இறை உறவில் -முன் செல்ல
இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
உரோமையர் 12-2
நம் உள்ளம் புதுப்பிக்கப்பட வேண்டும். .
நம் வாழ்க்கை மிகவும் நன்றாய், சந்தோஷமாய் அமைய வேண்டுமென்றால், நாம் பணிவான மனதோடு முழுமையாக கடவுளை அன்பு செய்ய வேண்டும். வீண் பெருமைக்கும் இடம் தராமல் மனத் தாழ்மையோடு மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவராகக் கருத வேண்டும்
இந்த உலகம் போட்டியினாலும், பொறாமையினாலும் நிறைந்திருக்கிறது. ஒருவரை அநியாயமாய் குற்றஞ்சாட்டி, அவர் மேல் பழி சுமத்தி, தங்களை நீதிமான்களாக்க முயற்சி செய்கிறார்கள். அவற்றிற்கு இடம் கொடாமல் , தாழ்மையின் வழியை தெரிந்து கொண்டு இறைவார்த்தயின் படி செயல்படுவோம். கடவுளின் திருவுளம் என்ன என்பதை அறிவோம். அதன் படி நடப்போம்.
இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுவோம்.
விண்ணுக்கு உரியவைகளை நாம் நாடும்போது, நம் உள்ளம் தூய்மை அடையும்.
பந்தயத்தில் ஓட வந்திருப்போர் பலராயினும் பரிசு பெறுபவர் ஒருவரே. எனவே, நாமும் நிலை வாழ்வு என்னும் பரிசை பெறுவதற்காகவே தன்னடக்கத்துடன் ஓடுவோம்.
ஜெபம் : அன்பு ஆண்டவரே திருமுழுக்கு மூலமாக உம் பிள்ளைகளாக மாற்றப்பட்ட எங்களுக்கு விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அந்த விண்ணக வாழ்வை அடைவதற்கு ஓடுகிற இந்த ஓட்டத்தில் வரும் எல்லா தடைகளையும் தாண்டி முன் செல்ல அருள் தாரும் . வழி நடத்தும் ஆமென்.