குரலை கேட்க

கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார் - யோவான் 11:39. இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். ஆம் நம்மையும் இயேசு அழைக்கிறார். அதற்கு முன்பாக இயேசுவின் குரலை கேட்க தடையாக இருக்கும் பொறாமை, கோபம், கசப்பு, மனத்தாங்கல், ஆணவம், தலைக்கனம், பேராசை, சோம்பல், காமம், தற்பெருமை போன்ற கல்லை அகற்ற வேண்டும். இந்த கற்களை நாம் அகற்றவில்லை என்றால் நம் ஆன்மா அந்த பாவ படுகுழிக்குள் இருந்து நாற்றம் எடுக்க தொடங்கிவிடும். 

நாம் ஆண்டவரின் குரலை கேட்க தடையாகவிருக்கும் அனைத்தையும் நம் வாழ்வில் அகற்றுவோம். நம் ஆண்டவர் இருகரம் விரித்தவராய் நமக்காக காத்திருக்கிறார். உனக்காக என்னையே தரும் அளவுக்கு இவ்வளவு உன்னை அன்பு செய்தேன். நீ என் அழைப்பை ஏற்று எழுந்து வரமாட்டாயா மகனே! மகளே! இன்றே செவி மடுப்போம். தாவீது அரசன் தடையாக இருந்ததை அறிந்து ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுத்தார். மகிமையான வாழ்வை கண்டார்.  

ஜெபம்: ஆண்டவரே, நாங்களும் பாவத்தினால் செத்தவர்களாக வாழ்கிறோம். எங்களுக்கு தடையாகவுள்ள பாவம்  எது என்பதை உணர்ந்து அதை அப்புறப்படுத்தி, உம் குரலுக்கு செவி கொடுத்து, உம் அழைப்பை ஏற்று வாழ ஆவியானவரின் அருள் தாரும். ஆமென்.