இன்றாவது விழித்துக்கொள்! | Infant Shiny


இந்திய இளைய சமுதாயமே 
இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா?
உனது சிறகுகளுக்கு பலம் உண்டு  
சுமைகளை சுகமாக்கும் திறன் உண்டு
நடுக்கடலில் நங்கூரமிட்டாலும்
புரட்டிப் போடும் ஆற்றல்
புயலே உனக்கு என்றும் உண்டு

இந்திய இளைய சமுதாயமே
இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா?
எல்லாரும் வாசிக்க வசதியாக
திறந்து இருக்கிறது
இந்தப் பிரபஞ்ச புத்தகம்..வா! ...உன்
கண்களுக்கும்..காதுகளுக்கும்
விருந்து வை! இயற்கையை
நேசிப்பவனாலேயே....
இறைவனையும் நேசிக்க முடியும்
வசந்தத்தின் வாசலிலேயே நீ
எத்தனை காலம் நீ தவமிருக்க முடியும்?
இளமை உன் தோள்களில்
இருக்கும் போதே
இந்திய தேசத்திற்கு ஏதாவது செய்து விடு!

இது அறிவு சேகரிக்கும் பருவம்
ஆற்றலை நரம்புகளில் முறுக்கேற்றும் பருவம்
ஒளிபடைத்த கண்ணும்
உறுதி கொண்ட நெஞ்சும்... நீ 
இந்தியத் தாயிடமிருந்து பெற்ற செல்வம்

உன்னுடைய வாழ்க்கை என்பது
உனக்குப் பிறகும்.....எவரும் ...
இட்டு நிரப்ப முடியாததாக
இருக்கட்டும். நீ
பூமிக்கு கீழே புதை 
பொருளாகி விடக்கூடாது
விதை பொருளாக வேண்டும்
இதுவரை நீ முற்றத்தில் 
முகம் காட்டியது போதும்
இனி... முகடுகளில் தலை காட்டு
முப்பது கோடி ஜனங்களில் 
உனக்கு பின்னால் ஒளிவட்டத்தை
ஏற்படுத்து!
எழுந்து நில்! நிமிர்ந்து நில்!
நேற்றை போல் இன்றும் இல்லை.
நாளை என்பதே உன் எல்லை....
காற்றும் கடலும் மலையும்
பாய்ந்திடும் நதியும்...
நதி இல்லா பாலைவனங்களும்
பச்சை பசும் புல் வெளிகளும்  
பரந்து விரிந்த பிரபஞ்சமும் 
என்றும் உன் பெயரை எதிரொலிக்கும் 
இந்திய இளைய சமுதாயமே..... 
இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா? 
இன்றே நல்ல நாள்!
இன்றாவது விழித்துக்கொள்! 
புறப்பட்டு விட்டால் 
உன் பெயர் இனி 
புயல் என்றே இருக்கட்டும்.

-இன்ஃபன்ட் ஷைனி

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,

ஆசிரியர்,

இருக்கிறவர் நாமே

stellaruby1950@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்

Add new comment

1 + 1 =