நாம் சுகமாகிரோம்
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார் - லூக்கா 5:31-32. இயேசுவின் இரத்தத்தால் நாம் சுகமாகிரோம். அவருடைய வார்த்தை நம்மை குணமாக்குகிறது. அவருடைய தழும்புகளால் நாம் சுகம் பெறுகிறோம். அவர் எல்லா நோய்களையும் குணமாக்க வல்லவர். அவர் நம்மை தொட்டாலும், நாம் அவரை தொட்டாலும் நாம் சுகம் அடைகிறோம். இயேசு எல்லா துறையிலும் சிறந்த மருத்துவர் என்பதே உண்மை.
1. இயேசு கண் மருத்துவர். பார்வையற்றோர் அவரால் பார்வை பெற்றனர். இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார் (லூக்கா 18-42).
2. இயேசு காது தொண்டை மருத்துவர் (ENT), வாய் பேசாத காது கேளாதவர் குணம் அடைந்தனர். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, “ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே” என்றார் (மாற்கு 9:25).
3. இயேசு மகப்பேறு மருத்துவர். பெரும் பாடுள்ள பெண் குணம் பெற்றார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார் (மத்தேயு 9:21-22).
4. இயேசு குழந்தை நல மருத்துவர். யாவீரின் மகளை படுக்கையிலிருந்து எழுப்பியவர். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள் (மத்தேயு 9:25).
5. இயேசு எலும்பு மருத்துவர்.ஊனமுற்றோர் நலம் பெற்றனர். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் (லூக்கா 13:11-14).
6. இயேசு மன நல மருத்துவர். இயேசு பேய் பிடித்து வலிப்பு நோயால் துண்புற்றவரை நலமடைய செய்தார். இயேசு பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான் (மத்தேயு 17:18).
7. இயேசு தோல் மருத்துவ நிபுணர். தொழுநோயாளர்களும் அவரால் குணமடந்தனர். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று (லூக்கா 17:12).
8. அவர் தலை சிறந்த மருத்துவர். நாள்பட்ட நோய்களும் அவரால் குணமாக்க பட்டன. முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்தவர் நலம் பெற்றார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார் (யோவான் 5:8).
அன்பு சகோதரமே, நம்மில் பலர் இன்று குணமாக்கவே முடியாது என்ற நிலையில் வாழ்வின் முடிவுக்கேபோய் சோர்ந்து போயிருக்கலாம். நாம் பயப்பட தேவை இல்லை. நம் கடவுள் உயிர் கொடுக்கும் மருத்துவர். எந்த சூழ்நிலையில் நாம் சென்று அவரிடம் கேட்டாலும் அவர் நம்மை குணமாக்குவார்.
ஜெபம்: ஆண்டவரே, மருத்துவருக்கு எல்லாம் மேலான மருத்துவரே, எங்களுடைய, நோய்களில், வேதனைகளில். உம்மை கூப்பிடுகிறோம். உமது தூய இரத்தத்தால் எங்களை கழுவி, உமது வார்த்தைய அனுப்பி எங்களை குணமாக்கும். இந்த புதிய நோயின் அறிகுறிகளும், ஆக்கிரமிப்புகளும் எங்களையும், இந்த உலகத்தையும் விட்டு முற்றிலும் அகற்றப்பட அருள் புரியும். ஆமென்.