நிறைவான அமைதி

பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்.

எபிரேயர் 13-5.

பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கு ஆணி வேர். நமக்கு இருப்பவை போதுமென்ற திருப்தி நமக்கு இருக்க வேண்டும், எந்த நிலைமையிலும் மகிழ்வோடு வாழ வேண்டும். இன்று நமது கையில் ஒன்றும் இல்லாதது போல தோன்றும். ஆனால் ஆண்டவரை நம்பி நம் வாழ்க்கை அமையுமானால் ஏற்ற  சமயங்களில் அவர் ஆசீர்வாதமாக நம்மை நடத்துவார்.  ஆண்டவருக்கு எதிராக அது இல்லை இது இல்லை என முறுமுறுப்பதை அவர் விரும்புவதில்லை. இஸ்ரேல் மக்கள் பாலை நிலத்தில் இலவசமாக ஆண்டவரிடமிருந்து எல்லாம் பெற்று , அவர்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறிய போதும் ஆண்டவருக்கு எதிராக முறுமுறுத்தனர். ஆண்டவர் அவர்களை 'வணங்கா கழுத்துள்ள மக்கள்' என்கிறார்.

ஒருமுறை திருமுழுக்கு யோவானிடத்தில் போர்வீரர்கள் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.

நாம் அடுத்தவரை துன்புறுத்தி , திருடி, சம்பாதிக்க கூடாது. நம் உழைப்புக்கு கடவுள் கொடுக்கும் சம்பளமே போதுமானது என திருப்தியோடு இருக்க வேண்டும். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார் என திருப்பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டவர் தரும் ஆசீர்வாதங்கள் நிலையானவை . அதில் ஒரு நிறைவான அமைதி கிடைக்கும்

ஜெபம்: ஆண்டவரே உம் அருள் எனக்கு போதும். எனக்கு வலுவூட்டும் உமது துணை இருந்தால் என்னால் எல்லாம் செய்ய முடியும்.உமது அருளின் மூலமாக எனக்கு இம்மைக்குறிய ஆசீர்வாதத்தையும், மறுமைக்குரிய ஆசீர்வாதத்தையும், தந்து காத்தருளும். ஆமென்