காக்கின்ற கடவுள்
நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.
எசாயா 43-2.
எந்த துன்பம் வந்தாலும் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் நான் உன்னோடு இருந்து உன்னை தீமைக்கு விலக்கி பாதுகாப்பேன் என்று ஆண்டவர் கூறுகிறார்.
அன்று இஸ்ரேல் மக்களோடு அவர் இருந்ததால் தான் செங்கடல் ஒதுங்கி நின்றது. யோர்தான் வழி விட்டது. எரிக்கோ கோட்டை மதில் உடைந்து உள்ளே செல்ல பாதை அமைத்தது.
ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக அவர் அவர்கள்முன் சென்று கொண்டிருந்தார்.
பகலில் பாலைவன வெயிலில் இருந்து அவர்களை பாதுகாக்க மேகத் தூணும் , இரவில் பாலைவன குளிருக்கும் இருட்டுக்கும் பாதுகாக்க நெருப்புத் தூணும் மக்களைவிட்டு அகலவேயில்லை. அப்படி பாதுகாத்து வழி நடத்திய இறைவன்.
சகோதரமே நாம் பயப்பட தேவை இல்லை. நம் இறைவனை முன் வைத்து எதையும் செய்வோம். அப்படி தொடங்குகிற எந்த காரியத்திலும் எந்த இடர் வந்தாலும் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். அவர் நம்மை காப்பார். அவர் நம்மோடு இருந்து நம்மை காப்பார். தீங்குக்கு விலக்கி பாதுகாப்பார்.
ஜெபம். : அன்பு ஆண்டவரே, நீர் காக்கின்ற கடவுள். உமக்கு நன்றி. ஆண்டவரே கோவிட் 19 என்னும் இந்த நோயின் அகோர தாக்குதலில் இருந்து எங்களை காத்தருளும். இது எங்களை எதுவும் செய்யாது உமதுப்பாதுகாப்பில் உம் பிள்ளைகள் நாங்கள் இதையும் கடந்து செல்ல அருள் தாரும். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு நீரே மேகத் தூணும், நெருப்புத் தூணுமாக இருந்து வழி நடத்தும். ஆமென்.