பாடுகளின் திங்கள்
அதன்பின்பு இயேசு அவர்களிடம், “இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ‘ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது - மத்தேயு 26:31. அந்த கடைசி இரவில் இயேசு சந்தித்த நபர்கள். 3 வருட காலமாக இயேசுவோடுகூட இருந்து அவரோடு தங்கி அவருடன் உணவருந்தி வாழ்ந்த யூதாஸ் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை முத்தமிட்டு காட்டிக்கொடுக்கிறான். அவனது உள்ளம் பணத்தின் பின்னால் சென்றது .
உன்னை மனிதர்களை பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைக்கப்பட்ட பேதுரு, இந்த மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் செய்கிறார். மூன்று முறை மறுதலிக்கிறார். அவருக்கு தன்னுடைய உயிருக்கு பயந்து மறுதலிக்கும் உள்ளம். மற்ற சீடர்களும் தங்களை வெளிப்படுத்தவில்லை. அவர்களை காணவே இல்லை. கோழைத்தனம் கொண்டு இருந்தனர்.
அவர் கொடுத்த நற்செய்திகள் கேட்டு, அவர் செய்த அற்புதங்களை அனுபவித்த ஒருவர் கூட அவருக்காக பேசுவதற்கு முன்வரவில்லை. அவர்களின் இயலாத்தனம் அங்கு வெளிப்பட்டது. பிலாத்து இந்த மனிதரிடம் நான் எந்த குற்றத்தையும் காணவில்லை என்று சொன்ன போதும் அவனுடைய பதவி ஆசை இயேசுவை கை கழுவ வைக்கிறது. பரபாசை விடுதலை செய் இயேசுவை சிலுவையில் அறை என்ற மக்கள் அனைவரும், இயேசுவின் இரத்தபழி தங்கள் மேலும் தங்கள் பிள்ளைகள் மேலும் விழுந்தாலும் பரவாயில்லை. ஆனால் இயேசு சாகனும் என்ற பிறரை கெடுக்கும் மனநிலையில் இருந்தனர். அன்பு சகோதரமே, நாம் இதில் எந்த நிலையில் உள்ளோம். சிந்திப்போம்.
ஜெபம்: இயேசுவே எந்த சூழ்நிலையிலும் உம்மை விட்டு பிரியாத, உம்மை மருதலிக்காத, உம்மை அநியாயமாக தீர்ப்பிடாத, இகழ்வாக பேசாத அனைவரையும் அன்பு செய்து வாழும் நல்ல மனதை தாரும். எங்களோடு வந்து தங்கும் ஆண்டவரே. ஆசீர்வதியும். ஆமென்.