தேசிய தடுப்பூசி தினம் | National Vaccination Day | march 16

தேசிய தடுப்பூசி தினம்
        தடுப்பூசியின் தத்துவத்தை முதலில் அறிந்தவர் லூயிஸ் பாஸ்டர் (1822-1895). இவர் கோழிக்கான காலரா மற்றும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசியை முதலில் கண்டறிந்தார். தடுப்பூசியின் அடிப்படையை முற்றிலும் அறிந்து உலகுக்கு விளக்கிய எட்வர்டு ஜென்னர் ஸ்மால் பாக்ஸ் வேக்சின் எனப்படும் பெரியம்மை தடுப்பூசியை கண்டுபிடித்தார். இதனால் பெரியம்மை நோய் அறவே ஒழிக்கப்பட்டது.
        இந்தியாவில் முதன்முதலாக 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதனால், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், தடுப்பூசி குறித்தும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சுகாதார அமைச்சகத்தின்படி, தேசிய தடுப்பூசி நாளில் ஆண்டொன்றுக்கு 17.2 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
        உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், நம் உடலுக்கு சேராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் நுழையும்போது அவற்றுக்கு எதிராக செயல்பட்டு அழிக்கக்கூடிய ஒரு இயற்கையான செயல்பாடு நோய் தடுப்பு ஆகும். ஒரு சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட நோய் கிருமிகளின் செல்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவை மீண்டும் உடலுக்குள் தீங்கு ஏற்படுத்தாத வண்ணம் தடுக்கின்றன. இதனால், ஒவ்வொருவரும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் இதுபோன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.