நல்லதைச் செய்து வல்லதை வெல்வோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
நம்மிடம் உள்ள தேவையில்லாதவைகளை அகற்றி நல்லவற்றை மட்டுமே நமதாக்கி வாழ்வோம்.
நாம் ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை சந்திக்கின்றோம். அந்த பிரச்சினைகளில் எவையெல்லாம் பொறாமையின் காரணமாக வருகின்றதோ அந்தப் பிரச்சினைகள் நம்மை விட்டு ஒருபோதும் விலகவே விலகாது. ஏனென்றால் பொறாமைக்கு முடிவே கிடையாது. பொறாமை என்ற குணம் நம் எல்லோரிடத்திலும் இருக்கின்றது. பிறரின் வாழ்வை, வளர்ச்சியை, மகிழ்ச்சியைப் பார்க்கும்போது நம்மில் பொறாமை குணம் மேலோங்கி நிற்பது இயற்கைதான். அவ்வாறு நம் மனதில் எழுகின்ற பொறாமைக் குரலுக்கு செவிசாய்த்து, அந்தக் குரல் சொல்வது சரிதான் என்று எண்ண ஆரம்பித்து விட்டோம் என்றால் நம் வாழ்வை நாமே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்றுதான் அர்த்தம். அத்தகைய நமது அழிவை நாமே உருவாக்கிக் கொள்வதை தவிர்த்து வாழ்வோம். பொறாமை உள்ளம் கொண்ட ஒரு மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சமே நல்லது எதையும் கொடுக்காது என்று ஞானிகள் கூறுகின்றார்கள். இந்தப் பிரபஞ்சம் அதிர்வலைகளால் இயங்குவதால் மனிதனின் அதிர்வலைகளை இந்தப் பிரபஞ்சம் புரிந்துகொண்டு அவர்கள் வெளிப்படுத்துகின்ற அதிர்வலைகளுக்கு ஏற்றாற்போல்தான் அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சம் கொடுக்கிறது என்கின்றார்கள். எனவே பிறரை நம்மோடு ஒப்பிட்டு பொறாமைப்படுவதை நிறுத்தும்போதுதான் நாம் வளர்ச்சி அடைய முடியும் என்பதை புரிந்து கொள்வோம்.
ஓர் ஊழியன் இருந்தான். எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படும் குணம் அவனிடம் இருந்தது. யாரைப் பார்த்தாலும் அவர்களைப் போல் தான் இல்லை என்ற தாழ்வுமனப்பான்மையும் அவனிடம் இருந்தது. நாய்களுக்கு மனிதர்களைவிடக் கேட்கும் சக்தி அதிகம் என்று பேச்சு வாக்கில் யாரோ ஒருவர் அவனிடம் சொல்ல, அட நான் கேவலமாகிவிட்டேனா என்று அவனுக்குள் புதிதாக ஒரு கவலை முளைத்தது. சமயம் கிடைக்குபோதெல்லாம் தனக்குள் புலம்பி தீர்ப்பான். ஒரு நாள் அவன் மந்திரசக்தி கொண்ட ஒரு மரத்தின்கீழ் நின்றபடி தனக்கு மட்டும் நாய்கள் மாதிரி கேட்கும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்க, நாய்களுக்கு இருப்பது மாதிரி உனக்கு கேட்கும் சக்தி உண்டாவதாக என்று மரம் அவனுக்கு வரம் கொடுத்தது. மரம் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப்போன அவன் அதோடு நிற்காமல், நாய்களைவிட அதிகமா கேட்கும் சக்தி எனக்கு வேண்டும் என்று அந்த மரத்திடம் கேட்க அப்படியே ஆகட்டும் என்று அந்த விருட்சம் சொன்னது. அடுத்த நாள் அவன் சந்தோ~மாக ஆபீஸ{க்குள் போனான். தன் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்திருந்த டைப்பிஸ்ட் தன் காதலனுடன் டெலிபோனில் மெல்லிய குரலில் கொஞ்சிக் குலாவிப் பேசுவது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது. இந்தப் பேச்சைக் கேட்டு சட்டென சீ என்று முகம் சுளித்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். இப்படி பல உரையாடல்களைக் கேட்டு அடச்சே என்று வாழ்க்கையை வெறுத்தவன், இந்த மாதிரி கேட்கும் சக்தி எனக்கு வேண்டவே வேண்டாம். என்று முடிவெடுத்து, அந்த நள்ளிரவு நேரத்திலேயே வரம் கொடுத்த மரத்தைத் தேடி ஓட ஆரம்பித்தானாம். நாமும் இப்படித்தான் பலவற்றிற்கு ஆசைப்பட்டு, மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு நம்மை அழித்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய உணர்விலிருந்து விடுபட்டு நம்மைக் காத்துக் கொள்ள முயல்வோம்.