வெற்றி காண
அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் - 1 சாமுவேல் 17:45. ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீது, கடவுள் என்னோடு இருக்கிறார். அவர் எனக்காக யுத்தம் புரிவார் என்று கூறி, வீரர்கள் அளித்த தலைக்கவசம், மார்புக்கவசம் ஆகியவற்றை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்து விட்டுக் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கையில் ஒரு கோலும், ஐந்து கூழாங்கற்களும், கவனும் எடுத்துக் கொண்டு, கோலியாத் என்கிற அரக்க மனிதனை எதிர்த்து போரிட வீரத்துடன் கிளம்பினான். சிறுவனான தாவீதைக் கண்ட கோலியாத் அவனை எள்ளி நகையாடினான். உன்னை ஒரு கையாலேயே நசுக்கி விடுவேன் என்று சவாலும் விட்டான்.
இது எனது ஆண்டவரின் போர். அவர் எனக்குத் துணையிருப்பார். உன்னை என்னிடம் ஒப்புவிப்பார் என்று தாவீது சொல்லிக்கொண்டு கோலியாத்தைக் கண்டு அஞ்சாமல் தனது இறைவனின் மீதிருந்த நம்பிக்கையினால் தைரியமாக அவனை எதிர்கொண்டான். ஆண்டவரிடம் ஜெபித்துவிட்டு, தனது கவன் மூலம் அந்த கோலியாத்தின் நெற்றிப் பொட்டில் கூழாங்கல்லைக் குறி பார்த்து அடித்தான். கோலியாத் வீழ்ந்தான். தாவீது ஓடோடிச் சென்று, கோலியாத்தின் வாளினாலேயே அவனது தலையை வெட்டி அவனை சாகடித்தான். தாவீது வெற்றி பெற்றான். முதலில் எரியப்பட்டது தாவீதின் இறை நம்பிக்கை என்னும் கூழாங்கல். ஒரு கல்லிலேயே தாவீது வெற்றி கண்டான்.
நம் ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் நம்மை மீட்கிறவர் அல்ல. நொடிப் பொழுதில் நாம் அறியாத நேரத்தில் நமக்கு வேண்டிய தைரியத்தைக் கொடுத்து நம்மை மீட்பார். நாமும் ஜெபம், தவம், வழிபாடு, நம்பிக்கை, தானதர்மம் என்னும் ஐந்து கூழாங்கற்களை எடுத்து கொண்டு வாழ்க்கையில் வரும் துன்பம், துயரம், நோய், கடன் தொல்லை, பாவத்திற்காக சந்தர்ப்பங்கள் போன்ற அரக்கர்களுடன் எதிர்த்து போராடுவோம். வெற்றி காண்போம்.
ஜெபம்: ஆண்டவரே உம்மையே நேசிக்கிறேன். உம்மையே நம்புகிறேன். எங்கள் நம்பிக்கையை பெருக பண்ணும். எங்கள் வாழ்க்கையில் வரும் துன்ப துயரங்கள், கடன் தொல்லைகள், ஏற்ற தாழ்வுகள் அனைத்தையும் உம் மீது கொண்ட நம்பிக்கையினாலும் ஜெபத்தினாலும், வழிபாடுகள், தவம், தான தர்மத்தினாலும் எதிர்த்து வெற்றி காண துணை புரியும். ஆமென்.