க...."

"சரி தாயி, அந்த குடைய எடு..."

(குடையை வாங்கியவர் கடற்கரை நோக்கி நடக்கத் தொடங்கினார்)

"யோவ் ஆளவந்தான்.... யோவ்..."

"சொல்லு மாறா என்ன இப்படி அவசர அவசரமா ஓடியாற, ஏதாச்சும் தல போற விஷயமா?"

"தலையோட சேத்து உசிரே போற விஷயம்"

"என்னய்யா என்னாச்சு?"

"யோவ் இன்னைக்கு ராத்திரிக்குள்ளாடி ஆம்பளைங்க எல்லாம் ஊர விட்டு கிளம்பணுமாம் இல்லேனா எல்லாரையும் கொன்னுடுவாங்களாம்"

"என்ன மாறா என்ன சொல்லுறா?"

"ஆமாயா, பக்கத்து ஊருல தமிழ்காரங்க எல்லாரையும் குழந்தை குட்டீனு கூட பாக்காம சிங்களக்காரங்க கொன்னுட்டாங்களாம் எப்போ வேணலும் நம்ம ஊருக்குள்ள வந்திடலாம் "

"ஜயோ நான் மட்டும் போயிட்டா என் குடும்பத்த யாரு பாத்துப்பா? அவங்க நிலைமை என்ன ஆகும்?"

"பக்கத்து ஊருல காசு குடுத்தா கடலுக்கு அந்தப் பக்கம் தமிழ் நாட்டுல அகதிகள் முகாமில விட்டுருவாங்களாம், ஆனா.."

"ஆனா... என்னய்யா சொல்லு ??"

"காசு தான் அதிகமா கேட்க்குறாங்க..."

"காசு என்னய்யா காசு என் குடும்பத்தோட உசிர விட காசு ஒண்ணும் எனக்கு பெருசு இல்ல, இருக்குறதெல்லாம் வித்துபுட்டாவது அவங்கள கூப்பிட்டு போவேன்"

"சரியா எதுனாலும் வேகமா பண்ணு, நான்‌போயி மத்தவங்களுக்கும் சொல்லீட்டு வார்றேன்..."

"சரி மாறா நீ என்ன பண்ண போற...?"

"எனக்கென்ன குடும்பமா? குட்டியா? நான் இங்கயேதான் இருக்க போறேன். பிறந்த ஊரையும் உறவுகளையும் விட்டு வேற ஊருக்கு அகதியா போறதுக்கு இங்கையே செத்து போயிடலாம்"

( மாறன் கூறியதை கேட்டு ஆளவந்தான் கண்கள் சிவந்தது, ஏதும் பதில் கூறாமல் அவனிடம் விடைபெற்று வீட்டுக்கு விரைந்தான் ஆளவந்தான்)

"தாயி....தாயி...."

"என்னங்க என்னாச்சு..?"

"சீக்கிரமா போயி நம்ம கிட்ட இருக்குற நகை, பணம், இடத்தோட பத்திரமெல்லாம் எடுத்துட்டு வா.."

"எதுக்குங்க இப்போ அதெல்லாம்"

(என படபடத்த அபிராமியிடம் மாறன் கூறிய அனைத்தையும் ஆளவந்தான் கூற)

"இது நம்ம ஊருங்க இதவிட்டு நாம எங்க போகப்போறோம் நமக்குன்னு யாரு அங்க இருக்காங்க...?"

(என கதறத்தொடங்கினாள் அபிராமி அருகில் நின்ற குழந்தையை கட்டியணத்தபடி)

"அப்பா... அப்பா... அங்க பாருங்க பட்டாசு வெடிக்குறாங்க ..!!!"

(என குழந்தை தூரத்தில் வானில் தெரிந்த வெளிச்சத்தை காண்பிக்க, ஆளவந்தான் அவசர அவசரமாக வீட்டினுள் சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தார்)

முக்கிய செய்திகள்:
"இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர், அணுகுண்டுகள் பீரங்கிகளுடன் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசாங்கம் போருக்கான ஆயுதங்களை மறைமுகமாக வழங்குவதாக கூறப்படுகிறது. அதற்கு எதிராகவும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்"

( அந்த தொலைக்காட்சிச் செய்தி ஆளவந்தான் காதில் இடியாக விழ, மனைவியையும் மகளையும் கட்டியணைத்து கதறினான்)

சற்று நேரத்தில் இடி காதை கிழிப்பது போல் ஒருசத்தம் அவர்களுக்கு கேட்டது, சில வினாடிகளில் அங்கே ஒரு பெரிய நிசப்தம் நிலவியது, அந்திவான வெளிச்சம் அவர்கள் வீட்டை ஆக்கிரமிக்க, மழையும் தூறலிடத் தொடங்கியது, தூறலை உடலில் தாங்கிக் கொண்டு ஆளவந்தான் அவன் மனைவியை நெஞ்சில் அணைத்தபடி தரையில் படுத்திருக்க அவர்களுக்கு நடுவில் குழந்தை அமர்ந்து கையில் ஒரு உலோகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது, புது விளையாட்டு கிடைத்துவிட்டது எனும் ஆனந்த்திலோ என்னமோ சிரித்துக் கொண்டே,

"அப்பா எழும்புங்கப்பா இந்தா பாருங்க பெரிய பட்டாசு நம்மளுபோயி வெளிய வெடிச்சு விளையாடலாம் வாங்க"

என அருகில் மாண்டு கிடந்த அப்பனை எழும்பச் சொல்லி அடித்தது அப்பச்சிளம் குழந்தை கையிலிருப்பது அணுகுண்டு என அறியாதவளாய்....!

 

- அஸ்வின்