இறை உறவில் மனந்திறந்து
துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது.
திருப்பாடல்கள் 32-6.
ஜெபிக்கிறவனை பெரு வெள்ளம் கூட அணுகாது என்று இந்த வசனம் தெளிவாய் சொல்லுகிறது. ஜெபிக்கிறவனுக்கு எப்போதும் ஆண்டவரிடத்திலிருந்து உதவி கிடைக்கும். அது அவனுக்கு மிகுந்த பாதுகாப்பாயிருக்கும்.
நோவா, அன்றைக்கிருந்த துன்மார்க்கமான மக்களின் மத்தியிலே ஆண்டவரை நோக்கி ஜெபிக்கிறவராகவும், அவருடைய ஆலோசனைகளை அறிவுரைகளை கேட்கிறவராகவுமிருந்தார். விவிலியம் சொல்லுகிறது, தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.
ஆண்டவரின் வார்த்தையின்படியே தன் குடும்பத்தைப் பாதுகாக்க பேழையைக் கட்டினார். பெரு வெள்ளம் வந்தபோது, குடும்பமாய் பேழையில் பாதுகாக்கப்பட்டார். நோவாவின் ஜெபம் தூபமாய் ஆண்டவரிடம் சென்றது .
நாமும் ஜெபத்திலே எப்போதும் ஆண்டவரோடு இருப்போம் . பாலைவனம் போல் , கவலையும், கண்ணீரும், போராட்டங்களும் நிறைந்ததுமான இந்த உலகத்தில், அன்பரான இயேசுவிடம் மனந்திறந்து பேசுவதே ஜெபமாகும்.
நமது ஜெப வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும். சிறு காரியமானாலும், பெரிய காரியமானாலும் ஆண்டவரை சார்ந்துகொண்டு ஜெபிப்போமென்றால் பாதுகாப்பும், வழிகாட்டுதலும், உயர்ந்த அடைக்கலமும் நோவாவுக்கு கிடைத்தது போல நமக்கும் கிடைக்கும்.
அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம்.
ஜெபம் : ஆண்டவரே, எனக்கு எல்லாம் நீரே, அப்பா உம் பிள்ளை நான் உமது பாதுகாப்பில் சுகமாக இருக்கவும், உம் அறிவுரையின் படி நடந்து, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் முன்னேறி செல்லவும், என்னோடு இருந்து வழி நடத்தும். என்னோடு வந்து தங்கும் ஆண்டவரே. ஆமென்.