அவர் ஆசீவதிக்கிற கடவுள்

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.

தொடக்க நூல் 2-8.

ஆண்டவர் முதலில் மனிதனை படைக்கவில்லை.  அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் படைத்து , அவன் குறையின்றி வாழ வசதி செய்து விட்டு,  எல்லாம் நல்லது என்று கண்ட பிறகுதான் மனிதனை படைத்தார். ஒளி, காற்று, நீர், உணவு, உறைவிடம், விலங்குகள் , பறவைகள்,மரம், செடி கொடிகள்,   மன நிறைவை தரும் தோட்டம், உடலை வருடும் தென்றல், புல் பூண்டுகளை வளர்க்கும் பனி, அழகான பகல், அமைதியான இரவு,   நாள், மாதம்,  வருடம், பருவ காலங்கள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார். அவன் தனிமையில் இருக்க கூடாது என ஒரு உறவையும் படைத்து  துணையாக கொடுத்தார்.  

அவர் ஆசீவதிக்கிற கடவுள். தேவை என்ன என அறிந்து முன்னதாகவே செய்கிற தந்தை. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிற அன்பு அப்பா.  நம்மை தனிமையில் விடாது காக்கும் இறைவன். நலமானதையே செய்யும் நல்ல  கடவுள்.  இன்று நமக்கும் நல்லது செய்வார். நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்.

 

  அன்பு இறைவா, எனக்கென வைத்திருப்பதை எனக்கென செய்யும் அன்பு தந்தையே உமக்கு நன்றி. இன்றைய நாளில் என்னுடைய ,  என்னை சார்ந்தவர்களுடைய , தேவைகளை நிறைவேற்றும். எங்களை தீமைக்கு விலக்கி காத்தருளும். ஆமென்.