இப்போது இல்லாதது என்ன?
நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உன்னிடம் நான் காணும் குறையாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை - திருவெளிப்பாடு 2:3. நம்மில் பலர் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொண்டு கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம். ஆலயத்துக்கு செல்கிறோம். ஜெபிக்கிறோம். ஆனால் தொடக்கத்தில் நமக்கு கடவுளிடம் இருந்த அன்பு குறைந்துவிட்டது.
வீட்டு வேலை, ஆபீஸ் வேலை போக மீதமிருக்கும் நேரத்தை அதிகமாக தொலைக்காட்சி தொடர் பார்ப்பதிலும், காணொளி(vedio), வலையொளி (youtube) பார்ப்பதிலேயே செலவிட்டு விடுகிறோம். பிறகு எப்படி நாம் முன் போல கடவுளுக்கு அதிக நேரம் செலவிட முடியும். நம்முடைய பாவங்கள் நம்முடைய உறவையும், குடும்ப சமாதானத்தையும் உடைக்கிறது. மன அமைதியைக் கெடுத்து, சந்தோஷத்தை அகற்றுகிறது. கணவன் மனைவிக்குச் செய்கிற துரோகங்களும், மனைவி கணவனுக்குச் செய்கிற துரோகங்களும் பெரிய பிரச்சனைகளையும், பிரிவுகளையும், கண்ணீரையும் கொண்டு வருகின்றன. பின் எப்படி நாம் ஆண்டவரிடம் அதே அன்போடு இருக்க முடியும்.
நமக்கு கடவுளிடம் முன்பு இருந்த அன்பு இல்லை என்று ஆண்டவர் சொல்கிறார். ஆண்டவர் தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே அன்பை எதிர்பார்க்கிறார். எனக்கு உன் குழந்தை உள்ளத்து அன்பை தருவாயா என்று கேட்கிறார். எனக்கு உன் அன்பு கிடைக்காத குறை ஒன்று உண்டு என்று ஆண்டவர் சொல்கிறார். நாம் சிலுவையை நோக்கிப்பார்ப்போம். அழுவோம். பாவ மன்னிப்பு கேட்போம். நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு, எல்லா கொள்ளை நோய்களும் அழிக்கப்பட்டு புது வாழ்வைப் பெறுவோம்.
செபம்: ஆண்டவரே, உலக மாயையில் மயங்கி உம்மை விட்டு தூரம் போனேன். உமக்கு என் அன்பைக் தர மறந்தேன். என்னை மன்னியும் இயேசுவே. இந்த ஒரு முறை என்னை மன்னியும். இனிமேல் உம்மை விட்டு போகமாட்டேன். ஆவலுடன் உம் பாதம் காத்திருப்பேன். தொடக்கத்தில் இருந்த அதே அன்போடு உம்மை தேடும் வரம் தாரும். உம்முடைய இரக்கங்களால் என்னை மீண்டும் சேர்த்து கொள்ளும். ஆமென்.