அமைதியோடு

மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார் - லூக்கா 15:21. மனம் திருந்திய மைந்தன் தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையிடம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டான் . தன் தந்தை வீட்டில் என்ன வேலை கொடுத்தாலும் செய்ய தாராக இருந்தான். மனதில் அமைதியோடு வாழ விரும்பினான். ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு இருப்பார். ஆனால் நாம்  ஆண்டவரோடு இருக்கிறோமா என்பதை எப்படி அறிந்து கொள்ள சில வழிகள்.

1. நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற உறுதி. சக்கேயு ஆண்டவரால் அழைக்கப்பட்ட உடன் தான் தவறான வழியில் சம்பாதித்தது எல்லாவற்றையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன் என்கிறார் . தன் பாவம் மன்னிக்கபடுவதற்கான உறுதியை தேடுகிறார்.

2. நாம் தவறு செய்தால் அந்த தவறு நம்மை உணர்த்தும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார்.  அவருக்கு தான் செய்தது தவறு என அவரது மனம் உணர வைத்தது. மனம் கசந்து அழுது மன்னிப்பு கேட்டார்.

3. ஆண்டவரை பார்க்க வேண்டும் அவரோடு பேச  வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் இருக்கும். நள்ளிரவில் நேரத்தில் அதுவும் சிறைச்சாலையில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். இறைவனை தேடி அவரோடு பேசினார்கள்.

4. துன்பமாயிருந்தாலும் சந்தோசமயிருந்தாலும் எந்த வேளையிலும் நம் சிந்தனை சொல் செயல் அனைத்துமே  ஆண்டவரை சார்ந்ததாகவே இருக்கும். ஸ்தேவானை கொல்லுவதற்காக கொதித்தெழுந்து  பற்களை நறநறவெனக் அடித்து கொண்டு நிற்கும் உயிர் போகிற நேரத்தில் , ஸ்தேவனோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, பரலோக காட்சியை கண்டு,“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.

5. அசைக்க முடியாத நம்பிக்கை நம்மில் இருக்கும். ஆபிரகாம் முதிர் வயதில் தனக்கு கடவுள் கொடுத்த ஒரே மகனையும் பலியிட துணிந்து ஆண்டவருடைய வார்த்தைக்கு மறு பேச்சின்றி கீழ் படிந்தது அவர் ஆண்டவர் மீது வைத்த நம்பிக்கை. 

6. எது நடந்தாலும் இதுவும் கடந்து போகும் என்னும் ஒரு  நிறைவான அமைதி. யோபு தன் சொத்து சுகங்களை  இழந்து, பிள்ளைகளையும் இழந்து, உடல் நலத்தை இழந்து நிற்கிறார். நண்பர்களும், மனைவியும் அவரிடம் வாக்கு வாதம் செய்கிறார்கள். அந்த நிலையிலும் கடவுள் தந்தார், கடவுள் எடுத்து கொண்டார் என்று வாழ்ந்தார். நாம் ஆண்டவரோடு இருக்கிறோமா? சிந்திப்போம்.

ஜெபம்: ஆண்டவரே நாங்கள் உம் மீது நம்பிக்கை வைத்து, எல்லாவற்றையும் நீர் பார்த்து கொள்வீர் என்று நிறைவான அமைதியோடு வாழ வரம் தாரும். எப்போதும் உம்மை முன்னிலை படுத்தி வாழ அருள்தாரும். தவறிலும் கேட்டிலும் விழாத படி எங்களை காத்தருளும். ஆமென்.