மகிழ்ச்சி நிரம்ப

அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார் - எபிரேயர் 12:14. நாம் எல்லோரும் இயேசுவை  பார்க்க வேண்டும்  விரும்புகிறோம். நாம்  தூய்மையான உள்ளத்தோடு இருந்தால் நிச்சயமாக   கடவுளைக் காண்போம். முதலில் பாவத்தை நம்மை விட்டு அகற்ற வேண்டும். ஆண்டவருக்காக காத்து இருக்க வேண்டும்.

சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டு காத்திருந்தார். அதே ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்து குழந்தை இயேசுவை கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, ஆண்டவரே, என்னை அமைதியுடன்  போகச் செய்கிறீர்.ஏனெனில்,  மக்கள் அனைவரும் காணுமாறு,  நீர் ஏற்பாடு செய்துள்ள  உமது மீட்பை  என் கண்கள் கண்டுகொண்டன் என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர்  84 வயது  கைம்பெண்  கோவிலைவிட்டு நீங்காமல் தூய உள்ளத்தோடு மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் இயேசுவை கண்டு மனம் மகிழ்ந்தார். ஆண்டவர் தம்மை நாடி தேடுபவர்களுக்கு, தம்மை வெளிப்படுத்துவதுடன்  நிலையான விண்ணக வாழ்வை தருவதாக கூறியுள்ளார். அவரை நோக்கிப் பார்த்தால் மகிழ்ச்சியால் நிரப்பப் படுவோம். 

ஜெபம்: ஆண்டவரே எங்கள் பாவங்களை நீக்கி எங்களை பரிசுத்தம் ஆக்கும்.  நாங்கள் உமக்காக காத்திருந்து உம்மை காணவும் உம் மீட்பின் மகிமையை அனுபவிக்கவும் அருள் தாரும். ஆமென்.