ஜெபத்தோடு தியானித்திரு

சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார் - லூக்கா 2:34-35. கபிரியேல்  வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும், இயேசு இறை மகன், பாவ மாசில்லாத இயேசுவின் ஏழ்மை பிறப்பு, அவர் பிறந்த உடனேயே அவரை கொலை செய்ய ஏரோது அரசன் திட்டமிட்டது, எல்லாவற்றையும் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அவர் கடவுளிடம் அவராக குழந்தையை கேட்க இல்லை. ஆனால்  இயேசுவின் அம்மா என்ற கடவுளின் அழைப்புக்கு கீழ்படிந்தார்.  அவர் உள்ளத்தை வாள் ஊடுருவும் அளவுக்கான மரணத்தையும் பாடுகளையும் முன்னதாக அறியப்பட்டு அதற்கு தன்னை தயாரித்து கொண்டார். அழுது புலம்பவில்லை. சோர்ந்து போகவில்லை.  தியானித்து கொண்டு ஜெபத்தோடு காத்து இருந்தார்.    

கல்வாரி பலியில் தன் மகனின் பயங்கரமான மரணத்தை பார்த்து அந்த அன்னையின் உள்ளம் எவ்வளவு வேதனை அனுபவித்து இருக்கும். உள்ளம் நொறுங்கி இருக்கும். அமைதியாக இருந்து அதை தியானித்தது தான்  அன்னை மரியாள் மனம் தளராது இருத்ததற்கு காரணம். அதனால் தான் இயேசுவின் மரணத்துக்கும், அவரது உயிர்ப்புக்கும் பிறகு பயந்து நடுங்கின சீடர்களோடு மேல் வீட்டில் அமர்ந்து ஜெபிக்க அன்னை மரியாவால் முடிந்தது. எனவே மீட்பு பயணத்தின் வீர பெண்மணியாக அன்னை மரியாள் நமக்கு வழி காட்டி வருகிறார்கள். அன்னை வழி செல்வோம். சண்டை, விவாதம், தற்பெருமை இவற்றை விட்டு விட்டுப் அன்னையை போன்று அமைதியாக இறை வார்த்தைகளை தியானிப்போம். எது நடந்தாலும் அது இறை திட்டம் என ஏற்று கொள்வோம். ஜெபத்தில் காத்திருப்போம். 

ஜெபம்: ஆண்டவரே உம்மை போற்றுகிறோம். உம் வார்த்தைகளுக்கு கீழ் படிந்து அவற்றை மனதில் வைத்து தியானித்து அன்னை மரியா போல இறை சித்தத்துக்கு பணிந்து வாழ விரும்புகிறோம். தூய ஆவியின் அருள் தாரும். அம்மா மரியே எங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள எங்களுக்காக உம் திருமகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஆமென்.