அதிகமாக ஜெபி
என் மக்களே! நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்; கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள்- எசாயா 26:20. விவிலியத்தில் சில மனிதர்கள் தனிமை படுத்தப்பட்டு அவர்கள் உயிர் சாவினின்று காக்கப்பட்டத்தை இன்று நாம் பார்க்கலாம்.
1. நோவாவும் அவர் குடும்பத்தினரும் பேழைக்குள் வைத்து தனிமை படுத்தப்பட்டதன் மூலமாக கடவுள் அந்த குடும்பத்தை பேரழிவினின்று காத்தார். நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார். அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும், உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன. கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார் (தொடக்க நூல் 7:13-16).
2. இஸ்ரேல் இன குடும்பங்கள் வீட்டு வாயில்களில் ஆட்டுகுட்டியின் இரத்தத்தை பூசி தனிமை படுத்தபட்டதால் கொடும் கொள்ளை நோயிலிருந்து அக்குடும்பங்கள் காப்பற்றபட்டன. இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக்கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது (விடுதலைப் பயணம் 12-13).
3. விலைமாது இராகாபும் அவர் தந்தையின் வீட்டாரும் அவரைச் சார்ந்த அனைவரும் வீட்டின் ஜன்னலில் சிவப்பு கயிறை கட்டி தனிமை படுத்தியதின் மூலம் காப்பற்றப்பட்டனர். நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும். உம் வீட்டிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால் உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்ததால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும் (யோசுவா 2:18-19).
இவர்கள் எல்லோரும் தங்கள் தனிமைபடுத்தலின் போது ஆண்டவரை தேடினார்கள். இது கடவுளால் நடந்த நிகழ்ச்சி. இப்போது நாமும் தனிமை படுத்தப்பட்டிருக்கிறோம். சகோதரமே, நாமும் முன்னை விட அதிகமாக ஜெபிப்போம். ஆண்டவரின் ஆசீர் பெறுவோம்.
ஜெபம்: ஆண்டவரே, இந்த தனிமை படுத்தல் நீர் அனுமதித்தது. நாங்கள் இதற்கு கீழ்படிகிறோம். ஆண்டவரே இந்த காலக்கட்டத்தில் எங்களோடு இருந்து எங்கள் அன்றாட தேவைகளை சந்தித்து நாங்கள் ஒரு அமைதியான, நோயற்ற, ஆசீர்வாதமான வாழ்வை விரைவில் அனுபவிக்க அருள் தாரும். ஆமென்.