மணமகனான இயேசுவின் உடனிருப்பில் மணமகளாக மகிழ்வுறுவோம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
06 ஜூலை 2024
பொதுக்காலம் 13 ஆம் வாரம் - சனி
ஆமோஸ் 9: 11-15
மத்தேயு 9: 14-17
மணமகனான இயேசுவின் உடனிருப்பில் மணமகளாக மகிழ்வுறுவோம்!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் நம்பிக்கையூட்டும் விடயங்களையொட்டி பேசுகின்றன. அழிவு மற்றும் பேரழிவு பற்றிய அனைத்து இறைவாக்குகளைத் தொடர்ந்து, ஆமோஸ் இஸ்ரேயேலின் மறுசீரமைப்பின் காலத்தைப் பற்றி பேசுகிறார். இஸ்ரயேலின் வீழ்ச்சிக்குப் பின் வரிவிருக்கும் எழுச்சி பற்றியும், மீண்டும் எழுப்பப்படவுள்ள நகரங்கள் மற்றும் ஏராளமான அறுவடைகள் பற்றிய வாக்குறுதிகளுடன் ஆமோஸ் தனது இறைவாக்குரைத்தலை முடித்துக்கொள்கிறார்.
மக்கள் கடவுளுடனான தங்கள் உறவைப் புதுப்பிக்கும்போது கடவுள் அவரது வாக்குறுதிகளை புதுப்பிப்பார் என்று அவர் இஸ்ரேல் மக்களுக்கு நினைவூட்டுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளிக்கும் தெய்வீக வாக்குறுதிகளுக்குக் கடவுள் எப்போதும் உண்மையாக இருக்கிறார் என்றும், வழிதவறிய மக்கள் மீண்டும் கடவுளிடம் திரும்பி, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழி தங்கள் உறவைப் புதுப்பிக்கும்போது அனைத்தும் மீட்புப்பெறும் என்று கூறுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் 12 சீடர்கள் திருமுழுக்கு யோவானின் சீடர்களைப்போலும், பரிசேயர்கள் போலும் நோன்பு இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இந்த குறைசாட்டிற்கு இயேசு பதில் அளிக்கிறார். இயேசு தம் சீடர்களுடன் இருக்கும் காலமானது மகிழ்ச்சிமிகு காலம் என்றும், அவர் தன்னை ஒரு மணமகனோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு மணமகன் எப்படி மணமகளுக்கு மட்டுமல்ல, திருமண விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவாரோ, அவ்வாறே தன்னுடன் இருக்கும் காலத்தில் சீடர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
பின்னர் அவர் ‘எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை, ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்’ என்றும், பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை, அப்படி ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும் என்றும் உவமையாக அறிவுறுத்துகிறார். இவ்வாறு, கடவுளைப் பற்றிய பழைய புரிதலுடனும், கடவுளை வழிபடும் பழங்கால பழக்கவழக்கங்களுடனும், இயேசுவின் இறையரசையொட்டிய நற்செய்திகள் முழுமையாக ஏற்புடையதாகாது என்பதை எடுத்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், இயேசு இருவகை உவமைகளைப் பயன்படுத்தி பழைய படிப்பினைக்கும் புதிய படிப்பினைக்குமான வேறுபாட்டை எடுத்துரைக்கிறார். அதாதவது, மோசே மற்றும் இறைவாக்கினர்கள் மூலம் வழங்கப்பட்ட முற்கால சட்டத்தை ஒருவர் அனுசரித்து வாழ்ந்தாலும், இயேசுவின் புதிய அருள்மிகு படிப்பினையான புதிய படிப்பினை மிகவும் வித்தியாசமானது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார் ஆண்டவர்.
பரிசேயர்களால் கற்பிக்கப்பட்ட பல சட்ட நடைமுறைகள் மோசே வழங்கிய சட்டங்களுக்கு உடன்பட்டில்லை. அவர்கள் சட்டத்தின் அர்த்தத்தில் இருந்து விலகி, அவர்களுக்குச் சாதகமான நடைமுறை சட்டங்களாக மாற்றினர். எனவே, இயேசுவின் புதிய படிப்பினையை நடைமுறையில் இருக்கும் பழையச் சட்டங்களோடு இணைத்துப்பார்க்க முடியாது. அப்படி செய்தால் அவை பயனற்றதாகிவிடும். மேலும், கடவுள் அக்காலத்தில் இஸ்ரயேலரின் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே வழி பல கட்டளையை அளித்திருந்தார் (மாற்கு 10:5). அவை கடவுளின் அன்பு உள்ளத்தின், இரக்கத்தின் உண்மை வெளிப்பாடு அல்ல.
இயேசுவோ கடவுளின் அன்பை வெளிப்படுத்திய ஓர் அருளடையாளம். அவரது படிப்பினை முற்றிலும் மனமாற்றத்திற்குரியது. எனவே, இயேசுவின் புதிய படிப்பினையைத் தழுவுவதன் மூலம், நாம் கிறிஸ்துவில் முற்றிலும் புதிய படைப்பாக மாறுகிறோம் என்பதே உண்மை. புதிய படைப்பு என்பதுதான் இயேசுவின் நோக்கம். “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ 21:5) என்கிறார் ஆண்டவர்.
எனவே, நோன்பு நோற்பது சட்டத்தின் வற்புறுத்தலாகவும் வெளிப்புற அடையாளாகமாகவும் இருத்தல் கூடாது. ஆண்டவர் ஒருவரின் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதால் (நீ.மொ 21:2) நமது உள்ளத்தூய்மையே இன்றியமையாதது.
சில வேளைகளில், ஆண்டவர் இயேசு நோன்புக்கு எதிராகக் கருத்துரைப்பதாகவும் நாம் நம்பக்கூடும். அவ்வாறு எண்ண வழியில்லை. எனெனில் அவரும் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் (மத் 4:2); பேய்பிடித்த சிறுவனைக் குணப்படுத்தும்போது, “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும், நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” என்றுரைத்ததை நினைவில்கொள்ள வேண்டும்.
இன்றும் திருஅவை தவக்காலத்தில் நோன்பு, தர்மம் மற்றும் இறைவேண்டல்களை ஆரதரிக்கிறது. ஆனால் ஏன் ? எதற்கு என்ற காரணங்களை அறிந்து நோன்பிருக்க வேண்டும்.
ஆகவே, பழைய ஏற்பாட்டின் போதனைகேற்ப நோன்பிருக்கும் யோவானின் சீடர்களுக்கு இயேசு அறிவுறுத்தியதைப் போல இன்று நமக்கும் படிப்பிக்கிறார்.
ஆமோஸ் கூறுதைப்போல் கடவுளிடம் திரும்பி வருதலே அவசியமாகும். கடவுளிடம் திரும்பி வரும் எவரையும் அவர் ஆசீர்வதிக்கிறார். எனவே, வெறும் மதச் சடங்குகளையும் வாழ்க்கைச் சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் பற்றிக் கொண்டும், பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டும் காலத்தைக் கழிப்பதால் புதுவாழ்வுக்கு வழி பிறக்காது. நம்மில் சிந்தனை புரட்சி ஏற்பட வேண்டும்.
இறைவேண்டல்.
‘எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை’ என்று, புதிய வாழ்வுக்கு அழைக்கும் ஆண்டவரே, எம்மில் நீர் விரும்பும் புதுவாழ்வுக்கான சிந்தனை புரட்சி மிளிர அருள்புரிவீராக. ஆமென்
.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452