முன்னேறி செல்ல
அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்; அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்” - மீக்கா 2:13. வாழ்க்கையில் பிரச்சனைகள், தடைகள், போராட்டங்களைப் வரும் போது நாம் முயற்சியை விட்டுவிடுகிறோம். சோர்ந்து போகிறோம். ஆண்டவருடைய வல்லமையை விட, அவை பெரியவை கிடையாது. ஆகவே தடைகளைப் பார்க்காமல், தடைகளை தகர்த்து, பாதையை உண்டாக்கும், ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம். அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போனதில்லை.
ஈசாக்கு தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை தோண்டித் தூரெடுத்தார்; அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டார். ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, “இந்தத் தண்ணீர் எங்களதே” என்று வாதாடினர். எனவே ஈசாக்கு அதை விட்டு விட்டு வேறொரு கிணறு தோண்டினர். அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார். இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை. ஈசாக்கு ஆண்டவரை நம்பினார். எனவே அவருக்கு ஏற்பட்ட தடையை நீக்கி ஆண்டவர் அவரை ஆசீர்வதித்தார். நாம் தடைக் கற்களை, படிக்கற்களாக்குவோம். எது தடைகளாக உள்ளதோ அதே நம்மை உயர்த்தும் படிகல்களாக ஆண்டவரால் மாற்றுவார்.
ஆம், வேலை தேடுவது, வாழ்க்கை துணை தேடுவது, தொழில் முன்னேற்றம், படிப்பு, உயர் பதவி, வீடு, என எல்லா முயற்சிகளிலும் தடைகளும், இடையூறுகளும் வரத்தான் செய்யும். சூழ்நிலைகள் எதிராக மாறலாம். எல்லா பாதைகளும் அடைக்கபடலாம். எழும்பவே முடியாத நாம் தல்லப்படலாம். நாம் அந்த நேரங்களில் தளர்ந்து போகாது ஜெபித்து கொண்டிருந்தால் ஏற்றகாலத்தில், அதற்கான பலனை பெறுவோம். ஆம் சகோதரமே, நம் ஆண்டவர் தடைகளை நீக்கி நம்மை வழி நடத்தி செல்வார். அஞ்ச வேண்டாம்.
ஜெபம்: ஆண்டவரே உம்மை துதிக்கிறோம். ஆண்டவரே இன்றைய நாளில் எங்களோடு இரும். எங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கி உம்மை முன்வைத்து நாங்கள் முன்னேறி செல்ல துணை செய்யும், பாதை காட்டும். வழி நடத்தும். உமக்கே மாட்சியும் புகழும் உரித்தாகுக. ஆமென்.