இறை உறவில்- உள்ளம் அதை

எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எபிரேயர் 2-1.

நம்மில் அநேகர் இறை வார்த்தைகளை கேட்பதும் இல்லை ,  கவனிப்பதுமில்லை. கவனித்தால்தானே கேட்டவற்றை செயலாற்ற முடியும்? .  கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது செவி  இருக்கிறது, ஆனால் கவனிக்கத்தான் பொறுமையும், நேரமும் இருப்பதில்லை.

ஆண்டவருடைய வார்த்தைகள்  தூய வாழ்வுக்கு வழி காட்டுகிறது. நம் எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது. நாம் செல்கின்ற பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது. அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கை போன்றது.  

பலவிதமான நோய்கள், இன நிற வேறுபாடுகள், போர்கள், பொருளாதார சரிவுகள் என பல பயங்கள் நம்மை  சூழ்ந்திருக்கிற இந்த நாட்களிலே இறை வார்த்தைகள் நமக்கு ஒளி கொடுக்கும். வழி காட்டும். வாழ வைக்கும். இந்த  வசனத்தின் வெளிச்சத்தை கவனித்து நடப்போம் என்றால் நாம்  ஒருபோதும் இடறுவதில்லை.

 நாம் இறை வார்த்தைகளை   வாசிக்கும்போது,  அவற்றை கவனிக்க வேண்டும். நம்   உள்ளம் அதை தியானிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த வார்த்தைகளின் ஆழத்தில் உள்ள சில மறை பொருட்களை நாம் அறிய முடியும்.  இறை வார்தையினால் நிறையபேர் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.

ஒருவன் உலகம் எல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்ற இறைவார்த்தைகள் சவேரியாரை புனிதராக மாற்றியது.

“சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு செய்தபோதெல்லாம், எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40) என்ற கடவுளின் வார்த்தைகள் அகில உலகம் போற்றும் அன்னையாக அன்னை தெரசாவை உயர்த்தியது.

“பகலில் நடப்பது போல் எப்போதும் நடப்போம், குடிவெறி, சண்டை, காமவெறி, தீய நாட்டம் போன்றவற்றை தவிர்ப்போம்” (ரோமை. 13:13)என்ற வேத வார்த்தைகள் பாவியான அகுஸ்தினாரை புனிதராக உயர்த்தியது.

“உன்னிடம் உள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு” (மத். 19:21) என்ற இயேசுவின் வார்த்தை மக்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அந்தோணியாரை புனிதராக மாற்றியது.

ஆகவேதான் கடவுளின் வார்த்தை இரு பக்கம்; கூர்மையானது, எளிதில் வெட்டக் கூடியது என்று சொல்கின்றோம். யார் எல்லாம் கடவுளின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுகிறார்களோ அவர்களை ஆண்டவர் உயர்த்துகிறார். அவர்கள் கற்பாறையின் மீது வீடுகட்டியதற்கு சமமாக கருதப்படுகிறார்

ஜெபம்:. வார்த்தையான இறைவா, வாஞ்சையோடு உம் பாதம் வந்துள்ளோம். எங்கள் வாழ்விலும் உம் வார்த்தையை மனதில் வைத்து அந்த வெளிச்சத்தில் வாழ்ந்து தூய உள்ளத்தோடு உம்மை காணும் வரம் தாரும். ஆமென்.