உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! - திருப்பாடல்கள் 119:105. கடவுளுடைய வார்த்தைகள் வல்லமையுடையது. அது உயிருடையது. அது அறிவிலிகளுக்கு அறிவை கொடுக்கிறது. அன்பு சகோதரமே அதிகாலையில் எழுந்ததும் விவிலியத்தை எடுத்து வாசிப்போம். முதலாவது ஆண்டவருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கடவுளுடைய வார்த்தைகள் நம்மை பலப்படுத்தும். நாம் செல்ல வேண்டிய பாதையை நமக்கு காட்டும். என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தும்.
“உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்” என்று ஆண்டவர் சொல்கிறார்.
ஆண்டவர் ஆபிரகாம் வாழ்வில் நடக்க வேண்டிய பாதையை காட்டினார். மோயிசனுக்கு ஆண்டவருடைய வார்த்தை தான் பாலை நிலத்தில் வணங்கா கழுத்துள்ள அந்த மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி அவர்களை நடத்தி செல்ல உதவியது. திருத்தூதர்களுக்கும் ஆண்டவருடைய வார்த்தைகளே ஒளியாக வழியாக இருந்தது. இன்றும் அது தான்நம்மை வழி நடத்துகிறது.
செபம்: ஆண்டவரே, உம்மை துதிக்கிறோம். உலகையே பயமுறுத்தி கொண்டு இருக்கும் இந்த கொடிய நோயிலிருந்து எல்லோரையும் காத்தருளும். அனைத்து மக்களையும் உம் சிறகுகள் நிழலில் மூடி மறைத்து கொள்ளும். இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் எங்களை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும். ஆமென்.