பாவ அறிக்கை செய்வோம்
மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார் - மத்தேயு 26:42. நமது ஆண்டவர் இயேசு நமக்காக தன்னை தாழ்த்தி தன் உயிரையே கொடுத்தார். அந்த இறுதி இரவில் அவருடைய இரத்தம் வியர்வையாக வழிகிறது. அவருடைய பலமெல்லாம் குறைந்து போயிற்று. மனித பலம் குன்றிவிட்டது. என் தந்தையே நான் இந்த துன்பத்தையே அனுபவித்தே ஆகவேண்டும் என்றால் உம் விருப்பப்படியே ஆகட்டும் என்று இருமுறை, இயேசு, தந்தையைப் பார்த்து கூறுகிறார். நம் பாவங்களுக்காக அந்த துன்பத்தை அனுபவித்தார்.
கடவுள் நம்மீது கொண்ட அன்பு தன் மகனை உயிர்பலியாக கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தது. இயேசுவின் அன்பு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் அளவுக்கு உயர்ந்தது. அன்னை மரியாளின் அன்பு கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து எல்லாவற்றையும் மனதில் வைத்து தியானிக்கும் அளவுக்கு உயர்ந்தது. நம்முடைய அன்பு எந்த நிலையில் உள்ளது. அப்பா பிதாவின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு நம்மையே இழக்கும் அளவுக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக இருக்கிறோமா? சிந்திப்போம்.
பாவ அறிக்கை செய்வோம். மனம் மாறுவோம். மாபரனை முழு மனதோடு ஏற்று கொள்வோம். இனிமேல் ஒவ்வொரு நாளும் ஒரு சிறு மணி துளியை அன்பின் ஆண்டவரோடு செலவு செய்வோம் . அவரோடு அமர்வோம். அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம்மை போற்றுகிறோம். தூய ஆவியே எம்மீது அசைவாடும். உம் தூய திருகரத்தால் எங்களை அணைத்து கொள்ளும். ஒவ்வொரு நாளும் உம் திருவுளம் அறிந்து வாழ அருள் புரியும். ஆமென்.