மனிதநிலையிலிருந்து புனிதநிலை!
நண்பர் ஒருவர் தம் வீட்டின் தளம் உடைபடுவதற்கு அங்கு வளர்ந்துகொண்டிருக்கும் மூங்கில் மரம்தான் என்று உணர்ந்து, வீட்டில் இருந்த அந்த மூங்கில் மரத்தை அழிக்க வேண்டும் என முடிவுசெய்தார். உடனடியாகச் சென்று அந்த மூங்கில் மரம் இடத்தை நன்றாக தோண்டி வெட்டி எடுத்தார். மரம் மீண்டும் வளரக்கூடாது என்பதற்காக அந்தக் குழியினுள் கொல்லி மருந்தை இட்டு தீ வைத்தார். அத்தோடு விட்டுவிடாமல் அந்த இடத்தை சிமென்டால் பூசி, அந்த இடம் இருந்ததற்கான அடையாளமே இல்லமால் செய்துவிட்டார்.
இரண்டாண்டுகள் கழிந்த நிலையில், அந்த சிமெண்ட் தளத்தை உடைத்துக் கொண்டு மூங்கில் மரமானது வெளியே எட்டிப் பார்த்தது. ஏனென்றால் மூங்கில் மரமானது எவ்வளவு வெளியே வளர்கின்றதோ அவ்வளவு நிலத்தின் உள்ளே செல்லும். எனவே என்பார்கள். அது ஆழமாக வேரூன்றியிருக்கும் மூங்கில் மரத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது.
அதுபோல, நம்முடைய வாழ்வில் நமக்குக் கொடுக்கப்பட்ட அபார சக்தியை சரியான இலக்கோடு, கடவுளின் திட்டத்திற்கு ஏற்றவாறு நெறிப்படுத்த வேண்டும். அதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் (choices) பாதைகளும் சரியானதாக இருக்கவேண்டும். அப்படி அமைகின்றபோது நாம் மனித நிலையிலிருந்து புனித நிலைக்கு கடந்துசெல்வது சாத்தியமாகின்றது.
அதுபோல படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அபார சக்தியால் நிரப்பப்பட்டுள்ளனர். அது வெளிப்பட்டே ஆக வேண்டும். எவர் ஒருவர் தம்முடைய பாதையைக் சரியாகத் தேர்ந்தெடுத்துத் தன்னைத் தயாரித்திருக்கின்றாரோ, அதற்கேற்றார்போல அவருடைய வாழ்வும் அமையும்.
மூங்கில் மரம் தன்னுடைய இலக்கு எப்படி மேலே உயர்கின்றதோ அதேபோல நிலத்தின் உள்ளே ஆழமாகச் செல்லவேண்டும் என்பதற்கு ஏற்றார்போல வளர்;ந்தது. அந்த சக்தியை யாராலும் தடுக்க இயலவில்லை. கடவுள் எதற்காக அழைத்திருக்கின்றாரோ, அதற்கு ஏற்றாற்போல வாழ்வதால் புனிதம் மலர்கின்றது. புதிய சக்தியானது வாழ்வுமுறையானது அவர்கள் வழியாக உலகுக்குக் கொடுக்கப்படுகின்றது.
கபிரியேல் ரோஸெட்டி என்னும் உலகப் புகழ்பெற்ற கவிஞர், ஓவியர். அவர் தன் மனைவியை மிகவும் அன்புசெய்தார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் அவருடைய மனைவி இறந்துவிட, அவருடைய கவிதைகளையெல்லாம் தன் மனைவியோடு அடக்கம் செய்தார். ஆனால் கடவுள் கொடுத்த படைக்கும் ஆற்றலை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே ஆண்டுகள் கடந்தபோது அதிகாரிகளின் அனுமதியுடன் தன் மனைவியின் கல்லறையை தோண்டி தன்னுடைய படைப்புகளை எடுத்து அவற்றை வெளியிட்டார்;. அந்த படைப்புகள்தான் 1870-ஆம் ஆண்டு அவரை உலகுக்கு காண்பித்தது.
வாழ்வின் ஒரு இலக்கோடு மனுடத்தை வளப்படுத்த கடவுள் நம் அனைவருக்கும் மாபெரும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து அதற்கான விருப்பதேடலில் ஈடுபடும்போது சாதாரண மனித நிலையை நம்மால் கடந்துசெல்ல முடியும்.
புனிதர் என்பவர் ஒரே இலக்கையே விரும்ப முடிந்தவர் (A saint is someone who can will one thing) என்பார் சோரன் கீர்க்கேகார்டு. வாழ்வின் தெளிவான இலக்கை, கடவுளின் திட்டத்தின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்வை மலரச் செய்யக்கூடியதாக கொண்டு பயணிப்பவர்கள் புனிதத்தை அடைகின்றார்கள்.
இந்த ஒரே நிலையை நோக்கியப் பயணத்தில் நாம் பலவற்றை தியாகம் செய்யவேண்டும். இடைக்கால தத்துவங்கள் குறிப்பிடுவதுபோல ஒவ்வொரு விருப்பத் தேர்வும் ஒராயிரம் துறத்தலுக்குச் சமம் (Every choice is a thousand renunciations).
அப் பயணத்தில் நாம் தேர்வு செய்யும் பாதையும் முடிவுகளும் பலவற்றை துறப்பதற்கு நம்மை நிர்பந்திக்கும். ஆனால் அனைத்தும் நாம் விரும்பாததோ அல்லது நமக்கு தேவையற்றதோ அல்ல் மாறாக நம்முடைய விருப்பத்தேர்வின் நிமித்தம் அவற்றை விட்டுவிடவேண்டியது கட்டாயம் ஆகின்றது. அப்படி செய்தவர்கள் மட்டுமே புனித நிலைக்குக் கடந்துச் சென்றிருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் குடும்பச் செபம் செய்யவேண்டுமென்றால் நாம் டிவி பார்ப்பது போன்ற பல நமக்குப் பிடித்த விசயங்களை துறக்கவேண்டும்.
விவிலியத்தில் நாம் வாசித்து அனுபவிக்கும் நீதித் தலைவர்கள், இறைவாக்கினர்கள், திருத்தூதர்கள், இயேசுவின் சீடர்கள், தொடக்கக்கால கிறிஸ்தவர்கள், புனிதர்கள் அனைவரும் இத்தகைய நிலையை சந்தித்தார்கள். ஆனால் அவர்கள் ஒரே இலக்கோடு பயணித்தார்கள்.
இப்பொழுது புனித நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள கொல்கத்தா நகர் புனித தெரசாவின் வாழ்வும் இதைத்தான் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. வாழ்வில் ஓரே இலக்குதான் - ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காண்பது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பாதைகள் மிகவும் கடினமானதாகவும் ஏற்றுக்கொள்ள இயலாததாகவும் இருந்தபோதிலும் அவர் துணிந்தார். தமக்கு மிகவும் தேவையான விரும்பிய பலவற்றை அவர் இழக்க நேர்ந்தது. இருந்தபோதிலும் அவற்றை இழந்தார், துறந்தார், மனிதநிலையிலிருந்து புனிதநிலைக்கு கடந்தார்.
நாமும் நம்மை கடவுளின் திட்டத்திற்கு அர்ப்பணிப்போம். ஒரே இலக்கோட பயணிப்போம். நம்முடைய செயல்களைக் கண்டு இறைவன் மகிழவும், மனிட சமூகமும் அகமகிழும் படியாகவும் வாழ்வோம். மனிதநிலையிலிருந்து புனிதநிலைக்கான கடத்தலைச் சாத்தியமாக்குவோம்.