புகழ் பாடுங்கள்

பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள் - திருப்பாடல்கள் 47:6-7. ஆண்டவருக்கு புகழ் பாடுங்கள். நமக்காக அனைத்தையும் படைத்து நம்மை இந்நாள் வரை நடத்தி வரும் கடவுளுக்கு புகழ் பாடுங்கள். தன்னையே நமக்காக அர்பணித்து நம்மை இவ்வளவாய் அன்பு செய்த இயேசுவுக்கு புகழ் பாடுங்கள். நமக்கு துணையாளராக வந்து நம்மை திடப்படுத்தி வழி நடத்தும் தூய ஆவிக்கு புகழ் பாடுங்கள்.

என்ன நடந்தாலும் எது நேர்ந்தாலும்  நாம் நன்றி பாடல்களுடன் நம் வேண்டுதல்களை சொல்லுவோம். அப்படி செய்வதனால் நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம். நம்மை சுற்றி இருப்பவர்கள், உற்றார் உறவினர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்பட்டு, அவர்களுடைய கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்கள்.

நள்ளிரவில் கட்டப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் வந்து சிறைக்கூடமே அதிர்ந்து  கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, இவர்கள் தப்பியிருப்பார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் பவுல் நாங்கள் இங்கே தான் இருக்கின்றோம் என்கிறார். 

அதன் பிறகு அந்த சிறை காவலர்கள்  இயேசுவின் வார்த்தைகளை நம்பி  குடும்பத்தோடு மீட்படைகின்றனர். மறுநாள்  ஊர்நடுவர்கள் மன்னிப்பு கேட்கின்றனர். பவுலும் சீலாவும் அந்த இடத்தை விட்டு போகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாமும் ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்கு புகழ்ச்சி பாடல் பாடுவோம். இறை அருளை நிறைவாக பெறுவோம். 

ஜெபம்: ஆண்டவரை, உம்மை துதிக்கிறோம். உன்னதமான உம் சிறகுகளின் கீழ் எங்களை முடி மறைத்து  பாதுகாத்து வழி நடத்துபவரே  உம்மை போற்றுகிறோம். நீர் எங்களுக்கு செய்து வரும் நன்மைகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களையும் எங்கள் சுற்றங்களையும், இந்த உலக மக்கள் அனைவரையும் ஆசீர்வதியும். பாதுகாத்து கொள்ளும். ஆமென்.