புத்துயிர்ப் பெற்று

கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.
1 யோவான் 4 :16.

விவிலியத்தில் 'அறிந்துள்ளோம்' என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன.
என் அறிவை பயன்படுத்தி நான் இதை அறிந்து கொண்டேன்,
எனக்கு ஆசான் கற்றுக்கொடுத்ததை நான் அறிந்து கொண்டேன்,
பெரியவர் ஒருவர் சொல்லிக் கொடுத்து நான் அறிந்து கொண்டேன்,
நானாகவே ஏதோ ஒரு உள்ளுணர்வில் அறிந்துகொண்டேன்,
என்னுடைய ஆழ்மனது உணர்ச்சி வழியாக அறிந்து கொண்டேன்,
என்று பல பொருள்களை உபயோகப்படுத்தலாம்.

ஆனால் இன்று நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்ற இந்த இறைவசனத்தில் அறிந்துள்ளோம் என்பது எதைக் குறிக்கிறது என்றால், மேற்சொன்ன அத்தனை பொருட்களையும் ஒன்று சேர்த்து தருகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது இந்த 'அறிந்துள்ளோம்' என்கின்ற சொல்.
பிறர் கற்றுக்கொடுத்து, நானும் தெரிந்துகொண்டு, ஆசானும் கற்றுக்கொடுத்து, என் உள்ளுணர்வும் எடுத்துச்சொல்லி, என் ஆள் மனதும் உணர்ந்து கொண்டது தான் இந்த கடவுளின் அன்பு என்பது.

இவ்வளவு ஆழமானது இந்த 'அறிந்துள்ளோம்' என்கின்ற வார்த்தை.

அதையும் தாண்டி ஆழமானது கடவுள் நம்மிடம் கொண்டிருக்கின்ற அன்பு.

இந்த அன்பு என்னை மகிழ்ச்சி படுத்துகின்றது.

ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உணர்வுகளை, பாசிடிவ் வைப்ரேஷன்
உருவாக்குகின்றது.

குழந்தை துள்ளிக் குதிப்பதை போல, மான்குட்டி போல என் மனம் உன் அன்பில் புத்துயிர் பெறுகின்றது.

என் உள்ளம் எனும் ஊஞ்சலிலே உன் அன்பை அறிந்துகொண்ட நான் குதூகலிக்கின்றேன்.

இந்த மகிழ்ச்சியோடு ஒரு மன்றாட்டை சொல்லுகின்றேன்.

என் உள்ளத்து ஆண்டவரே நீர் எம்மிடம் கொண்டிருக்கின்ற அன்பை நான் அறிந்திருக்கிறேன்.
உமக்கு நன்றி சொல்கின்றேன்.
உன் அன்பை விவரிக்க வார்த்தைகள் மட்டும் போதாது.
இந்த நாளும் ஆண்டும் போதாது.

மிகப் பெரியவர் நீர். என்னிடம் வந்து "இதோ என் அன்பு" என்று திறந்து காட்டுகின்றீர்.  நன்றி நன்றி நன்றி.

இந்த அன்பில் என் உள்ளம் நாள்முழுவதும் இருப்பதாக. ஆமென்!