இறை உறவில் பின்செல்
எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்.
1 அரசர்கள் 18-21
கர்மேல் மலையின்மேல் எலியா ஏறினபோது, அங்குள்ள மக்கள் இரண்டு நினைவுகளினால் தீர்மானமில்லாமல் அமர்ந்திருந்தார்கள். அரசனைப் பின்பற்றி, பாகாலை வழிபட்டு, அரசனின் ஆதரவு பெறவும் அவர்களுக்கு ஆசையாயிருந்தது. அதே நேரத்தில், ஆண்டவரை பின்பற்றி, ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும் அவர்கள் விரும்பினார்கள்.
ஆனால் ஒரே நேரத்தில் பாகாலையும், ஆண்டவரையும் பின்பற்றுவது என்பது முடியாத காரியம். இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. ஒருவனை பகைக்க நேரிடும். ஒருவனை நேசிக்க நேரிடும். இரு தோணிகளில் கால்வைத்து பயணம் செய்யவும் முடியாது. ஆகவே எலியா இஸ்ரேல் மக்களை பார்த்து, "எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள் " என்றார்.
யோசுவாவும் , ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு மட்டுமே ஊழியம் புரியுங்கள் என்கிறார்
நம்மில் எத்தனை பேர் இன்னும் நல்ல நாள், நல்ல நேரம், ஜோதிடம், ஜாதகம், சகுனம், பார்க்கிறோம். விண்ணையும் மண்ணையும் அதிலுள்ள அனைத்தையும் காலங்களையும் படைத்தவர் அவர் தானே. நாம் பிறக்கும் நேரத்தையும் , நாம் இறக்கும் நேரத்தையும் நம்மால் திட்டமிட முடியுமா. ஒருவர் உடல் நலமின்றி சாகும் தருவாயில் இருந்தால் அந்த நேரத்தில் நாம் நல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருந்தால் அவரை நாம் இழந்து விடுவது உறுதி. அறிவியல் முன்னேறி வரும் இந்த நாட்களில் அந்த முன்னேற்றத்துக்கான ஞானத்தை கொடுத்தவரும் அவர் தானே.
ஆண்டவரை மட்டுமே நம்புவோம். அவர் எல்லாம் வல்லவர் . சகலத்தையும் செய்ய வல்லவர். கோள்களும் நட்சத்திரங்களும் காலங்களும், பருவங்களும் அவருக்கு கீழ்பணியும். அவரை முன்னிறுத்தி எந்த காரியத்தையும் செய்வோம். அவர் வெற்றியாக முடித்து தருவார்.
ஜெபம் : ஆண்டவரே, உம்மை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் . நீரே எல்லாம் வல்லவர். சகலத்தையும் ஆள்பவர். நீரே எங்கள் ஆண்டவர். நீர் எங்களுக்கு நன்மையை அன்றி தீமையை விட மாட்டீர். ஆண்டவரே எங்கள் நம்பிக்கை பலப்படுத்தும். ஆமென்.